பெங்களூரு: உலகக் கோப்பை டி 20 போட்டியில் இன்று வங்கதேச அணியை இந்திய அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வென்றது.கடைசி பந்து வரை இந்தப் போட்டியில் எத்தரப்புக்கு வெற்றி என்பது ஊசலாட்டமாகவே இருந்தது.
பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணியினர் தமது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியினர் உறுதி தளராமல் நிதானத்துடன் ஆடி வெற்றியின் விளிம்பு வரை சென்று, கடைசி பந்தில் ஒரு ஓட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், வங்கதேச அணியினரின் ஆட்டம் மிகவும் பாராட்டும்படி இருந்தது என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தோல்வியை அடுத்து, நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வங்கதேச அணி வெளியேறியுள்ளது.
எனினும் இந்தியா அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுமா என்பது அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகே தெரியவரும்.

Leave a comment