பேர்லின்: ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜேர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அகதிகள் விவகாரம் தொடர்பில் ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகள், அவர்களை கண்டுபிடிக்க உதவலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனிக்குள் வரும் குடியேறிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை வழங்கி, அவர்களது தகவல்களை சேகரித்து வைப்பதன் மூலம் அவர்கள் தங்களை மீளப்பதிவு செய்துக்கொள்வதை தடுக்கும் ஒரு முறையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பரிந்துரையில் அடங்கும்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் வெளிநாட்டவர்கள் தமது குடும்பத்துடன் இணைவதை கட்டுப்படுத்தும் புதிய விதிகளும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி கொலோன் நகரில் நடைபெற்ற புதுவருட பிறப்புக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களின்போது, பெரும்பாலும் குடியேறிகளாக வந்த ஆண்கள், தங்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி பொருட்களை திருடிச் சென்றார்கள் என ஜேர்மனிய பெண்கள் பலர் முறைப்பாடு செய்தது இவ்வாறான புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசை தூண்டியுள்ளது.