மூக்குடைபட்ட வை.எல்.எஸ்: நீதிமன்றில் தடைமனு நிராகரிப்பு

  • ஏ.எச்.எம்.பூமுதீன்

Rishadகொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை இரத்துச் செய்யுமாறும் புதிதாக தெரிவான செயலாளரை இடை நிறுத்துமாறும் கோரி வை.எல்.எஸ். ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தடை மனுக் கோரிக்கை இன்று (21) நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை மனு வழக்கை வை எல். ஏஸ் ஹமீட் நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்றைய வழக்கிற்கு வை.எல்.எஸ் ஹமீட் மட்டுமே அவர் சார்பாக வந்திருந்தார். மறுபக்கம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட பிரதியமைச்சர் அமீர் அலி, புதிய செயலாளர் சுபைதீன் அடங்கலான அ.இ.ம.கா உயர் பீட உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

வழக்கை தாக்கல் செய்திருந்த வை.எல்.எஸ்.ஹமீட் , பேராளர் மாநாட்டை நடத்துவதற்கோ புதிய செயலாளரை தெரிவு செய்யவோ பெரும்பாண்மை ஆதரவு ரிசாத் அணியினருக்கு இல்லை என குறிப்பிட்டிருந்ததுடன் சூறா சபையின் மொத்த உறுப்பினர்கள் ஏழு பேரில் நால்வர் இராஜிநாமா செய்து விட்டனர் என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

Rishad

இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான், வை.எல்.எஸ். ஹமீடின் தடை மனுக் கோரிக்கை குழப்பகரமானதாகவும் தெளிவற்ற நிலையிலும் உள்ளது என சுட்டிக்காட்டி, வை.எல்.எஸ்ஸினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் பலவீனமாக உள்ளது என தெரிவித்தும் குறித்த தடைமனுவை நீதிபதி உடனே நிராகரித்தார்.

அத்துடன் மார்ச் 23ம் திகதிக்கு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்றும் நீதவான் அறிவித்தார்.

நீதிமன்றத்தில் அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் அருகருகில் அமர்ந்திருந்த போதிலும் இருவரும் உரையாடிக் கொள்ளவில்லை.

வழக்கு விசாரணை நிறைவடைந்து அனைவரும் வெளியே வந்த போது, கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி அங்கு நின்றவர்களை நோக்கி ‘ எங்கே வை.எல்.எஸ?. அவரை வரச்சொல்லுங்கள். அவரின் பிரச்சினை என்னவென்று பார்ப்போம் என்று கூறி ஒருவரை அனுப்பிய போது, முகத்தை மறைத்துக் கொண்டவராக நீதிமன்ற வளாகத்தை விட்டே வை.எல்.எஸ் ஓடிச் சென்றதை இங்கு அவதானிக்க முடிந்தது.

வை.எல்.எஸ்ஸூக்கு பக்கபலமாக இருந்த கட்சியை அழிக்க வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் சுபைர் நீதிமன்ற பக்கமே முகம் காட்ட வில்லை என்பதும் சுபைரும் வருவார், தனக்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த வை.எல்.எஸ் வளாகத்தில் அநாதையாகி ,ஏமாந்து , மூக்குடைபட்டு நின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment