கொழும்பு: சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் பல நடைமுறையிலுள்ள நிலையில், போர்ட் சிட்டி என்றழைக்கப்படும் துறைமுக நகரத் திட்டம் அதில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார். இந்த திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையில் சீனாவின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்தோடு இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ளும்படி சீன வர்த்தகர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்சவின் முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதனால் தேசிய பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சார்ந்தவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதன் பின்னணியில், துறைமுக நகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்து வந்துள்ளது.