மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாக சீர்கேடுகள். நடப்பது என்ன? (ஆய்வறிக்கை)

  • முஹம்மது நியாஸ்

Jamius salam masjid Batticaloa மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகம் தொடர்பில் அண்மைக்காலமாக குறித்த பள்ளிவாயில் மஹல்லாவாசிகளான ஜமாஅத்தார்கள் மற்றும் சந்தாதாரர்களான அந்நகரில் தொழில் புரியக்கூடிய வர்த்தகர்கள் மத்தியில் பாரிய அதிருப்திகள் தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

பள்ளிவாயிலுடைய, வருமானமீட்டக்கூடிய நிலையான சொத்துக்களாக அமைந்திருக்கக்கூடிய காணிகளும் கட்டிடங்களும் தனிநபர் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக அபிரதேச வர்த்தகர்களும் ஜமாஅத்தார்களும் குற்றம் சுமத்திவருகின்றனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள குறித்த பள்ளிவாயிலுக்குச் சொந்தமான ஆறு வியாபார நிலையங்கள், மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் ஒரு வர்த்தக நிறுவன களஞ்சியசாலை என்பவற்றின் மூலமாக மாதாந்த வாடகையாக பெறப்படுகின்ற பெருந்தொகைப்பணத்துக்கான கணக்கறிக்கைகள் கடந்த நான்கு வருடங்களாக பள்ளிவாயில் நிருவாகத்தினால் வெளியிடப்படாமல் தேக்க நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குறித்த வரத்தக நிலையங்களால் வாடகையாக செலுத்தப்படுகின்ற பெருந்தொகைப்பணத்திற்காக இதுகாலவரை பள்ளிவாயிலுடைய உத்தியோகபூர்வமான பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படவில்லையெனவும் அவ்வாடகைப்பணம் தலைமை நிருவாகப்பொறுப்பில் பணியாற்றக்கூடிய தனிநபருடைய தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கே வைப்பிலிடப்படுவதாகவும் அறியவருகிறது.

மாத்திரமன்றி மட்டக்களப்பு நகரில் சின்னலெப்பை வீதியில் அமைந்திருக்கக்கூடிய, 1968ஆம் ஆண்டளவில் இப்பள்ளிவாயிலின் குர்ஆன் மதரஸாவுக்கென பொதுமக்களால் வக்பு செய்யப்பட்ட ஒரு கட்டிடத்தை பள்ளிவாயிலுடைய தலைமை நிருவாகி ஒருவர் தந்திரமான முறையில் அபகரிக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் பள்ளிவாயிலுடைய சாந்தாதாரர்களான வர்த்தகர்களும் மஹல்லாவாசிகளான பிரதேசவாசிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டிட அபகரிப்பு விவகாரம் தொடர்பாக பள்ளிவாயில் மஹல்லாவாசிகள் மற்றும் பிரதேசத்தில் தொழில் புரியக்கூடிய வர்த்தகர்கள் பலரும் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு முஸ்லிம் சமய- பண்பாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

இது தவிர இப்பள்ளிவாயிலுடைய நிலையான சொத்துக்கள் மூலம் பெறப்படுகின்ற வருமான மோசடி பற்றி தேசிய வக்பு சபைக்கு பலவேறு கட்டங்களில் அறிவுறுத்தியும் கூட இதுகாலவரை வக்பு சபையால் இப்பள்ளிவாயிலுடைய நிருவாகரீதியான சீர்கேடுகள் என சந்தேகிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக எதுவித முன்னேடுப்புக்களோ,விசாரணைகளோ நடைபெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்தோடு குறித்த நிருவாகத்தலைவருடைய முறைகேடான நடவடிக்கைகளின் காரணமாக பதினான்கு பேரை உள்ளடக்கிய நிருவாகத்திலிருந்து பத்துப்பேர் தங்களுடைய உறுப்புரிமையை இராஜினாமா செய்துவிட்டதாகவும் அறியக்கிடைக்கிறது.

இவ்வாறு மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாசபை தொடர்பாக அப்பள்ளிவாயிலுடைய மஹல்லாவாசிகளும் பிரதேச வர்த்தகர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குறித்த நிருவாக சபையின் தலைவரை நாம் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் கீழ்க்கண்டவாறு மிகவும் உணர்வுபூர்வமாக தன்னுடைய பதிலை பதிவு செய்தார்.

