கல்முனை புதிய நகர அபிவிருத்தியின் பங்காளர்களாக தமிழ் மக்களும் இணைந்து கொள்வர் – அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை

  • ஹாசிப் யாஸீன்

hakeem kalmunaiகல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தியின் பங்காளர்களாக தமிழ் மக்களும் இணைந்து கொள்வார்கள். இவ் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினதும், அரசியல் தலைமைகளினதும் சந்தேகங்கள் களையப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, தேசிய நீர்வளங்கள், வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாகவும், கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும் அம்பாறை மாவட்ட திணைக்களத் தலைவர்களுடன் ஆராயும் உயர்மட்ட மாநாடு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் வெள்ளிக்கிழமை (22) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.அமீர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

hakeem kalmunai

இம்மாநாடு பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சார் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொத்துவில், லகுகல, பாணம, கரங்கோ வட்டை ஆகிய பிரதேசங்களில் நெற் செய்கை பண்ண முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அக்காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கல்முனை புதிய நகர அபிவிருத்தியினை துரிதப்படுத்த அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் இதற்கான அனுமதிகளை உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், இவ் அபிவிருத்திற்கு காணிகளை சுவீகரித்தல், அது தொடர்பான பிரச்சினைகளை கையாளுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தடுப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு அறிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அபிவிருத்தியினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்துள்ள நிலையில், இதனை உரியவர்களிடம் பேசி தீர்த்து அவர்களையும் இவ் அபிவிருத்தியின் பங்காளர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment