மஜீத் ரப்பானி தனது முன்னாள் மனைவியை கொலை செய்யவில்லையா? மறுப்புக்களுக்கான பதிலறிக்கை

  • முஹம்மது நியாஸ்

A-hand-writing-with-a-pen-006[1]குல்லியதுர் ரப்பானியா அறபுக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் MM. அப்துல் மஜீத் ரப்பானியுடைய முன்னாள் மனைவியின் திடீர் மரணம் தொடர்பாக கடந்த 14.03.2016 அன்று srilankanmuslim இணையதளத்திலும் இன்னும் அவதானி மற்றும் யுவர் காத்தான்குடி ஆகிய செய்திச்சேவை இணையதளங்களிலும் என்னுடைய ஆய்வறிக்கையொன்று வெளியாகியிருந்ததையும், அதன் மூலம் காத்தான்குடியிலுள்ள ஒருசிலர் மத்தியில் சிறு சலசலப்பு தோன்றியுள்ளதையும் அனைவரும் அறிவோம்.

அதனைத் தொடர்ந்து சென்ற 15.03.2016 அன்று ‘அவதானி’ இணையதளத்தில் அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் என்பவரால் ‘மறுப்புக் கட்டுரை’ என்னும் தலைப்பில் என்னுடைய ஆய்வறிக்கைக்கு மறுப்புரை வழங்கும் விதமாக ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

மேலும் அதே தினம், அதே இணையதளத்தில் ‘நியாஸின் ஆய்வில் நியாயமிருக்கிறதா?’ என்னும் பெயரில் யாராலும் உரிமை கோரப்படாத ஒரு அனாமதேய ஆக்கமொன்றும் ‘அவதானி’ இணையதள நிர்வாகி மதியன்பன் மஜீதினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மறுப்பறிக்கைகளிலும் குறித்த இரண்டாவது அனாமதேய ஆக்கத்தைப் பொறுத்தவரைக்கும், சமூகத்தில் இப்பேர்ப்பட்டதொரு பாரிய சலசலப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தக்கூடிய ஆய்வறிக்கையொன்றை நான் என்னுடைய சுய அடையாளத்துடன் துணிந்து வெளிப்படுத்தியிருந்த நிலையில், என்னுடைய அவ்வறிக்கையில் ‘நியாயமிருக்கிறதா?’ என்று ஆய்வு(?) செய்யப் புறப்பட்ட அனாமதேய ஆய்வாளர்(?), தன்னை சமூகத்திற்கு அடையாளம் காட்டிக் கொள்ளாமல் முக்காடும், முகமூடியும் அணிந்து கொண்டு பின் கதவால் அறிக்கை விடுவது முறையானதல்ல.

அந்த வகையில் குறித்த அந்த அனாமதேய அறிக்கையில் எப்பேர்ப்பட்ட வாதங்களை, கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் அது ஒரு மொட்டைத் துண்டுப்பிரசுரத்திற்கு ஒப்பான செல்லாக்காசுதான் என்னும் வகையிலும், முகவரியில்லாத மொட்டையான கருத்துக்கள் சமூகத்தில் எதுவித சலனங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதாலும் அது குறித்த என்னுடைய கருத்துக்களை இயன்றளவு தவிர்க்கிறேன்.

அத்தோடு இவ்வாறான முகவரியில்லாத மொட்டைத்தலை ஆய்வறிக்கைகளை ஒரு முன்மாதிரி இணையத்தளமான ‘அவதானி’ இணையத்தளம் இனிமேலும் பதிவேற்றக்கூடாது என்றும் அவ்விணையத்தளத்தின் ஆசிரியரைக் கேட்டுக்கொண்டு, சுய அடையாளத்துடன் தன் கருத்துக்களை மறுப்பாக வெளியிட்ட அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் என்பவரின் அறிக்கைக்கான எனது பதிலை இங்கே பதிவு செய்கிறேன்.

மஜீத் ரப்பானியின் முன்னாள் மனைவி, மஜீத் ரப்பானியால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்தான் என்னுடைய அறிக்கையின் சாராம்சமே தவிர, அவர்தான் கொலை செய்தார் என்று நிரூபித்து நேரடியாகக் குற்றம் சுமத்துகின்ற வகையில் அந்த அறிக்கை அமைந்திருக்கவில்லை.