“கடந்த 1991ஆம் ஆண்டு தொடக்கம் இறையில்லமான இப்பள்ளிவாயிலுடைய பௌதீகரீதியான நலனுக்காக நான் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன். என்னுடைய தனிப்பட்ட சொத்துக்களை விடவும் கரிசனையாக முறையில் இப்பள்ளிவாயிலுடைய சொத்துக்களை நான் பேணிவந்துள்ளேன். இப்பிரதேச வர்த்தகர்களும் மஹல்லாவாசிகளும் என்மீதோ அல்லது என்னோடு சேர்ந்த செயற்படுகின்ற சக நிருவாகிகள் மீதோ முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை. இப்பள்ளிவாயிலுடைய சொத்துக்களையோ அல்லது இப்பள்ளிவாயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெறுகின்ற பணத்தையோ நான் ஒரு சதமேனும் அநியாயமாக அபகரித்தது கிடையாது” என்று கூறினார்.

“அப்படியானால் அந்த வருமானங்களெல்லாம் எவ்வாறு கையாளப்படுகின்றன?” என நாம் கேட்டபோது,

“இப்பள்ளிவாயிலில் பணியாற்றுகின்ற பேஷ் இமாமுக்கு ரூபாய் முப்பதாயிரமும், முஅத்தினுக்கு ரூபாய் இருபத்தியையாயிரமும் மாதாந்த கொடுப்பனவான வழங்கப்படுகிறது. மேலும் மாதாந்த மின்கட்டணமாக சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமாக மாதமொன்றுக்கு செலவிடப்படுகிறது. மிகவும் அண்மையில் வசதியான முறையில் சுகாதாரத்தை பேணும் வகையில் மலசல கூடம் ஒன்றை அமைத்த வகையில் பல இலட்ச ரூபாய்கள் அதற்காக செலவிடப்பட்டுள்ளன. மாத்திரமன்றி இப்பள்ளிவாயிலை இதற்கு முன்னர் நிருவகித்த நிருவாகத்தலைவரான இந்நகரின் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு இப்பள்ளிவாயிலுடைய அபிவிருத்திப்பணிகளின் மூலமாக ஏற்பட்ட கடன்தொகை சுமார் இருபது இலட்சம் வரை செலுத்த வேண்டியிருந்தது. அந்த கடன் தற்போது முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.”

“இதுதவிர இப்பள்ளிவாயிலுடைய பெயரில் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்த காணிகளும் சொத்துக்களும் சட்டவிரோதமான முறையில் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. கடந்த நிருவாகத்தின்போது அவை உரிய முறையில் அடையாளம் காணப்படாமல் இருந்துவந்தன. நான் இந்த நிருவாகத்தை பொறுப்பேற்றது தொடக்கம் இன்று வரைக்கும் அக்காணிகள் அனைத்தையும் அடையாளங்கண்டு அவற்றை மீட்டெடுக்கும் பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட இப்பள்ளிவாயிலுக்குச்சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்களின் பெறுமதி இருபத்தியைந்து கோடியையும் தாண்டியுள்ளது. இன்னும் இப்பள்ளிவாயிலுக்குச்சொந்தமான பல காணிகளும் சொத்துக்களும் மீட்கப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் மீட்டெடுத்து அவற்றுக்கான சட்ட ஆவணங்களை தயாரிக்கின்ற பணியில் நான் என்னுடைய தொழிலை, நேரகால, பொருளாதாரத்தை செலவழித்து மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறேன்.

Jamius salam masjid Batticaloa

“ஆனால் நீங்கள் இந்த கணக்கறிக்கைகள் எதையுமே முறையாகவும் வெளிப்படையாகவும் அறிவிக்கவில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே” என் நாம் வினவியபோது,

