கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல்ஹுசைன், இந்நாட்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் எவரையும் சந்திக்காமல் சென்றமையானது அவர் நீதி நெறியிலிருந்து தவறியுள்ளதாகவே நான் கருதுகிறேன் என முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்திற்கு அண்டைய நாடாக இருக்கும் ஜோர்தான் நாட்டின் இளவரசராக உள்ள அவர், உலகில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை நன்கு உணர்ந்தவராகவே நிச்சயம் இருப்பார்.
அத்தகைய ஒருவர் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை நிச்சயம் அறிந்திருப்பார். அப்படியிருக்கையில் அவர் தனது விஜயத்தின்போது முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளை அல்லது நேரடியாகவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்காமையானது கவலை தரும் விடயம் எனவும் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஆணையாளரது முதல் கடமை மக்களது குறைகளைக் கேட்டறிந்து கொள்வதே. ஆனால் அதிலிருந்து அவர் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களால் இவரிடமே தமது குறைகளைக் கூற முடியாவிட்டால் அம்மக்கள் எங்கே சென்று தமது குறைகளைக் கூறுவது எனவும் அஸ்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் பற்றிக் கூறிய அஸ்வர், மஹிந்த ஒருபோதும் முஸ்லிம் மக்களை நட்டாற்றில் விடமாட்டார் எனவும் அவருடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகத்திற்குப் பலவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் கூறினார்.

Leave a reply to FCareem Cancel reply