மேலும் மஜீத் ரப்பானியின் முன்னாள் மனைவியுடைய திடீர் மரணத்தின் மீது நான் முன்வைத்த அந்த சந்தேகங்களைப் பொறுத்தவரைக்கும் அது எனக்கும் மஜீத் ரப்பானிக்கும் இடையிலுள்ள தனிப்பட்ட ரீதியாகவுள்ள கோப, குரோதங்களைத் தீர்த்துக் கொள்ளும் நோக்குடனும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறான எந்தவொரு தனிப்பட்ட ரீதியான கோப, குரோதங்களும் எனக்கும், அவருக்குமிடையில் இன்றுவரை சிறிதளவும் இருந்ததும் கிடையாது.

அதேநேரம் குறித்த அச்சந்தேகங்கள் வெறுமனே எழுந்தமானமாக மஜீத் ரப்பானி மீது முன்வைக்கப்படவுமில்லை. மாறாக, தான் பெற்று வளர்த்த பத்து வயதுப் பெண் குழந்தையை தனது இரண்டாம் தாரமான இளம் மனைவி மூன்று வருடங்களாக மிகவும் கொடூரமாகத் தீச்சூடுகள் வைத்து துன்புறுத்தி வந்துள்ள நிலையில், அக்கொடூரச் செயற்பாடுகளை ஒரு தந்தையாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் ஒரு சராசரி மனிதநேயமுள்ள மனிதனாகவேனும் தனது வீட்டிலிருந்து கொண்டு தட்டிக்கேட்காது, தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்ப்பது போன்று மௌனித்துக் கொண்டிருந்த அவரது நிலைப்பாடுகளை முன்வைத்துத்தான், அவரது முதல் மனைவியின் திடீர் மரணம் குறித்த அச்சந்தேகங்கள் என்னுள் எழுந்தன.

மாத்திரமல்லாது, அவரது மகளின் உடலில் காணப்பட்ட தீச்சூட்டுத் தழும்புகள் குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகளிடத்தில், அவையெல்லாம் ‘அலர்ஜிக்’கினால் ஏற்பட்டவை எனக் கதையளந்து, பொய் சொல்லி தனது இந்நாள் மனைவியைப் பாதுகாத்து அடைகாக்க முற்பட்ட மஜீத் ரப்பானியுடைய கடைந்தெடுத்த பொய்யும், கபடம் நிறைந்த கள்ளத்தனமான நடவடிக்கைகளுமே அத்தகைய சந்தேகங்களை இன்னும் என்னுள்ளத்தில் வலுப்படுத்தின.

மேலும் மஜீத் ரப்பானி மந்திரியாக வீற்றிருக்கின்ற அப்துர் றவூப் மௌலவியின் அத்வைத சாம்ராஜ்யமானது, அவர்களுடைய வழிகெட்ட கொள்கைகளை வளர்ப்பதற்காகவும் எதிர்த்தரப்பைப் பழிவாங்குவதற்காகவும் கடந்த காலங்களில் அரங்கேற்றிய அடாவடித்தனமான கொடூர செயற்பாடுகளும் மஜீத் ரப்பானியின் முன்னாள் மனைவியுடைய திடீர் மரணத்தின்மீது ஒரு நியாயமான சந்தேகத்தை மேற்கொண்டு வலுப்படுத்தியது.

சமூகத்தில் ஒரு சிறிய குற்றச்செயல் நடைபெறுகின்றபோது, அக்குற்றவாளியை வைத்து சமூகத்தில் இடம்பெறுகின்ற அல்லது இதற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிவாசல்களை, தடயங்களைத் தேடுவது என்பது சாதாரணமானது.

உதாரணமாக ஒரு சிறிய கள்ளன் பொலிசாரினால் கைதுசெய்யப்படுகின்றபோது, அந்த நாட்களில் தேக்கநிலையில் இருக்கின்ற ஏனைய திருட்டுக்கள் தொடர்பாக அவனிடம் விசாரணை நடாத்துவதும், அதன் மூலமாக புதைந்து போயிருந்த பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருவதும் உலக நடைமுறையிலுள்ள வழமையாகும்.

