- எஸ். எச். எம். ரிஸ்வி LL.B, AAL
கள்ளக் கடத்தல் வியாபாரம் இஸ்லாத்தின் பார்வையில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றா என்ற விவாதாம் இன்று சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ள நிலையில் சில உலமாக்கள் இவ்வியாபாரம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இவர்கள் அரசினால் விதிக்கப்படும் வரியை மாத்திரம் காரணம் காட்டி அத்தகைய வரி விதிப்புக்கள் இஸ்லாத்தில் இல்லை, ஆகவே கள்ளக் கடத்தல் வியாபாரத்திற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் கள்ளக் கடத்தல் வியாபாரத்தின் மூலம் பொருளாதார ரீதியாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன, அதன் சமூக ரீதியான தாக்கங்கள் என்ன என்பதை இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
அரசினால் விதிக்கப்படும் வரியே கள்ளக் கடத்தல் இடம்பெற முக்கிய காரணம் ஆயினும் கள்ளக் கடத்தல் வியாபாரம் சட்டத்தினால் தடுக்கப்படுவதட்கு வரி செலுத்தாமை என்பது மாத்திரம் காரணமல்ல. பொருளாதார ரீதியில் நோக்கினால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே வீழ்ச்சியடையச் செய்யும் அளவுக்கு கள்ளக்கடத்தல் வியாபாரம் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியாளர்களை, உள்நாட்டு வர்த்தகர்களை, உள்நாட்டு நுகர்வோரை பாதுகாப்பதே கள்ளக்கடத்தல் வியாபாரம் சட்டத்தினால் தடுக்கப்படக் காரணமாகும்.
வெளிநாட்டிலிருந்து கள்ளக்கடத்தல் முறையில் பொருட்கள் உள்நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்படுகின்ற போது அப்பொருள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் எனில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள், அப்பொருள் உள்நாட்டில் வர்த்தகம் செய்யப்படும் பொருள் எனில் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் ஏனெனில் கள்ளக்கடத்தல் செய்யப்படும் பொருள் உள்நாட்டு சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படலாம் அல்லது கூடிய விலையில் விற்கப்படலாம்; குறைந்த விலையில் விட்கப்படின் அது உள்நாட்டு வியாபாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும். கூடிய விலையில் விட்கப்படினும் அது ஒரு வெளிநாட்டுப் பொருள் என்ற வகையில் அதற்கான கேள்வி அதிகமாவே காணப்படும். அச்சந்தற்பத்திலும் உள்நாட்டு வியாபாரம் பாதிப்படையும். இதனால் உள்நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்து வேலையில்லத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
மேலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளின் தரம் எவ்வளவு என்பது எவராலும் ஊகிக்க முடியாது. ஏனெனில் அது அரச தரக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வரி செலுத்தப்பட்டு வருகின்ற பொருள் அல்ல. குறிப்பாக உணவுப் பொருட்கள் கள்ளக்கடத்தல் மூலம் உள்நாட்டுக்கு கொண்டுவரப் படுகின்ற போது அப்பொருள் உள்நாட்டில் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் உள்நாட்டிருந்து ஒரு பொருள் வெளிநாட்டுக்கு கள்ளக்கடத்தல் செய்யப்படுகின்ற போது உள்நாட்டுச் சந்தையில் அப்பொருளின் நிரம்பல் (supply) குறைவடைகின்றது. இதனால் உள்நாட்டுச் சந்தையில் அப்பொருளுக்கான விலை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
எது எவ்வாறாயினும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களாகியே நுகர்வோரே. முக்கியமாக கள்ளக்கடத்தல் வியாபாரம் மூலம் அரசின் வரி வருமானாம் இழக்கப்படுவதால் மக்களுக்கான அரசின் பொது சேவைகள் குறைவடைகின்றன. இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
மேலும் தங்கம் கடத்தல் செய்யப்படுகின்ற போது பெரும்பாலும் களவுத் தங்கமே கடத்தல் செய்யப்படுகின்றது. ஏனெனில் களவெடுத்த தங்கத்தை உள்நாட்டில் விற்பனை செய்கின்ற போது வியாபாரியும் குற்றத்திற்கு ஆளாகவேண்டி ஏற்படும். இது கள்ளனுக்கும் உதவி செய்கின்ற நடவடிக்கையாகும்.
இறுதியாக கள்ளக்கடத்தல் வியாபாரம் செய்வோர் அதிக லாபம் ஈட்ட அதே வியாபாரத்தை சட்ட ரீதியாக செய்யும் வியாபாரிகள் குறைந்த இலாபம் ஈட்டுகின்றார்கள். இதனால் சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு நிலை மேலும் மேலும் அதிகரிக்கிறது.
Leave a comment