- முஹம்மது நியாஸ்
காத்தான்குடி முன்னாள் பட்டின ஆட்சி மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ. அஹ்மத் லெப்பை அவர்கள் “அந்நியர்களால் சுட்டுக் கொல்லப்படவில்லை, அவர் முஸ்லீம்கள் எனச் சொல்லப்படுகின்ற காத்தான்குடிச் சகோதரர்களினால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்” என அவரது புதல்வர், முன்னாள் காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
அவரது பரபரப்புமிக்க இக்கருத்து, காத்தான்குடியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும், 150க்கும் அதிகமான பொது நிறுவனங்களையும் அங்கத்துவமாகக் கொண்டுள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடந்த 2014 மார்ச் 28ம் திகதியன்று வெளியிட்ட ‘அஷ்ஷஹீத் அஹ்மத்லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை அவர்கள் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி இரவு காத்தான்குடி 4ம் குறிச்சியிலுள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இருந்து பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) வழியாக 02ம் குறிச்சியில் இருந்த அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது காத்தான்குடி 03ம் குறிச்சி மில்லத் வித்தியாலய சந்தியில் வைத்து துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை தமிழ் ஆயுதக்குழுக்களே சுட்டுக் கொலை செய்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கை காத்தான்குடி முஸ்லிம்கள் மத்தியில் இத்தனை காலமாக நிலவி வந்துள்ளது.
இந்நிலையிலேயே காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அஹமட்லெப்பை அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களும், சமூகப் பணிகளையும் தொகுத்த மேற்படி நூலை கடந்த 2014 மார்ச் மாதம் 28ம் திகதியன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது.
நூலின் முதற் பிரதியை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், இந்நாள் ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பெற்றுக் கொண்டதுடன், இந்த நிகழ்வில் இவ்வூரின் கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் என அதிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நூலைத் தொகுத்து வெளியிடும் பொருட்டு சம்மேளனத்தினால் 15 புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அஹ்மத் லெப்பை அவர்களின் உடன் பிறந்த சகோதரரான சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஏ. எல். அப்துல் ஜவாத் அவர்களே இந்நூலாக்கக் குழுவின் ஆலோசகராகவும் இருந்து இவ்வரலாற்று நூலை வெளிக்கொணர்வதற்காகவும் அயராதுழைத்தார்.
அன்னாரின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் ‘கவிமணி’ அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்கள் இக்குழுவின் தலைவராகவும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எல்.ஏ. கபூர் செயலாளராகவும் இருந்து இந்நூலைத் தொகுத்தனர்.
இவர்களுடன் பிரதேசத்தின் நுண்ணறிவுடைய புத்திஜீவிகளாகக் கருதப்படும் ஓய்வுபெற்ற பிரதேசக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம். சுபைர், அல்ஹாஜ் எம்.ஐ.ஏ. முஹைதீன், அல்ஹாஜ் எம்.எச்.ஏ. பஷீர் (அஷ்ஹாபியா), அல்ஹாஜ் மௌலவி ஏ.எம். அப்துல் காதர் (பலாஹி), அஷ்ஷஹீத் அஹ்மத்லெப்பை ஹாஜியார் அவர்களின் புதல்வர் அல்ஹாஜ் மர்சூக் அஹ்மத்லெப்பை, முன்னாள் காழி நீதிபதி அல்ஹாஜ் எம்.ரி.எம். காலித், காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். உசனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எச். முஹம்மது, அல்ஹாஜ் எம்.ஐ.எம். முஸ்தபா, அல்ஹாஜ் மௌலவி எஸ்.எச்.எம். றமீஸ் (ஜமாலி), அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் (சீசீ), ஜனாப் எம்.ஐ.எம். தையூப் (தலைவர் ப.நோ.கூ.ச) போன்றவர்களும் பல மாதங்கள் இராப்பகலாக மிக்க ஆராய்வுடனும், அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு இந்த வரலாற்று நூலை வெளிக்கொணர்வதில் பங்காற்றினார்கள்.
இந்த நூலில் 90 ஆவது பக்கம் 3ஆவது பந்தியில் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை, தனது தந்தையைப் படுகொலை செய்தவர்களை அடையாளம் காட்டியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
‘தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இஸ்லாமிய மார்க்கக் கோட்பாடு மீறப்படாமல் பார்த்துக் கொள்வார். உலமாக்களின் ஆலோசனைகளை கேட்பார். மார்க்க அனுஷ்டானங்களில் மிகப்பேணுதலாக இருந்து அல்லாஹ் விடத்தில் மிக நெருக்கமானவராக இருந்தார். இவ்வாறான ஒரு மனிதரை கயவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார்கள். அவர் அந்நியர்களால் சுட்டுக் கொல்லப்படவில்லை. முஸ்லிம் என்று சொல்லப்படுகின்ற எமது ஊர் சகோதரர்களினால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06ஆம் திகதி இரவு 9.20 மணிக்கு அவரது உயிர் பறித்தெடுக்கப்பட்டது…’ இவ்வாறு அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் 91வது பக்கத்தில், அஷ்ஷஹீட் அஹ்மத்லெப்பை அவர்களைச் சுட்டுக் கொலை செய்த கொலையாளிகள் ஆறு பேரும் குறுகிய காலத்தில் ஜே.வி.பி.யினாலும், இலங்கைப் பொலீசாரினாலும், விடுதலைப் புலிகளாலும் கொல்லப்பட்டதாகவும் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:
‘…இவ்வாறு அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அஷ்ஷஹீத் அஹ்மத் லெவ்வையைக் கொன்றவர்களை அல்லாஹ் மிக நீண்ட நாட்கள் வாழ வைக்கவில்லை. குறுகிய காலத்திலேயே அல்லாஹ் அழித்து விட்டான். அஷ்ஷஹீத் அஹ்மத் லெவ்வை மரணித்து மூன்று மாதங்களில் இருந்து ஒன்பது மாதத்திற்குள் அவரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த 6 பேரையும் கொல்வதில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டது. விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டார்கள். இலங்கைப் பொலீசார் சம்பந்தப்பட்டனர். இந்த 6 பேரும் வேறு வேறு சம்பவங்களில் இவ்வாறு கொல்லப்பட்டனர். …. சில வருடங்களின் பின்னர் இவரின் கொலையில் சம்பந்தப்பட்ட எஞ்சியிருந்தவர்களில் மூன்று பேர் சிறுநீரகம் செயலிழந்து மரணித்தார்கள்.’
மேற்கூறப்பட்ட கருத்துக்களின் மூலம், அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் அக்கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ள மொத்தம் ஒன்பது நபர்களைப்பற்றிய விவரங்களை அவரது புதல்வாரன முன்னாள் நகர முதல்வர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பது புலனாகின்றது.
மேலும், இக்கருத்துக்கள் அடங்கிய அவரது கட்டுரையை சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்ட மேற்படி நூலாக்கக் குழுவிலுள்ள முக்கியஸ்தர்களும், அக்குழுவின் ஆலோசகராகத் தொழிற்பட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜவாத் அவர்களும் நன்கு பார்வையிட்டு பரிசீலனை செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நன்கு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அந்நூலில் இடம்பெறச் செய்திருப்பார்கள். ஆகையால் குறித்த கொலையாளிகள் மற்றும் கொலைக்கு உடந்தையானவர்களை அவர்களும் நன்கறிந்தே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், அஷ்ஷஹீட் அஹ்மத்லெப்பை அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களில் ஆறு பேரை ஜே.வி.பி, எல்.ரி.ரி.ஈ மற்றும் இலங்கைப் பொலிசார் வெவ்வேறு சம்பவங்களில் கொன்றதாகவும் அல்ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை தெளிவாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் இந்த மூன்று தரப்பினரும் எவ்வாறான சம்பவங்களில், எந்தெந்த இடங்களில், எந்த வகையில் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கொன்றனர் என்பதையும் அவரும், இந்த சம்மேளன நூலாக்கக் குழுவினரும் அறிந்தே இருப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை.
இலங்கையில் தமிழ் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் கோலோச்சிய காலத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் பல பிரமுகர்களும், பொதுமக்களும் கொலை செய்யப்பட்டனர். பிரதேச செயலாளர் பளீல், சேர்மன் அஹமட்லெப்பை, ஏ.கே. அபூபக்கர், பாறூக் மௌலவி, வெளிச்சம் முகைதீன் என்றழைக்கப்பட்ட எம்.எம்.எம். இப்றாஹீம், கரேஜ் காலிதீன், குட்வின் சந்தியில் கொல்லப்பட்ட லத்தீப் போன்ற பலர் இவ்வாறு மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறான காத்தான்குடிப் பிரதேச முக்கியஸ்தர்களின் படுகொலைகளின் தொடரிலேயே மௌலவி அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்களையும் அவரது அலுவலகத்திற்குள் பிரவேசித்து கொலை செய்வதற்கான முயற்சியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இவர்களில் எவரது கொலைகள், கொலை முயற்சிகள் தொடர்பாகவும் இன்று வரை எந்தத் துப்புக்களும் வெளியாகவில்லை. காத்தான்குடிப் பொலீசாரும், புலனாய்வுப் பிரிவினரும் இக்கொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக சம்பங்கள் நடைபெற்ற வேளைகளில் ஊடகங்களுக்குத் தெரிவித்து வந்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு கொலைகள் தொடர்பாகவும் எத்தகைய கைதுகளோ அல்லது அறிக்கைகளோ பொலிசாரினால்
உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
எல்லாக் கொலைகளுமே, கொல்லப்பட்டவர்களை கபுறுகளில் நல்லடக்கம் செய்தது போல அவை தொடர்பான பொலீசாரின் விசாரணைகளும் கிடப்பிலேயே போடப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் அஷ்ஷஹீட் அஹ்மத்லெப்பை அவர்களின் கொலையில் ஆயுதந்தாங்கிய தமிழ்க்குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றே காத்தான்குடி மக்கள் பரவலாக நம்பியிருந்தனர். அதன் காரணமாகவே அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பையும் அவரை இவ்வூர் முஸ்லிம்களே கொலை செய்தனர் என்பதற்கு முன்னதாக, ‘அவரை அந்நியர்கள் கொலை செய்யவில்லை’ என்ற வாசகத்தின் மூலம் தமிழர்கள் மீது காத்தான்குடி முஸ்லிம்கள் கொண்டுள்ள அபாண்டமான நம்பிக்கையை அகற்ற முற்பட்டிருக்கின்றார்.
எனவே சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூலும், இதில் மர்சூக் அகமட் லெப்பையினால் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்படி கொலையுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களும் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்களின் படுகொலைக்கு காரணர்கள் யார் என்பதைக் கண்டறிய எமக்கும், பொலிஸாருக்கும் கிடைத்திருக்கும் மிகவும் வலுவானதொரு தடயமாகும்.
இதனை சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தி, எமது காத்தமா நகரின் காவலனாக மாத்திரமன்றி முழுக் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு முன்னுதாரண புருஷராகத் திகழ்ந்த சேர்மன் அஹ்மத் லெப்பை அவர்களை ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொலை செய்த அந்த மாபாவிகள் யார் என்பதனை வெளிப்படையாகக் கண்டறிவதற்கு இனியாவது முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக இந்த வரலாற்றுப் புருஷரின் பெருவாழ்வையும், அரும்பணிகளையும் எக்காலமும் எடுத்தியம்பக் கூடிய வகையில் வெளியிடப்பட்ட இந்த நூலின் முதல் பிரதியைக் கையேற்று மேலெழுந்த வாரியாகப் புரட்டிப் பார்த்து விட்டு ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவுமொன்று’ என அலுமாரியில் அடுக்கி வைத்திருக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அந்நூலை மீண்டுமொரு முறைத் தூசிதட்டி வெளியில் எடுத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள 90ஆம், 91ம் பக்கங்களை முழுவதுமாக ஒரு முறைக்கு இருமுறை ஆழமாக வாசித்தறிந்து, அவரது அரசியல் அதிகாரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி, துப்புக்களில்லாமல் துவண்டு சுருண்டு கிடக்கும் பொலீசாரையும், புலனாய்வுப் பிரிவினரையும் தட்டியெழுப்பி உஷார்படுத்தி அஷ்ஷஹீத் அவர்களைக் கொன்றொழித்த கொலையாளிகளை சட்டரீதியாக நமது மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
1990ஆம் ஆண்டுகளில் குருக்கள்மடத்தில் கடத்திக் கொல்லப்பட்ட எமது மக்களின் புதைகுழியைத் தோண்டவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும் இலங்கையில் எந்தவொரு ஆளுந்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதியும் காட்டாத விடாத்தொடரான அக்கறையைக் காட்டி அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டு உலகத்தைக் கலக்கும் நமது மண் கண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பாறூக் மொஹமட் ஷிப்லி அவர்களும் இப்புத்தகத்தை ஒரு துப்பாக வைத்து எமது காத்தான்குடிச் சமூகத்தின் வரலாற்றுச் சொத்தான அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களைத் தீர்த்துக்கட்டிய கொடுங் கொலைஞர்களை அடையாளம் காணத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, இந்நூலை வெளியிட்டதை தமது சம்மேளனத்தின் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் நிர்வாகத்தினரும், அதன் ஒரு டசின் உப குழுக்களினதும் சமுதாய உணர்வு கொண்ட பிரமுகர்களும், அதில் அங்கத்துவம் பெற்றுள்ள 200க்கும் அதிகமான நிறுவனங்களின் நிர்வாகிகளும் எமது காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தினுள் மறைந்து வாழ்ந்து நமது மாபெரும் தலைவரை படுகொலை செய்து மண்ணறைக்குள் மூடவைத்த அக்கொடியோர்களைக் கண்டறிவதில் மெய்யாகவே ஆர்வங்காட்டி சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உயர் அழுத்தங்களைக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
இன்றேல் ‘அந்நியரெவரும் அவரைக் கொலை செய்யவில்லை. முஸ்லிம் என்று சொல்கின்ற எமது சகோதரர்கள்தான் அவரை ஈவு இரக்க மின்றிச் சுட்டுக் கொலை செய்தனர்’ என்ற அன்னாரது அருமை மைந்தரின் பழிச் சொல்லுக்கு இந்த மண்ணில் பிறந்த நாம் அனைவருமே ஆளாகவும், மறுமையில் பதில் சொல்லவும் வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.