நமதூரில் வீடுகள் உடைக்கப்பட்டு நகைகளும், பணங்களும் திருடப்பட்ட பல முறைப்பாடுகள் தொடர்பாக பொலீசார் துப்புத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வீட்டை எட்டிப்பர்த்துக் கொண்டிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, பொலீசாரே எதிர்பார்த்திராத வகையில் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் அல்ஹாஜ் எஸ்.எம். சீனி முகம்மது அவர்களின் வீடு உட்பட பல வீடுகளிலிருந்து திருடப்பட்ட பெருந்தொகையான நகைகளும், தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை சமீபத்திய உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உரிய குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அத்தகைய கொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களை விபத்துக்களால் நிகழ்ந்ததாகவும், பாரிய நோய்களால் மரணித்ததாகவும் அதிகாரவர்க்கத்தினரால் சித்தரிக்கப்பட்டு மூடிமறைக்கப்பட்ட பல குற்றச்செயல்கள் ஊடகங்கள் வாயிலாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு ஆய்வறிக்கைகளாக வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்தான் அவை விசாரணைக்குரிய வழக்குகளாக மாற்றம் பெற்று குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

ஆனால், நமது முஸ்லிம் சமூகத்தை, குறிப்பாக எமது காத்தான்குடிச் சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் ஊடகம் மற்றும் ஊடகவியாளர்கள் என்கிற சொல்லாடலுக்கான வரைவிலக்கணம் தவறாகப் புரியப்பட்டதன் விளைவே, இவ்வாறான புலனாய்வு அறிக்கைகளும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதற்கான பிரதான காரணமாகும்.

தலைவர்களுக்கு மலர் மாலையிட்ட, திறப்பு விழாக்களில் ரிப்பன் வெட்டிய, அடிக்கல் நாட்டிய செய்திகளை மாத்திரம் பிரதான செய்தியாக எழுதுபவன் மட்டுமே ஊடகவியலாளன் என்றும், அந்த உப்புச்சப்பற்ற செய்திகளை பிரதான செய்திகளாக முன்பக்கத்தில் வெளியிடுகின்ற இணையதளங்கள் மாத்திரமே ஊடகங்கள் என்றும் எமது சமூகத்தில் வேரூன்றியிருக்கின்ற ஒரு வெகுளித்தனமான பார்வையே இவ்வாறான புலனாய்வுக்கட்டுரைகளில் மறைந்துள்ள தூர நோக்குகளை மக்கள் புரிந்துகொள்ளவும், ஜீரணிக்கவும் மறுப்பதற்குமுரிய காரணிகளாகும்.

அவ்வாறான புலனாய்வு ஊடகம் என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எப்படிப்பட்டதென்பது குறித்த போதிய அறிவும் தெளிவுமின்றிக் காணப்படுகின்ற ஒரு சமூகத்தில் இவ்வாறான குற்றச்செயல்கள் என்று சந்தேகிக்கக்கூடிய ஒரு விடயத்தை கடந்த கால சம்பவங்களின் துணை கொண்டு துணிவுடனும் தெளிவுடனும் வெளிப்படுத்துவதிலுள்ள சவால்களை நான் நன்றாகவே அறிவேன்.

மேலும் குறித்த எனது இந்த ஆய்வறிக்கையானது, சமூகம் பதிலளிக்க வேண்டிய பொறுப்புக்குரிய ஆய்வறிக்கையும் கிடையாது. மாறாக, ஊடகங்கள் வெளிப்படுத்துகின்ற இதுபோன்ற ஆய்வறிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் ஏதோ ஒரு வழியில் சென்றடைகின்றபோதுதான், அவை தொடர்பான முறையான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய பொறுப்பாகுமே தவிர, சமூகத்தினுடையதோ அல்லது தனி நபர்களினதோ, சக ஊடகங்களினதோ பொறுப்புமல்ல என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

செவி வழி மற்றும் வாய்வழித் தகவல்களைக் கொண்டு கிடைக்கின்ற, முறையான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத தகவல்களைக்கொண்டு ஊடகர் ஒருவருக்கு, அது தொடர்பில் தமக்கெழுகின்ற சந்தேகங்களைத்தான் வெளிப்படுத்த முடியுமே தவிர, குறித்த விடயத்தை அது இவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது என்று ஆதாரபூர்வமாக, ஐயந்திரிபற நிரூபிப்பது என்பது முடியாத காரியமாகும்.

அப்படி முடிந்திருந்தால், ‘மாஜி மனைவியைக் கொலை செய்தது மஜீத் ரப்பானியா?’ என்று தலைப்பிடாமல், ‘மாஜி மனைவியைக் கொலை செய்ததும் மஜீத் ரப்பானிதான்!’ என்றே நான் தலைப்பிட்டிருப்பேன். எனது அறிக்கைக்கு மறுப்பறிக்கை வெளியிட்டவர்களுக்கும் கூட இங்கே அதுதான் நிகழ்ந்திருக்கிறது.

