ஏறாவூர்: நான் அரசியல் வாதியாக உயர்ந்தவர்களை விட ,கல்வி ரீதியாக உயர்ந்தவர்களை மிகவும் மதிப்பவன்.
சிறிய வயதிலேயே தந்தையை இழந்த நான் ,எனது தாயின் அயராத உழைப்பால் ஆளாகிக் கொண்டிருப்பவன். க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கல்விகற்று பொறியியல் துறைக்கு தெரிவாகி பல்கலைக் கழகமொன்றில் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருப்பவன்.
எனது பாடசாலை ,வருடா வருடம் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி செல்லும் மாணவர்களை கௌரவிப்பது வழக்கம்.ஆனால் எங்களது கல்வியாண்டில் தெரிவான மாணவர்களை கௌரவிக்க பாடசாலையில் தாமதமானாலும்,அடுத்த வருடம் தெரிவான மாணவர்களையும் உள்ளடக்கியதாக எங்களை கௌரவிக்க இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனமகிழ்ந்தாலும்,அரசியல் வாதிகளை அதிதிகளாக எடுத்து கௌரவிப்பு விழாவின் நோக்கத்தை திசை திருப்பி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுந்தது.
ஆனால் விழாவுக்கு பிரதம அதிதி கிழக்கு மாகான கல்விப் பணிப்பாளராகிய நீங்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்வுற்றேன்.
அது மாத்திரமின்றி அரசியல் கலப்படமற்ற விழா என்ற வகையிலும் ,உங்கள் கையால் மெடல் அணியும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் போகின்றது ; அதைக் கண்டு எனது தாயும் பூரிக்கப் போகின்றார்
என புளகாங்கிதம் அடைந்தேன்.
அந்தநாள் விரைவில் வராதா என ஏங்கினேன்.நாளும் வந்தது.ஆனால் பல்கலைக் கழகத்தில் பரீட்சை நடைபெறப்போகும் காலத்தில் இந்நாள் வந்தது என்றாலும்,உங்களுக்காக அந்நிகழ்வில் நான் பங்குபற்றுவதை என் மனம் கட்டாயமாக்கியது.
06-02-2016 அதிகாலை மகிழ்ச்சியாக புலர்ந்தது.அழகாக உடுத்து விழாவுக்கு வந்தால் ,அரங்கம் பிரதம அதிதியின்றி சோபை இழந்ததாக என் கண்களுக்குள் தெரிந்தது.
மாணவர்கள் மத்தியில் சலசலப்பு ,…நிசாம் சேர் வரவில்லையாம் …அரசியல் தலையீடாம் ……???அவர் குறிப்பிட்ட அரசியல் வாதியின் ஆளாம் ….அவர் போக வேண்டாமென தடுத்து விட்டாராம் …என எல்லோர் மத்தியிலும் இதே கிசு,கிசுப்பு ….ஏற்பாட்டாளர்களை அணுகினோம்….அவர்களும்…சேருக்கு அவசர வேலையாம் ,வரமுடியாதாம் …..என்றார்கள்.
இப்பேச்சுக்கள் அனைத்தும் என்னை சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது.
இவ்விழாவில் எனக்கு உங்களால் பதக்கம் அணிவிக்கப்படவிருப்பதை பார்வையிட வந்த எனது தாயார் விழாவிலிருந்து நழுவிச் செல்வதை அவதானித்து ஒரு துளி கண்ணீர் சிந்திவிட்டேன்.
நான் ,இன்றுவரை சிறந்த கல்வி அதிகாரி என நினைத்திருந்த நீங்களும் அரசியலுக்கு அடிமையானவர்தானா ?….கல்வியால் உயர்ந்தவர்களும் அரசியல் வாதிகளிடம் சோரம் போனவர்கள்தானா ? அவர்களுக்கென்று சுய சிந்தனை ,செயற்பாடு கிடையாதா ?என என்னை பலவாறு யோசிக்க வைத்தது.
எனக்குள் இருந்த ஆர்வம்,மகிழ்ச்சி அத்தனையும் காற்றுப்பட்ட பஞ்சுமிட்டாய் போலானது.
என்னைப்போல் அங்கு வந்திருந்த எத்தனையோ மாணவர்கள் தங்கள் ஏக்கங்களை ,எண்ணங்களை விரக்தியோடு பகிர்ந்து கொண்டார்கள்.
எங்களது அலிகாரின் ஆசிரியர்களை நிலைமையை பார்க்கும் போது இன்னும் பரிதாபமாக இருந்தது.
பிரதம அதிதியான உங்களின் வருகைக்காக விழா ஏற்பாடுகளை பார்த்து,பார்த்து செய்தார்கள்.ஆனால் …..இறுதியில் பந்தலுக்கு மாப்பிள்ளை வராத திருமணம் போல விழா ஆகிவிட்டது.
இவ் விழா களைகட்ட வேண்டும் என்பதற்காக சலிக்காது ,சளைக்காது இரவுபகல் பாராமல் உழைத்த அலிகாரின் விழாவை ,களை இழந்த விழாவாக ஆக்கி விட்டீர்களே !அந்த புகழ் உங்களயே சாரும்.வாழ்க உங்கள் மாகான கல்விப்பணி.
எனவே கல்விக்கு காவலனாக விளங்கும் நீங்கள் எங்களைப் போன்ற சின்னஞ் சிறுசுகளின் மன எழுச்சிகளுக்கும் ,மதிப்புக் கொடுங்கள்.மேல்மட்ட சிந்தனைகளுக்கு மாத்திரம் உங்களை சிறைப்படுத்திக் கொள்ளாமல் அடிமட்டம் வரை கவனதிலெடுங்கள்.அரசியல் சாயம் நமக்கு வேண்டாம்.நாம் வெள்ளை நிறத்துடன் என்றும் இருப்போம்.இனிமேல் இவ்வாறான ஏமாற்று வேலைகளை எந்த விழாவுக்கும் செய்துவிடாதீர்கள்.
நன்றி
இப்படிக்கு
அலிகாரிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு சென்றுள்ள பொறியியல் துறை மாணவன்,

Leave a comment