“இந்த மட்டக்களப்பு நகர வர்த்தகர்களை பொறுத்தவரைக்கும் மிகவும் வசதியான அதேநேரம் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த வர்த்தகர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். அவ்வாறிருந்தும் கூட இந்நகரத்தில் அமைந்திருக்கக்கூடிய, அனைவராலும் மிகவும் அதிகளவாக பயன்படுத்தப்படக்கூடிய இப்பள்ளிவாயலுக்கு அந்த வர்த்தகர்கள் மூலமாக மாதாந்தம் கிடைக்கப்பெறுகின்ற சந்தா வெறும் நாற்பதாயிரத்தையும் கூட தாண்டுவதில்லை. இத்தனைக்கும் இந்த பள்ளிவாயலுடைய நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் இருநூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் இருக்கின்றன. அந்த சிறு தொகைப்பணத்தை வைத்துக்கொண்டு பேஷ் இமாம் மற்றும் முஅத்தினுடைய மாதாந்த கொடுப்பனவைக்கூட ஈடு செய்யமுடியாதுள்ளது. பள்ளிவாயில் நிருவாகத்தின்மீது மோசடிக்குற்றம் சுமத்துகின்ற இவ்வர்த்தகர்கள் இப்பள்ளிவாயலுடைய பௌதீகவள முன்னேற்றத்தில் செலுத்தக்கூடிய அக்கறையும் பங்களிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அவ்வாறு என்னையும் என்னோடு பணியாற்றுகின்ற சக நிருவாகிகளையும் குற்றம் சுமத்துவதற்கென்றே அலைந்து திரிகின்ற இவர்களுக்கு முறையான கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் எனக்கில்லை” என்று மிகவும் காட்டமான தொனியில் காரசாரமாக தெரிவித்தார்.

“பொதுப்பணி என்பது குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை அத்திவாரமாகக்கொண்டதே, அப்படியிருக்கையில் தலைமைப்பொறுப்பில் பணியாற்றுகின்ற நீங்கள் இந்த செலவீனங்களுக்கான கணக்கறிக்கைகளை மாதாமாதம் விளம்பரப்பலகையில் வெளிப்படையாக வெளியிட்டுவிட்டால் இது தொடர்பான தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தவிர்க்கமுடியுமே” என நாம் கேட்டபோது,

“பள்ளிவாயிலுடைய வருமான, செலவீன விவகாரத்தில் கணக்கறிக்கை கேட்பவர்கள் அதற்குரிய தராதரத்துடன் அதை முறையாக என்னிடம் வந்து கேட்கும்போது நான் சமர்ப்பிப்பேன். ஆனாலும் இவர்கள் என்னை அவமானப்படுத்துவதற்காகவே இவ்வாறான புரளிகளை கிளப்பி அதில் குளிர்காய எண்ணுகிறார்கள். எனவே, இந்த கணக்கறிக்கைகள் தொடர்பாக என்னிடம் மிகவும் துல்லியமான, நேர்த்தியான ஆவணங்கள், பதிவுகள் இருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் கவனம் செலுத்தி விசாரணைக்குட்படுத்தும்போது நான் அவற்றை பகிரங்கமாகவே சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்தார்.

அவதானமும் தொகுப்புரையும்.

இந்த ஆய்வறிக்கையினை பொறுத்தவரைக்கும் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து அவற்றை மக்கள் மன்றத்துக்கு வெளிப்படுத்துகின்ற ஒரு முதற்கட்ட விசாரணை அறிக்கை என்பதால் இதில் இருதரப்பிலுமுள்ள நபர்களினது பெயர் விபரங்களோ புகைப்படங்களோ வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த நிருவாகத்தின்மீதான ஜமாஅத்தார்கள் மற்றும் மஹல்லாவாசிகளுடைய குற்றச்சாட்டுக்களையும் அவற்றுக்கு பள்ளிவாயிலுடைய நிருவாகத்தலைவர் முன்வைத்துள்ள பதில்களையும் அவதானிக்கின்றவேளையில் பள்ளிவாயிலுக்கு சொந்தமான சொத்துக்களையும் அவற்றின் மூலம் பெறப்பட்ட வருமானங்களையும் கையாளுகின்ற விடயத்தில் குறித்த நிருவாகத்தினால் ஒரு “வெளிப்படைத்தன்மை” பேணப்படவில்லை என்பதை தெளிவாகவே உணரமுடிகிறது.

அதேநேரம் குறித்த இப்பள்ளிவாயிலில் கணக்கறிக்கை வெளியிடும்படி கோரிக்கை விடுகின்ற சந்தாதாரர்களிடமும் ஒரு நளினமான உறவுமுறையை கடைப்பிடிக்காமல் அவர்களுடைய நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வந்துள்ள நிருவாகத்தின் காட்டமான நடைமுறையை இங்கே நேரடியாகவே உணர்ந்துகொள்ளமுடிகிறது.