குறித்த என்னுடைய ஆய்வறிக்கையானது, முழுக்க முழுக்க மஜீத் ரப்பானி மற்றும் அவருடைய அத்வைதக் கூடாரத்தின் காவலாளிகள் தொடர்புபட்ட ஒரு ஆய்வறிக்கையாகும். அந்த அறிக்கைக்கு பதில் எழுத வேண்டிய அல்லது பேச வேண்டிய பொறுப்பும் கடமையும் மஜீத் ரப்பானி மற்றும் அவர சார்ந்த அத்வைத குழுமத்திற்கே முதற்கடமையாகக் காணப்படுகிறது.

ஆனால் இன்று வரைக்கும் அத்தரப்பிலிருந்து இதுதொடர்பாக எந்தவொரு சலனத்தையும் காணவில்லை.

எனது அறிக்கையில் எழுப்பப்பட்ட சந்தேகத்தை தமது மௌன அங்கீகாரத்தின் மூலமாகச் சரிகண்டவர்கள் போலவே அத்வைதக் கூடாரக் குடிமக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அப்படி அவர்களே வாளாவிருக்கின்றபோது அவர்களோடு சம்பந்தமேயில்லாத ‘அவதானி’ இணையதள நிர்வாகி மதியன்பன் மஜீத் மற்றும் அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் ஆகிய இருவரும் பதறியெழுந்து கொண்டு இந்த விடயத்தில் தடாலடியாக தங்களின் மூக்கை நுழைத்திருப்பதன் உள்நோக்கம்தான் என்ன?

‘இரும்படிக்கின்ற களத்தில் எறும்புகளுக்கென்ன வேலை?’ என்பது போல, இந்தச் சந்தேக ஆய்வறிக்கையில் அதிரடியாக மூக்கை நுழைத்து மஜீத் ரப்பானிக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து அவரை இந்த ‘சூடு வைப்பு’ விவகாரத்திலிருந்தும் இவர்கள் லாவகமாக மீட்டெடுப்பதற்காகப் பாடுபடவேண்டியதன் தேவைப்பாடுதான் என்ன?

‘ரப்’ என்றால் ‘அகில உலகங்களுக்குமான இரட்சகன்’ என்பது அர்த்தம். தன்னை விசுவாசம் கொண்டு வழிப்பட்டு வணங்குபவர்களுக்கும், தன்னை நிராகரிப்பவர்களுக்கும் எத்தகைய பாரபட்சமுமின்றி தனது படைப்பினங்களுக்கான எல்லாவகையான அருட்கொடைகளையும் சமமாக வழங்கும் ஏகன் இறைவனின் மாபெரும் கருணை இலட்சணத்தின் வெளிப்பாட்டையே இந்த ‘ரப்’ எனும் சொல் பிரகடனப்படுத்துகிறது.

அத்தகைய பெருந்தன்மைமிக்க அழ்ழாஹ்வின் திருப்பெயரை தன்னுடைய சன்மார்க்க அறிவின் சான்றிதழாக தனது பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டுள்ள மஜீத் ரப்பானி, தனது மகளுக்கு – தனது வீட்டுக்குள்ளேயே – தனது மனைவியாக இருப்பவளாலேயே இப்படியொரு அநியாயம் செய்யப்படுவதை மூன்று வருடங்களாகக் கண்ணாரக் கண்டு கொண்டும், தனது மகளின் சூடு தாங்க முடியாத வேதனைக் குரலை காதாரக் கேட்டுக் கொண்டும் கருணையென்பது கிஞ்சிற்றும் உள்ளத்தில் ஊற்றெடுக்காமல் ஊமையாக இருந்து வந்துள்ளார் என்றால், இவர் குறித்து என்போன்ற விரிந்த பார்வை கொண்டவர்களால் இவ்வாறான சந்தேகங்கள் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

தன்னுடைய சொந்த மகளைக் கொடுமைப்படுத்திய இவ்விடயத்தில் மனிதநேயமிக்க அனைவராலுமே ஒரு இரக்கமற்ற இராட்சசனாகப் பார்க்கப்படுகின்ற இந்த மஜீத் ரப்பானியை, ‘அவர் முதல் மனைவியைக் கொலை செய்யவில்லை’ என்று துள்ளியெழுந்து அவருக்கு வக்காலத்து வாங்கி மஜீத் ரப்பானி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பைத் திசைதிருப்பி அனுதாப அலைகளை அவர்மீது பொழிய வைத்துக் காப்பாற்றுவதற்காக கடுகதி வேகத்தில் மறுப்பறிக்கை வெளியிட்ட இந்த இரண்டு மேதாவிகளுக்கும், அத்வைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற ‘டீலிங்க்’ என்ன?

அவ்வாறு அதிரடியாக மூக்கை நுழைத்து மறுப்பறிக்கையும், நியாயமும் கோரி அறிக்கைகள் விட்டு சமூகத்தின் வெறுப்பைத் திசைதிருப்ப முயற்சித்த இவர்கள் கூட, அவர்களின் வாதத்திற்கு நியாயமான, ஆதாரபூர்வமான சான்றுகளை முன்வைத்திருந்தால்கூட நான் வெளியிட்ட ஆய்வறிக்கையினை. மறுபரிசீலனை செய்வது குறித்து சிந்திக்க முடியும்.

தகவல்களின் அடிப்படையிலான ஒரு குற்றச்சாட்டை அல்லது சந்தேகத்தை முன்வைப்பவன் அதற்கான ஆதாரங்களை உடனடியாக முன்வைப்பதை பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் தவிர்க்கலாம்.

ஆனால், அக்குற்றச்சாட்டை அல்லது அச்சந்தேகத்தை ஆய்வுக்கே உட்படுத்தத் தேவையில்லை என்று முற்றாக நிராகரித்து மறுப்பவர்கள், தமது மறுப்புக்கான வலுவான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். இந்த நியாய நியதிகூடத் தெரியாதவர்கள் ‘கண்களை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனை’ போல் தர்க்கங்களுக்குத் தீர்வுகள் காண தமது தலைகளை அனாவசியமாக உருட்டிக் கொள்ள முன்வந்திருப்பது கவலைக்குரியதாகும்.

மக்கள் மத்தியில் சமகாலத்தில் நிலவுகின்ற மஜீத் ரப்பானி தொடர்பான நியாயபூர்வமான சந்தேகங்களையும், அத்வைதக் கூடாரிகளின் வரலாற்று ரீதியான அராஜகச் செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டு வரையப்பெற்ற எனது ஆய்வறிக்கைக்கு அவசர மறுப்பெழுதி, அதன்மூலம் மஜீத் ரப்பானியையும் அவருடைய இந்நாள் மனைவியையும் மீட்டெடுக்கப் புறப்பட்ட இம்மகான்கள் அதற்கான தெளிவான ஆதாரங்களை உரியமுறையில் முன்வைக்கத் தவறியிருப்பது, இவ்விருவருக்கும் பின்னாலிருந்து ஏதோ ஒரு ‘கைப்பலம்’ வாய்ந்த சக்தியொன்று இவர்களை உந்தித்தள்ளியிருக்கிறது என்பதையே துல்லியமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது.

மஜீத் ரப்பானியுடைய முன்னாள் மனைவி மார்பகப்புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பது ஊர் மக்கள் பலரும் அறிந்திருந்த ஒன்றுதான். ஆனால் அவருடைய திடீர் மரணத்திற்கு காரணமாக இருந்தது அந்த மார்பகப்புற்று நோய்தானா? என்ற சந்தேகமே இங்கே எனது ஆய்வறிக்கையல் தொக்கி நிற்கும் சூத்திரமான கேள்வியாகும்.

தொடர்ச்சியாக ஒரு பாரிய வியாதியால் அவதிப்படுகின்ற ஒருவரை ‘கருணைக் கொலை’ செய்யலாம் என்று ஒரு மகா மடையன் ‘பத்வா’ கொடுத்தாலும், அதனை வேதவாக்காக நம்பி உடனே செயற்படுத்தும் சிறுமடையர்கள் நிறைந்து வாழும் ஒரு கூடாரத்திற்குள் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குறித்து, அதே வகையான கொடூரமொன்று வெளிப்படும்போது ஆய்வுக்கண்களை அகலத் திறந்து பார்க்க வேண்டியது ஆய்வாளர்களின் பொறுப்பாகும். வெறுமனே பரபரப்புச் செய்தி மாத்திரம் வெளியிட்டு அலசி விட்டுப் போவதாக இருக்கக்கூடாது.

