கொழும்பு: இரண்டு வாரங்கள் இடைவெளியில் இரண்டு தடவைகள் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் பலமணி நேரம், நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இதனிடையே, இலங்கையிலுள்ள முக்கிய மின் விநியோக நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தவிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்சாரத் தடைக்கு பியகம மின் நிலையத்திலுள்ள ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே காரணமாக இருக்கலாம் என பொறியியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய, துணை அமைச்சர் அஜித் பி பெரேரா, இலங்கை மின்சார சபைத் தலைவர் அனுர விஜயபால ஆகியோர் இன்றைய தினம் அந்த மின் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதனிடையே நாடு முழுவதிலும் மின்சாரம் தடைப்பட்டமைக்கு தனது கவலையை வெளியிட்டிருந்த இலங்கை மின்சார சபைத் தலைவர் அநுர விஜயபால தான் பதவி விலகவுள்ளதாகவும் நேற்று அறிவித்திருந்தார்.
ஆனால் அநுர விஜயபாலவின் ராஜினாவை ஏற்க மறுத்த அமைச்சர் சியம்பலாப்பிட்டிய, சிறந்த அனுபவம் மிக்க அவரது சேவை நாட்டுக்கு தேவை எனக் கூறினார்.
Leave a comment