மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது பொலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
போர்க் காலத்தில் நடைமுறையிலிருந்தது போன்ற இந்தப் பதிவு முறை காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது.
வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸாரால் கோரப்பட்டுள்ளன.
வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருப்போர் பற்றிய விபரங்களில் நிரந்தர வதிவிடம் , உறவு முறை, தங்குவதற்கான காரணம் மற்றும் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை போன்ற விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
சுமூகமான சூழ்நிலையில்ெலிஸாரின் இந்நடவடிக்கை காரணமாக நகர மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் துணை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் கூறுகின்றார்.
போர் முடிவடைந்து வருடங்கள் பல கடந்து விட்ட நிலையில் போலிஸார் குடியிருப்பாளர்களின் விபரங்களை திரட்டுவதற்கான காரணங்கள் பற்றி கூட தெரியாமல் மக்கள் குழப்பமடைந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
போலிஸ் கட்டளைச் சட்டம் 76ம் பிரிவின் கீழ் தான் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விபரங்கள் திரட்டப்படுவதாக அந்த படிவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என உள்ளுர் போலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறுவது போல் வழமையான செயல்பாடு என்றும் அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave a comment