குறித்த என்னுடைய ஆய்வறிக்கையிலுள்ள மேற்கோள்களை மறுத்துரைத்து மஜீத் ரப்பானியுடைய மனைவி மார்பக புற்றுநோயால்தான் மரணித்தார் என்று வாதிடுபவர்கள் அதற்குண்டான, முறையான ஆதாரங்களை அவர்களது மறுப்பறிகைகளில் சமூகத்திற்கு பொறுப்புடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இவர்கள் செய்யவில்லை.

மாறாக, மரணித்த பெண்ணுடைய உறவினரும், உற்றாரும், மற்றாரும் கூறிய சில வாய்வழித் தகவல்களை ஆதாரமாகக் கொண்டுதான் அவர் குறித்த நோயின் காரணமாக இறந்தார் என்று நிறுவ முனைகிறார்கள்.

ஆனால் ஒருவர் மீது கொலைக்குற்றம் தொடர்பான சமூகத்தில் நிலவுகின்ற சந்தேகத்தை வெளியிடுகின்றபோது இவ்வாறான வாய்வழித் தகவல்களையும், இணையதள அறிக்கைகள் மற்றும் முகப்புத்தக கருத்துக்கள் என்பவற்றை மட்டுமே ஆதாரமாகக் காண்பித்து அவரை குற்றமற்றவர் என்று நிறுவி விட முடியாது. மாற்றமாக காவல்துறையின் புலனாய்வு விசாரணைகளின் மூலமும், சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் மூலமுமே அந்தச் சந்தேக நபரை குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்க வேண்டும்.

அம்முறையிலன்றி, மஜீத் ரப்பானியின் மனைவியுடைய மரணத்தில் மாத்திரம் இவர்களிருவரும் அவசரமாக முன்வந்து ‘அது கொலையல்ல, இயற்கை மரணம்தான்’ என்று சான்று பகர்வதன் மர்மம்தான் என்ன?

மாத்திரமல்லாது மஜீத் ரப்பானியுடைய முன்னாள் மனைவியின் குடும்பத்தார் என்பவர்கள் கூறுகின்ற சாட்சியமும் இங்கே ஏற்கத்தக்கதல்ல.

தன்னுடைய தாயை இழந்த அந்தக் குழந்தை, கடந்த மூன்று வருடங்களாக தனது வளர்ப்புத்தாயினால் மிகவும் கொடூரமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு வந்திருக்கும்போது அக்குழந்தையின் தாய்வழி உறவுகள் அக்குழந்தையின் நிலைமையைக் கண்டறிய ஆர்வங்காட்டவில்லையே..? இப்போது மட்டும் எங்கிருந்து மறுப்பறிக்கைகள் எழுதுவோருக்கு சாட்சியமளிக்க மழைக்கால ஈசல்கள் போல அவர்கள் புறப்பட்டு வந்தனர்?

அப்துர் றவூப் மௌலவி தனது அத்வைதக் கொள்கைப் பக்தன் ஒருவனைப் பார்த்து, ‘உனது மகளுக்கு இந்த மாப்பிள்ளையைக் திருமணம் செய்து வை’ என்றால், அந்த மாட்டு பக்தனுடைய மகள் என்ன.. இந்த உலகமே எதிர்த்தாலும் அவனுக்கே அவளைக் கல்யாணம் செய்து வைப்பதென்பது அத்வைதிகளின் பித்துப்பிடித்த வழக்கம்.

அதேபோல ஏதாவது பிரச்சினையொன்று அக்குடும்பத்திற்குள் வரும்போது, அக்கணவனை மனைவியிடம் போக விடாமல் தடுத்து வைத்து ‘தான் சொல்லி முடித்து வைத்த இந்தக் கல்யாணத்தை உடனே பிரித்து வை’ என்று காதி நீதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புவாராயின், அந்த விவாகம் காதி நீதிபதி முன்னிலையில் முத்தலாக்கும் ஒரே தடவையில் கூறப்பட்டு பிரிக்கப்பட்டுவிடும். இதற்கு ஆதாரமான சம்பவங்கள் பல உள்ளன.

இவ்வாறு கணவன், மனைவி, பிள்ளைகளை தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்காகப் பிரித்து வைக்கும் அதிகாரப்பலங்கொண்ட வரலாறுகளைக் கொண்டுள்ள அத்வைதக் கூடாரத்திற்குள்தான் இக்கொடூரத் தீச்சூட்டுச் சம்பவமும் நிகழ்ந்திருப்பதால் மஜீத் ரப்பானியின் முதல் மனைவி திடீர்மரணமானதன் உண்மைத்தன்மை என்னவென்பதைப் புறக்கண்ணும், அகக்கண்ணும் அகலத்திறந்து ஆராய்ந்து பார்க்க வேண்டியது, அல்குர்ஆனையே ஆராயுமாறு பணிக்கப்பட்ட மனிதர்களுக்கு இன்றியமையாததாகும்.

மஜீத் ரப்பானி தனது முன்னாள் மனைவிக்கு உணவு ஊட்டி விட்டார், உடுப்பு கழுவிக் கொடுத்தார் என்பதெல்லாம் ஒரு வாதமே கிடையாது. காரணம், தற்போது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ள குழந்தை கூட அவருக்குப் பிறந்த, அவரால் சீராட்டி வளர்க்கப்பட்ட குழந்தைதான். அப்பிஞ்சுக் குழந்தையின் அபயத்தொனியுடன் கூடிய அழுகுரல்கூட அவருடைய உள்ளத்தில் உறைந்திருந்த ‘எல்லாம் அவனே’ என்ற ஈமானை உசுப்பவில்லையே.

அக்குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டபோது அவர் தனது இந்நாள் மனைவிக்கு ஒத்துழைத்து ஊமையாகவும், குருடனாகவும், செவிடனாகவும் உள்வீட்டில் ஆண்மையிழந்த கணவனாக இருந்துகொண்டு அப்பாதகியின் கொடூரங்களுக்கெல்லாம் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார்.

இப்போது, ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்ற தோரணையில் எப்படி இந்த மறுப்புக்கட்டுரையாளர்களால் அவரைக் குறித்து நியாயம் கேட்க முடிகிறது? இவர்களின் தலைக்கும் மூளைக்கும் தொடர்பான நரம்புகளின் செயற்பாடுகள் செயலிழந்துதான் போய் விட்டனவா?

இப்பேர்ப்பட்ட கல்நெஞ்சக்காரர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு உணவு ஊட்டி விட்டதையும், துணிகள் துவைத்துக் கொடுத்ததையும் எவ்வாறு இவர்கள் ஆதாரமாகக் காண்பிக்க முடியும்? ‘கருணைக் கொலை’ செய்யும் முன்னர் கொல்லப்படப் போகிறவனிடம் அன்பாக நடந்து கொள்வது போன்று இவரும் திட்டமிட்டே நடந்து கொண்டிருக்கலாம் அல்லவா? அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

செங்கலடி இரட்டை கொலைச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகூட கொலை நடப்பதற்கு முதல் நாள் வரைக்கும் தன்னுடைய தாய் தந்தையரோடு மிக்க அன்பாகத்தானே நடந்து கொண்டாள்?

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொல்லப்படுவதற்கு முன்பாகவும் இப்போது கொலைக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுவர்களோடு நெருங்கிய நட்பாகத்தானே இருந்துள்ளார்?

மேலும், சூட்டுத் தழும்புகள் குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகளிடத்தில் மஜீத் ரப்பானி ‘அலர்ஜிக்’ கதையளந்து தன்னுடைய இந்நாள் மனைவியை அடைகாக்க முயற்சிக்கவில்லையா?

எனவே மஜீத் ரப்பானி முன்னாள் மனைவியோடு அன்பாக இருந்தார், பாசமாக நடந்தார் என்கிற வாதமெல்லாம் அம்மனைவி அவரால் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட திருப்திப்படத்தக்க சான்றாக இல்லை.

மாத்திரமன்றி, மஜீத் ரப்பானி நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து அப்துர் ரவூப் மௌலவி, அவருடனான தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொள்ளுமாறு தனது பக்த சகாக்களுக்கு பணிப்புரை செய்து விட்டு, பொலீசாரையும் உரிய நடவடிக்கைகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டு, நீதி தன் கடமையைச் செய்யும் என்ற தத்துவத்தைக் கொட்டி விட்டு ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் பின்னைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கமறியலில் தறபோது தனித்து விடப்பட்டிருக்கும் மஜீத் ரப்பானி, இச்சந்தர்ப்பத்தில் அரச தரப்பு சாட்சியாக மாறி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் பட்சத்தில், ஊரை விட்டு வெளியேறியிருக்கும் அப்துர்றவூப் மௌலவி பற்றிய பல உண்மைத் தகவல்கள் மறுப்புக்கட்டுரை எழுதியவர்களுக்கும்கூட பெரும் மண்டையிடியாக மாறலாம்.

ஏனெனில், kkytimes இணையதளம் வெளியிட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான அறிக்கையில், ‘அதேபோன்றுதான் அப்துர் ரஊப் மௌலவிக்கும் அவரது தரப்பினருக்கும் இந்த விடயம் முன்கூட்டியே தெரியும் என்றும், அவர்களும் இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது மௌனம் காத்தே வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.’ எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அவ்விணையதள அறிக்கையில், ‘இந்த விடயத்தில் தலையிட்டுள்ள அப்துர் ரஊப் மௌலவி, பிள்ளைகள் மஜீத் மௌலவியுடனும் அவரது இரண்டாவது மனைவியுடனுமே இருக்க வேண்டும் என்றும் பிள்ளைகளை தர முடியாது என்றும் காரசாரமாக தெரிவித்துள்ளார்.

இது விடயமாக பகிரங்க நிகழ்வொன்றில் வைத்து சிறுமியின் தாயாரது குடும்ப உறுப்பினர்களுக்கு காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அப்துர் ரஊப் மௌலவி ஏசியதாகவும், இதுபற்றி அப்போது வெளிவந்த உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டதாகவும் அறிய முடிகிறது.’ என்றும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்களையும் கவனத்திற் கொண்டு அப்துர் ரவூப் மௌலவி மீது காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பார்களாயின், முதல் மனைவியின் குடும்பத்தாருக்கும் அவருக்கும் இடையிலான மனக்கசப்பான நிகழ்வுகளையும், சிறுமி மீதான தீச்சூட்டு விடயம் தெரிய வந்தும் அதனைத் தடுத்து நிறுத்தாமலும், மறைத்ததற்குமான காரணங்கள் என்ன என்பதை அவர் வாயாலேயே அனைவரும் தெரிந்து கொள்ள வழி பிறக்கும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆக, மஜீத் ரப்பானியின் முதல் மனைவியின் குடும்பத்தாருடன் அப்துர் ரவூப் மௌலவிக்கு தனிப்பட்ட ரீதியில் நீண்ட காலமாக மனக்கசப்பும், கொதிப்பும் இருந்து வந்திருக்கின்றது. முதல் தாரத்தின் பிள்ளைகளை அவளின் குடும்பத்தினர் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியபோதும் அதனை அப்துர் றவூப் மௌலவி தனது அதிகாரத்தின் மூலம் அக்குடும்பத்தினர் மீது பகிரங்கமாக வசைபாடி தடுத்து இரண்டாவது மனையிடமே ஒப்படைத்துள்ளார்.

இரண்டாவது மனைவி இக்குழந்தையின் மீது நெருப்புச்சூடு வைப்பது அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அவர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அப்படியொரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதைப் பற்றி சமாதான நீதவானும், மார்க்க அறிஞருமான அவர் சிறுவர் துஷ்பிரயோக ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கோ, காவல் துறையினருக்கோ தகவல் கொடுக்காமல் திட்டமிட்டு மறைத்துள்ளார். இறுதியாக, தந்தையும் தாரமும் இவ்விடயத்தில் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டபோது, அவர் ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வரட்டுத் தத்துவம் பேசிக் கொண்டு ஊரை விட்டும் வெளியேறியுள்ளார்.

இப்பேர்ப்பட்ட இவரை சட்டம் சும்மா விடலாமா? வருடா வருடம் அப்துர் றவூப் மௌலவியின் பள்ளிவாசலில் இருந்து கந்தூரிச் சோற்றுப் பெட்டிகளை வாங்கி உண்ணும் வழக்கமுடைய காத்தான்குடிப் பொலீசார், இந்த வழக்கில் அப்துர் ரவூப் மௌலவியையும் இக்குற்றச் செயலுக்கு உடந்தையான ஒரு சந்தேக நபராக உட்படுத்தி நீதிமன்றத்தில் அவரையும் ஆஜர்படுத்தாமல் தந்திரமாகத் தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.

எனினும் இந்த வழக்கை விசாரித்து வரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள், அப்துர் ரவூப் மௌலவியையும் இவ்வழக்கில் உட்புகுத்தி பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பாகவும், மஜீத் ரப்பானியின் முதல் மனைவியின் மரணம் தொடர்பாகவும் அவரது வாக்குமூலங்களையும் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் ஊருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்டிருக்கும் பல அராஜகங்கள் அம்பலத்திற்கு வந்து உண்மையான நீதி நிலைநிறுத்தப்படும்.

Published by

Leave a comment