ஈமானிய உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு

  • முஹம்மது நியாஸ்

Sahih-Muslim[1]இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளுக்கு கல்லெறி தண்டனை வழங்குவது தொடர்பாக ஒரு தொடர் கட்டுரை எழுதி வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கட்டுரைக்கான மேற்கோள்களை சேகரிப்பதற்காக ஸஹீஹ் முஸ்லிம் என்னும் நபிமொழிக்கிரந்தத்தை புரட்டிக்கொண்டிருக்கும்போது கீழுள்ள இந்த சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. இந்த வரலாறை மார்க்க அறிஞர்கள் பலருடைய சொற்பொழிவுகளின் வாயிலாக செவியேற்றிருந்தாலும் கூட உணர்வு ரீதியாக ஒரு உள்ளச்சத்துடன் வாசித்தபோது உறுப்புக்களும் உணர்வுகளும் சில நிமிடங்கள் உறைந்துதான் போயின.

பாவச்செயல்கள் என்பவை நமது மூக்கின் நுனியில் மொய்த்துவிட்டுப்பறந்து செல்கின்ற ஒரு கொசுவின் இறக்கையளவு கூட பெறுமதியற்றதாக எண்ணி வாழ்கின்ற நமது வாழ்க்கை முறைக்கு முன்னால் நபிகளாருடைய தஃவாக்களத்தில் கட்டுறுதி கொண்டு வாழ்ந்த ஸஹபா சமூகத்தின் ஈமானிய நெஞ்சுறுதியை நினைக்கின்றபோது உரோமங்கள் சிலிர்க்கின்றன.

இதுதான் அந்த நபிமொழி

விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அழ்ழாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்’ என்று கூறினார். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, ‘இவளை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார். பின்னர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.(3501)

தான் ஒரு பச்சிளம் குழந்தைக்கு தாய் என்ற ஸ்தானத்திலுள்ள பெண் எனும் பொறுப்பு, தான் செய்த ஒரு பாவச்செயலுக்கான தண்டனையை இவ்வுலகில் பகிரங்கமாக பெறுகின்றபோது அதன் மூலம் சமுதாயத்தில் கிடைக்கப்பெறுகின்ற இழிவான பார்வை, கற்களால் எறிந்து கொலை செய்யப்படுகின்றபோது தன்னுடலில் ஏற்படுகின்ற அதியுட்சபட்ச வேதனை, இவ்வுலகை விட்டும் பிரிந்து மரணத்தை தழுவிக்கொள்ளப்போகிறோம் என்ற கவலை என்று எந்தவொரு உலகாதாய நோக்கங்களையும் காரணங்களையும் சிந்தனைகளையும் கணக்கில் கொள்ளாது மறுமையில் அழ்ழாஹ்வின் சந்நிதானத்தை மாத்திரம் பயந்த ஒரு முஃமினாக நபிகளாருடைய சபையில் சமூகமளித்து தனக்கான தண்டனையை தானே கேட்டுப்பெற்றுக்கொண்ட அந்த ஈமானியப்பெண்ணுடைய இறையச்சத்தை எந்தவொரு வார்த்தைகளாலும் வர்ணித்துவிட முடியாது.

Sahih-Muslim[1]

தான் இவ்வுலகில் ஒரு விபச்சாரி என்ற பட்டத்தை சுமந்துகொண்டாலும் நாளை மறுமையில் அழ்ழாஹ்வின் சந்நிதானத்தில் எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் அந்த இறைவனுடைய திருப்பொருத்தத்தை பெறுவதை மாத்திரமே ஒரே நோக்காகக்கொண்டு வாழ்ந்த அந்த ஈமானியப்பெண்ணுடைய இறையச்சத்திற்கு முன்னால் நமது உள்ளங்களில் இருக்கின்ற இறைவிசுவாசம் என்பது ஒப்பீடு செய்கின்ற அளவுக்கும் கூட பெறுமதியானதல்ல.

