கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் விடுவிப்பு

planeகெய்ரோ: கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அலெக்சாண்ட்ராவிலிருந்து புறப்பட்டு கெய்ரோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸிலுள்ள லார்னாகா விமானநிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

எனினும் எம்எஸ் 181 விமானத்தில் இருந்த 81 பேரில், விமான ஊழியர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் இருந்தவர்கள் அதிலிருந்து இறங்கி பேருந்துகளில் ஏறுவதை லார்னாகா விமான நிலையத்திலிருந்து கிடைத்த காணொளிகள் காட்டுகின்றன.

அந்த விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் குண்டுகள் நிறைந்த இடுப்புப்பட்டியை அணிந்திருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.

தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக விமானத்தில் இருந்து பெரும்பான்மையான பயணிகள் வெளியில் விடப்பட்டுவிட்டதாகவும், நான்கு வெளிநாட்டவர்களும் விமானப்பணியாளர்கள் அனைவரும் இன்னமும் விமானத்திலேயே இருப்பதாகவும் எஜிப்ட் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட விமானம் இருக்கும் லார்னகா விமான நிலையம் மூடப்பட்டு, அங்கு செல்லவேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிமருந்து நிரம்பிய அங்கியை தாம் அணிந்திருப்பதாக விமான ஓட்டியிடம் கூறியதாகவும் லார்னகா விமான நிலயத்துக்கு விமானத்தை திசைதிருப்பி பலவந்தமாக அங்கே தரையிறக்கச்செய்ததாகவும் விமான ஓட்டி தெரிவித்ததாக எகிப்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரே ஒரு நபரே இந்த விமானத்தைக் கடத்தியதாகவும் அவரது நிபந்தனைகள் என்ன என்பதை அவர் இன்னமும் தெரிவிக்கவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்திற்குள் இன்னமும் இருக்கும் நான்கு வெளிநாட்டுப்பயணிகளின் அடையாளங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை.

அவர்கள் ஐரோப்பியர்கள் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.
கடத்தலில் ஈடுபட்ட நபர் எகிப்து குடிமகன் என்றும், லிபிய நாட்டவர் என்றும் இருவேறு தகவல்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்தாலும் அவற்றில் எது சரி என்று இன்னமும் அதிகாரப்ப்ர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

Published by

Leave a comment