- முகமட் நிஷவ்ஸ்
ஒதுங்கிக் கிடப்பாரடி
ஒரு சேவை செய்யாரடி
வதங்கி வாடுவோர்க்கு
வாழ்வு தர வருவோரை
பேக் ஐடி திறந்து
பீற்றிக் கிழிப்பாரடி
ஆக்கபூர்வ வேலைகளை
அசிங்கம் செய்வாரடி.
தானும் செய்யாரடி
தானாக செய்வோர்க்கு
கேணத் தனமாக
கெடுதல் செய்வாரடி
மானம் போகும் படி
மனங்கள் நோகும் படி
வீணாகக் கதை பரப்பி
விரக்தி தருவாரடி.
அடுத்தவன் பலாய் தேடி
அலைந்து திரிவாரடி
எடுத்த எடுப்பிலேயே
என்னவென்று பாராமல்
தொடுத்து நிற்பாரடி
தொடரான விமர்சனத்தை
கொடுத்த குர்பான் மாடு
கொழுக்கவில்லை என்று சொல்லி
கெடுக்கும் மனிதர்களால்
கெடுகிறது சமூக சேவை.
மற்றவன் கெளரவத்தை
மனதினில் கொள்ளாரடி
கிட்ட வருவதற்கும்
கிடைக்காத தகுதியுள்ளோர்
வெட்டியாய் பொழுதுபோக
விமர்சனம் செய்து விட்டு
கெட்டித்தனம் புரிந்ததாக
கொட்டம் அடிப்பாரடி.
யாராரோ சொன்னவற்றில்
இரண்டொன்றை அறிந்து கொண்டு
பூரணமாய்த் தெரிந்தது போல்
பொங்கி எழுவாரடி
கூறிய கூற்றுக்களில்
குறை காண முடியாதெனில்
வேறு வழிகளிலே
விமர்சனம் செய்வாரடி.
எல்லாத் தாக்கத்துக்கும்
எதிராயும் பெரிதாயும்
உள்ளது தாக்கமென்ற
உண்மையை உணர்ந்து கொண்டு
நல்லதே நாடி நின்று
நாயனை அஞ்சட்டும்.
Leave a comment