கற்களால் எறிந்து கொலை செய்தல் என்பதை நாம் ஒரு சம்பவமாக அல்லது இறைவனின் சட்டமாக மாத்திரமே படித்தறிகிறோம். ஆனால் ஒரு இளம்பெண்ணை மக்கள் புடை சூழ நட்டநடு மைதானத்தில் வைத்து மரணிக்கும் வரை கற்களால் எறிந்துகொண்டே இருப்பதென்பதும் அந்த வேதனையை தன்னுடைய உடலால் தாங்கிக்கொள்வதும் ஒரு சாதாரண விடயமல்ல. ஆனாலும் தான் செய்த தவறுக்காக அத்தண்டனையையும் வேதனையையும் வலியவே வந்து கேட்டுப்பெற்றுக்கொண்ட அந்த ஸஹாபியப்பெண்ணுடைய ஈமானிய கட்டுறுதி நம்மைப்போன்ற மனிதர்களுக்கு எத்தனை தலைமுறைகள் எடுத்தாலும் சாத்தியப்படுமா என்பது சந்தேகமே…..

அவ்வாறு மரணித்துப்போன அப்பெண்ணுடைய ஜனாஸா தொழுகையினை நிறைவேற்றுவதற்காக நபிகளார் (ஸல்) அவர்கள் தயாரானபோது உமர் (ரலி) அவர்கள், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?’ என்று கேட்டார்கள். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேருக்கு அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அழ்ழாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?’ என்று கேட்டார்கள்.

தான் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மேற்கொண்ட பாவகாரியத்தை இவ்வுலக வாழ்வில் கிடைக்கப்பெறுகின்ற அற்பத்தனமான மதிப்புக்களுக்காகவும், கௌரவங்களுக்காகவும் மூடிமறைக்கின்றபோது நாளை மறுமையில் அழ்ழாஹ்விடத்தில் கிடைக்கின்ற தண்டனையோ மிகவும் கொடியது என்பதை உள்ளத்தால் உணர்ந்துகொண்டதன் விளைவே அப்பெண் தன்னுடைய தவறை தானே ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனையை கேட்டுவாங்கிக்கொண்டதன் வெளிப்பாடாகும்.

அதன் காரணமாகத்தான் அப்பெண்ணுடைய ஈமானிய உணர்வை மதீனா நகரத்திலுள்ள எழுபது இறைவிசுவாசிகளுக்கு போதுமானளவு பங்கிட்டுக்கொடுக்கமுடியும் என்று நபிகளார் (ஸல்) அவர்கள் உத்தரவாதம் வழங்கினார்கள். ஸுப்ஹானழ்ழாஹ்….

விபச்சாரிகளுக்கு கல்லெறி தண்டனை வழங்குவதற்கு நபிகளாரின் வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் ஒரு சான்றாக இந்த சம்பவம் இருந்தாலும் கூட இதன் மூலம் நம் ஒவ்வொருவருடைய இறைவிசுவாசத்தையும் இறைவனுக்கு மாறு செய்கின்ற விடயத்தில் நமது உள்ளங்கள் எந்தளவுக்கு நம்மோடு ஒத்துழைக்கின்றன என்பதையும் சற்று ஆழமாக சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இன்றைய நமது சமூக சூழலில் இஸ்லாமிய சமூகத்திற்குள்ளேயே இருந்து இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு அழ்ழாஹ்வின் சட்டங்களை விமர்சிக்கின்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அன்றைய ஸஹாபா சமூகம் இந்த இறைசட்டத்தை நிலை நாட்டுகின்ற விடயத்தில் தங்களுடைய இன்னுயிர்களையே தாமாக முன்வந்து அர்ப்பணித்த வேதனை மிக்க வரலாறுகளை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே நபிகளாருடைய ஈமானிய பயிற்சிப்பாசறையில் பண்பட்ட அந்த ஸஹாபா சமூகம் நம்மைப்போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வுலக வாழ்க்கையை ஆதரவு வைத்து வாழ்ந்ததில்லை. மாறாக இவ்வுலக வாழ்வின் சுகபோகங்கள் அனைத்தையும் ஒரு பொருட்டாகவே கருதாமல் மரணத்தின் பின்னரான நிரந்தர வாழ்வை மாத்திரமே இலக்கு வைத்து வாழ்ந்துவந்த ஒரு உன்னதமான சமுதாயம் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s