கடந்த காலங்களில் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இவ்விவகாரம் கையாளப்படுவதற்கான அஜந்தாக்கள் இடம்பெற்றபோது குறித்த பள்ளிவாயில் நிருவாகிகளுடைய எதேச்சாதிகாரத்தனமான போக்கு அதற்குத்தடையாக இருந்திருப்பதாகவும் சில உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்திரமன்றி பள்ளிவாயிலுடைய நிருவாகப்பரப்பினுள்ளே சுமார் இருநூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் இயங்கிவருகின்றபோதும் கூட மாதாந்தம் நாற்பதாயிரத்துக்கும் குறைவானதொரு தொகையே சந்தாவாக பெறப்படுகின்ற காரணத்தை வைத்துக்கொண்டு அவ்வர்த்தகர்களிடம் கணக்கறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று வாதிடுகின்ற தலைமை நிருவாகியின் வாதத்தையும் ஏற்கமுடியாது. காரணம் நிருவாக ரீதியான துஷ்பிரயோகம் நடைபெறுவதாக கருதுகின்ற ஒரு நிறுவனத்திற்கு யாருமே பொருளாதாரரீதியாக போதியளவு பங்களிப்பு வழங்கமாட்டார்கள் என்பது உலக நியதியாகும்.

அதேபோன்று கணக்கறிக்கை வெளியிடும்படி கேட்கின்ற நபர்கள் அதற்குரிய தராதரத்துடன் வந்துகேட்கவேண்டும் என்ற குறித்த நிருவாகியின் வாதமும் அடைப்படையற்றதொரு வரட்டுத்தனமான வாதமாகும். ஏனெனில் மாதாந்த சந்தாப்பணம் செலுத்துகின்ற ஒரேயொரு தகுதியே கணக்கறிக்கையினை வெளியிடும்படி நிருவாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு சந்தாதாரருக்கு இருக்கக்கூடிய போதியளவு தகுதியாகும்.

ஒட்டுமொத்தத்தில் இப்பள்ளிவாயிலுடைய நிருவாகரீதியான வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகளையும் இந்த கணக்கறிக்கை தொடர்பில் நடைபெற்றுவருகின்ற மறைமுகமான நடவடிக்கைகளையும் வைத்துப்பார்க்கின்றபோது “இறையில்லத்தை பராமரித்தல்” என்ற ஒரு பொறுப்புமிக்க பணியானது நிருவாகிகள் என்ற பொறுப்புதாரிகளால் அதன் யதார்த்தத்தை சரிவர உணரமுடியாமல் போயிருப்பதன் பாரதூரத்தை வெளிப்படுத்திக்காட்டுகிறது.

எது எவ்வாறாகினும் இந்த நிருவாகரீதியான வெளிப்படைத்தன்மையில் காணப்படுகின்ற இழுபறியானது முழுமையான அங்கீகாரமும் அதிகாரமும் கொண்டதொரு மேல்மட்ட விசாரணை பொறிமுறை ஒன்றை மிகவும் அவசரமாக வேண்டி நிற்கிறது.

இருதரப்பினது வாதங்களையும் அவ்வாதங்களுக்கான முழுமையான, தெளிவான ஆதாரங்களையும் முறைப்படி விசாரித்து பரிசீலிப்பதன் மூலம் இப்பளிவாயிலுடைய வருமானத்தின் பெறுமானத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் கட்டாயத்தையும் தேசிய வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய- பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு உணர்த்தி நிற்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் தேசிய வக்பு சபையும் முஸ்லிம் சமய- பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் உடனடியாக தலையிட்டு இந்த இழுபறிநிலையின் பின்புலத்தையும் உண்மைத்தன்மையினையும் கண்டறிவதற்கு உடனடியாக முன்வரவேண்டும்.

அவ்வாறான ஒரு விசாரணை பொறிமுறையொன்று நடைபெறுகின்ற பட்சத்தில் அந்த விசாரணையின் போது குற்றவாளிகளாக காணப்படுகின்ற நபர்கள் யாராக இருப்பினும் இன்ஷா அழ்ழாஹ், அவர்கள் சமூகத்தின் முன்னால் மிகத்தெளிவான முறையில் அடையாளப்படுத்தப்படுவார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s