மட்டக்களப்பு: அதிகாரப்பகிர்வின் மூலம் எமது தமிழ் பேசும் மக்களான தமிழரும், முஸ்லிம்களும் தங்களது உரிமைகளை முழுமையாக பெறவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்ட கோரிக்கையினை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவ்வாறு தமிழரும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் முழுமையான அதிகாரங்களைப் பெறமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணைத் திறப்பு விழா, நேற்றைய தினம் (09) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நாடாளுமன்றம், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழு நிர்ணயிக்கப்பட்டு, அதனுடைய முதல் அமர்வு இடம்பெற்று, இம்மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது.
அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள், கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
பிரேமதாஸ காலத்தில், சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில், மஹிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாண சபை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். அரசியல் சாசன குழு என்பது, பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம்.
இதுபோன்ற நிலையில், மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்துக்குக் கொடுக்க இருக்கிறார்கள்’ எனக் கூறினார்.
Leave a comment