சரத் பொன்சேகா மீண்டும் நாடாளுமன்றத்தில்

sarath_fonsekaகொழும்பு: முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 4 ஆண்டுகளின் பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆளும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த அமைச்சர் எம்.கே.டி. எஸ். குணவர்தனவின் மறைவு காரணமாக ஏற்பட்டிருந்த பதவி வெற்றிடத்திற்கே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இவரது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
இதன்படி, இன்று பிற்பகல் நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இணைந்து கொண்டது. புதிய கூட்டணி ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

2010-ம் ஆண்டு ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டு சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு முதற்தடவையாக தெரிவாகியிருந்தார்.
பின்னர், 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்ற தீர்ப்பொன்றின் காரணமாக 3-ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார். இதன்காரணமாக நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலையில் அந்த பதவியை அவர் இழந்திருந்தார்.

2013-ம் ஆண்டில் பொது மன்னிப்பு பெற்று விடுதலையான நிலையில், அந்தப் பதவியை மீளப் பெறுவதற்கு நீதிமன்றத்தை அவர் நாடியிருந்த போதிலும் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்திருந்தது.

புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் அவர் தோல்வியை தழுவியிருந்தார்.
அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட வென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment