- ஹாசிப் யாஸீன்
கல்முனை: கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இக்காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்கும். இவ்விடயம் சம்பந்தமாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை அம்பாறைக்கு இடமாற்றுவது சம்பந்தமான சந்திப்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதி அமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட குழுவினருக்கும்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அதுகொரலவுக்குமிடையே இன்று (09) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள அவரது அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் பற்றி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில்,
கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்றுவது சம்பந்தமாக அம்பாறை மாவட்டத்தில் பெருன்பான்மை அரசியல் பலம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கமால் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்ததுடன் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது காரசாரமாக தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறான இன ரீதியான சிந்தனையினால் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அரச காரியாலயங்களை இடமாற்றுவது அல்லது மூடுவது போன்ற நடவடிக்கையினால் மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசின் மீதுள்ள நம்பிக்கை எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும்.
கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயத்தில் நாளாந்தம் அதிகமானோர் பயிற்சிகளை பெற்று வெளியேறுகின்றனர். இதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இலங்கையில் கூடுதல் வருமானம் உழைக்கின்ற மற்றும் கூடுதலான பயிற்சியாளர்களைக் கொண்டு இயங்குகின்ற காரியாலயங்களில் கல்முனைக் காரியாலயமும் ஒன்றாகும்.
இவ்வாறான காரியாலயத்தை இடமாற்றுவதன் மூலம் இதில் பயிற்சிகளை மேற்கொள்கின்ற இளைஞர்;களும், யுவதிகளும் பெருமளவு பாதிக்கப்படுவர் என பிரதி அமைச்சர் ஹரீஸ் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தலதா அத்துகொரள, கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.
மேலும் தற்போது இயங்கிவரும் இக்காரியாலய வாடகை செலவீனத்தால் பணியகம் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து தற்போது இயங்கிவரும் கட்டிடத்தினை மாற்றி கல்முனையில் வேறு ஒரு கட்டிடத்தில் இவ்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை மாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
Leave a comment