சிட்னி: இந்தியாவை அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி அதில் ஒரு புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகள் அணி உள்ளூரில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து 18 வெற்றிகளைப் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளது அவுஸ்திரேலியா. நேற்று இந்தியாவுக்கு எதிரான 4வது போட்டியில் கிடைத்த வெற்றியானது, அவுஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் கிடைத்த தொடர்ச்சியான 19வது ஒரு நாள் வெற்றியாகும். இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகளின் சாதனையை அது தகர்த்துள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அவுஸ்திரேலியாவின் வெற்றிக் கணக்கு தொடங்கியது. இது 2016 ஜனவரி 20ம் தேதி உலக சாதனையாக மாறியுள்ளது.இந்த சாதனைப் பட்டியலில் மைக்கல் கிளார்க் தலைமையிலான அணி சந்தித்த உலகக் கோப்பைப் போட்டிகளும் அடக்கமாகும்.
மைக்கல் கிளார்க் தலைமையில் தொடங்கிய சாதனைப் பயணம், தற்போது ஸ்டீபன் ஸ்மித் தலைமையில் உலக சாதனையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூரில் அதிக அளவிலான தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற சாதனை அணிகள் விவரம்: ஆஸ்திரேலியா 19, மேற்கு இந்தியத் தீவுகள் 18, இலங்கை 17, தென் ஆபிரிக்கா 16, தென் ஆப்பிரிக்கா 14.