பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோய்

Breast-cancerஇலங்கையை பொறுத்தவரையில் பெண்கள் அதிகளவில் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிகவும் அவசியம் இது அழகையும் வாழ்க்கையையும் பாதுகாக்கும். மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் யார்?

01. மார்பகப் புற்றுநோ​யை குடும்ப வரலாறாகக் கொண்டவர்கள் (தாய் அல்லது சகோதரி)

02. முந்திய மார்பக நோய் வரலாறு கொண்ட பெண்கள்.

03. சூலகப் புற்றுநோய் வரலாறு கொண்டபெண்கள்.

04. மாதவிடாய் சக்கரத்தை அதிளவில் எதிர்கொண்ட பெண்கள்.

11 வயதுக்கு முன்பு பூப்படைந்தவர்கள்

55 வயதுக்கு முன்பு மாதவிடாய்ச் சக்கரம் நின்றவர்கள்

05. தாய்மைப்பேறு அடையாதவர்கள் அல்லது 35 வயதுக்குப் பின் முதலாவது குழந்தைப் பாக்கியம் பெற்றவர்கள்.

06. தாய்ப்பால் கொடுக்காத பெண்கள்.

07. வைத்திய ஆலோசனையின்றி ஈஸ்ரோஜன் கொண்ட கருத்தரிப்பு வில்லைகளை மிக நீண்டகாலத்திற்குப் பாவிப்பவர்கள்.

08. மிகவும் பருமன் கூடிய பெண்கள்.

மார்கப் புற்றுநோய் குடும்ப வரலாறு கொண்ட பெண்கள், ஓமோன்கள் அடங்கிய வில்லைகளைப் பாவிப்பது நல்லதல்ல.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கக் கூடும்.

01. அதிகளவு கொழுப்பு உணவை உள்ளெடுப்பவர்கள்.

02. குறைந்தளவு மரக்கறி, பழ வகைகளை உள்ளெடுப்பவர்கள்.

03. உடற்பயிற்சி செய்யாதவர்கள்.

04. மாதவிடாய்ச் சக்கரம் நின்றபின் உடல்நிறை அதிகளவில் கூடியவர்கள்.

05. மதுபானம் மற்றும் புகைப்பவர்கள். மார்பகங்களில் காணப்படும் நிலைமைகள் சாதாரணமானவையே .

01. அதிகளவான பெண்களில் இரு மார்பகங்களும் ஒரே அளவில் சமச்சீராக இருப்பதில்லை.

02. மாதவிடாய்ச் சக்கரத்தின் போது, ஓமோன்களின் அளவு மாற்றத்தால், மார்பகமானது பல மாறுதல்களுக்கு உட்படுகின்றன.

03. மார்பகத்தில் கட்டிகளும், நோவும் மாதவிடாய் சக்கரத்தின் முன்னர் தோன்றுவது வழமையானது.

04. மாதவிடாய்ச் சக்கரம் முற்றாக நின்றபின்னர் மார்பகங்கள் மென்மையடைந்து காணப்படும்.

மார்பகத்தில் அவதானிக்கக்கூடிய மாற்றங்கள்

* அண்மையில் மார்பகத்தில் அளவிலோ, மூலைக் காம்பின் அளவிலோ மாற்றங்கள் அல்லது சமச்சீரின்மை.

* மார்பகத்திலோ அல்லது அங்குளிலோ வீக்கம் அல்லது கட்டிகளும் படர் அடையாளங்கள் மார்பகத்திலும் மூலைக் காம்புகளிலும் காணப்படல்.

* மார்பகத்தில் உட்குழிவு காணப்படல்.

* தோடம்பழத்தின் தோலினை ஒத்த மார்பகத்தோல் மாற்றமடைதல் அல்லது மார்பகத்தோல் தடிப்படைந்து காணப்படல்.

* மூலைக்காம்பு உள்நோக்கித் திரும்பியிருத்தல். மூலைக்காம்பு சிதைவடைந்திருத்தல்.

* பாலைத்தவிர மூலைக் காம்பினூடாக ஏதாவது திரவம் வெளிவரல்.

எல்லாப் பெண்களும் சுயமார்பகப் பரிசோதனை செய்வது எப்படி எனவும், அதனால் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். சுயமார்பகப் பரிசோதனை.

Breast-cancer

இது இரு படிமுறைகளைக் கொண்டது.

01. மார்பகங்களைப் பார்வையால் பரிசோதித்தல் (Inspection)

02. மார்பகங்களைக் கையினால் தொட்டுணர்தல் (Palpation)

சுய மார்பகப் பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்?

* எல்லாப் பெண்களும் ஒவ்வொரு மாதமும் சுய மார்பகப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

* மாதவிடாய் பெருக்கு உள்ள பெண்கள், மாதவிடாய்ச் சக்கரம் ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின் செய்ய வேண்டும்.

* மாதவிடாய் சக்கரம் நின்றபின் மாதத்தின் குறிப்பிட்ட திகதியில் மார்பங்களைப் பார்வையால் பரிசோதித்தல்.

* போதிய வெளிச்சமுள்ள பாதுகாப்பான மூடிய அறை தெரிவு செய்தல்.

* உங்கள் உடலின் மேற்பாகத்திலுள்ள ஆடைகளை முற்றாகக் அகற்றுதல்.

* கண்ணாடிக்கு முன்பாக நின்று மார்பகப் பிரதேசத்தை நன்றாக வெளிக் காட்டுதல்.

* இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்த நிலையில் நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள்.

* இரு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்துதல்.

* இரு கைகளையும் இடுப்பில் வைத்து முன்னோக்கி குனியுங்கள்.

மார்பகங்களைக் கையினால் தொட்டுணர்தல்.

* படுத்த நிலையில் பரிசோதிப்பதாயின் பரிசோதிக்கப்படும் மார்பகப்பக்கத்தின் தோற்பட்டையின் கீழ் சிறிய தலையணையை வைத்தல்.

பரிசோதிக்கப்படும் பக்கத்திற்குரிய கையைத் தலையின் கீழ் வைக்கவும். மறுகையினால் பரிசோதனையை மேற்கொள்ளவும்.

* அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ இப்பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

* விரல்களின் கட்டையான உட்பாகத்தினால் ஏதாவது கட்டிகள், தடிப்புகள், முடிச்சுக்கள் கடினமான பகுதிகள், வலி, நோவு உள்ளனவா என்பதை பரிசோதித்தல்.

* வலது மார்பகத்தை இடது கையாலும் இடது மார்பகத்தை வலது கையாலும் பரிசோதனை செய்தல், அதே கையாலும் இடது அக்குளை வலது கை விரல்களினால் பரிசோதித்தல்.

* மார்பகத்தின் எல்லைப் பகுதிகளும் முழுமையாகும் விதத்தில் வெளியிலிருந்து கடிகாரத்தின் முன் சுற்றும் விதத்தில் கையை அழுத்தி, மார்பத்தில் தடிப்பு, வலி, கட்டிகள் உள்ளனவா என்பதை அறிதல்.

* முழு மார்பங்களையும் மூன்று விதமான அழுத்தங்களைப் பிரயோகித்துத் தொட்டுணர்தல்.

முலைக் காம்பைச் சூழ உள்ள கறுத்த வட்ட பிரதேசத்தை பெருவிரலாலும், ஆட்காட்டி விரலாலும், மெதுவாக அழுத்தி பாலைத்தவிர வேறு ஏதாவது திரவங்கள் வெளிவருகின்றதா என்பதை பரிசோதித்தல்.

* குளிக்கும் போது மார்பகப் பரிசோதனை செய்யலாம் இங்கு உடம்பிலுள்ள நீரானது உங்கள் ‘சுய மார்பகப் பரிசோதனையை இலகுவாக்கும்.

சுய மார்பகப் பரிசோதனையில் ஏதாவது வித்தியாசமாக உணரும் பட்சத்தில் எங்கே போக வேண்டும்.

* பிரதேசத்திலுள்ள சுக வனிதையர் நல கிளினிக்கிற்கு.

* அருகாமையிலுள்ள அரசாங்க அல்லது தனியார் வைத்திய அதிகாரி அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடம்.

* அருகாமையிலுள்ள வைத்தியசாலையில் நடைபெறும் சத்திரசிகிச்சை அல்லது மார்பக் கிளினிக்குகள்.

* புற்றுநோய் ஆரம்பக் கண்டுபிடிப்பு நிலையம்.

மார்பகத்தில் ஏற்படும் எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டியல்ல, ஆனால், எந்த மார்பகக் கட்டிகளும், புற்றுநோய் கட்டிகளாக மாறலாம்.

தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள்! வெற்றியாளராக வலம் வாருங்கள்.

உங்கள் மார்பங்களில் வழமைக்கு மாறான அவதானிக்கக் கூடிய மாற்றங்கள் காணப்பட்டால் பெண்களே உடனடியாக கவனத்தில் கொண்டு தகுந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளுங்கள்.

– லில்லி நாதன்

Published by

Leave a comment