தங்கம் கடத்துவது தொடர்பில் அஸ்பர் மௌலவி தெரிவித்த(?) கருத்துக்கள் தொடர்பாக…

  • முஹம்மது நியாஸ்

goldதங்கம் கடத்துவது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா என்னும் தொனியில் அமைந்த ஒரு வாதப்பிரதிவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் அலைமோதிவருவதை நாம் காண்கிறோம். நேற்றையதினம் அதாவது 15: 01: 2016 காத்தான்குடி குபா ஜும்மா பள்ளிவாயிலில் மௌலவி BM. அஸ்பர் (பலாஹி) தெரிவித்ததாக கூறப்படுகின்ற கருத்துக்களை மேற்கோள்காட்டி இந்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக இருக்கிறது.

குறித்த ஜும்மா உரையில் அஸ்பர் மௌலவி எவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது இதுவரைக்கும் ஒலிப்பதிவாகவோ அல்லது நேரடி சாட்சிகள் வாயிலாகவோ முறையாக என்னை வந்து சேரவில்லை. அனாலும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்ற கருத்துக்களை வைத்துப்பார்க்கின்றபோது ஒரு விடயம் பளிச்செனப்புலப்படுகிறது.

அதாவது இஸ்லாமிய சட்ட முறைமைகள் அமுலில் இல்லாத மாற்றுசமய மக்களால் நிருவகிக்கப்படுகின்ற நாடுகளில் அமுலில் இருக்கின்ற ஒரு சட்டத்தை அமுல்ப்படுத்துவதும் அதை மீறுவதும் ஒரு முஸ்லிமுடைய மறுமை வாழ்வில் எதுவித தாக்கங்களையும் ஏற்படுத்தாது என்பதைத்தான் அஸ்பர் மௌலவி வெள்ளிமேடையில் பேசியிருக்கவேண்டும் என்பது என்னுடைய சிற்றறிவுக்கு புலனாகிறது. (அழ்ழாஹ் மிகவும் அறிந்தவன்)

அஸ்பர் மௌலவி இந்த விடயத்தைத்தான் பேசினாரா இல்லையா என்ற ஆய்வுகளுக்கப்பால் இன்று முகநூலில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக முடியுமானவரை தெளிவுரைகளை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டியது அழ்ழாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த, கற்றுத்தந்த வழிமுறைகள், சட்டங்களை மாத்திரமேயாகும். அதுதவிர நமது உள்ளங்கள் எண்ணுகின்ற நம்மை சுற்றி இருக்கின்ற மக்கள் இயற்றுகின்ற சட்டங்களோ, விதிகளோ ஒரு முஸ்லிமுடைய மறுமை வாழ்க்கையில் எதுவித மாற்றங்களையும் ஏற்படுத்தாது என்பது ஒரு அடிப்படையான விடயமாகும்.

நானறிந்த வரைக்கும் அல் குர்ஆனையும் நபிகளாரின் ஸஹீஹான அறிவிப்புக்களையும் மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமியப்பிரச்சாரம் செய்யக்கூடிய அனைத்து அமைப்புக்களும் அவ்வமைப்புக்கள் சார்ந்த, சாராத தாயிக்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்துவருகிறார்கள்.

மேலும் அழ்ழாஹ் தன்னுடைய அருள் மறையில் கூறுகின்றபோது,
அழ்ழாஹ் அருள் செய்த சட்டங்களை கொண்டே அவர்களிடையே தீர்ப்பு வழங்குவீராக. அவர்களுடைய மனோ இச்சைகளை பின்பற்றாதீர்கள்.
(அல் குர்ஆன்:05:49) என்று கட்டளையிடுகிறான். இது மாத்திரமன்றி அழ்ழாஹ்வுடைய சட்டங்களை மாத்திரமே ஒரு முஸ்லிம் பின்பற்றவேண்டும் அதற்கு மாத்திரமே கட்டுப்படவேண்டும் என்பதற்கு இன்னும் பல இறைவசனங்கள் ஆதாரமாக அமைந்திருப்பதை நாம் காணலாம்.

அந்தவகையில் ஒரு இஸ்லாமியன் கடைப்பிடிக்கவேண்டியது அழ்ழாஹ்வுடைய சட்ட திட்டங்களை மாத்திரமே என்பது தெளிவாகிறது. இது இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டில் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

ஆனால் இஸ்லாமிய அரசு இல்லாத பிறசமய மக்களால் ஆட்சிக்குட்படுத்தப்படுகின்ற ஒரு நாட்டில் இது சாத்தியமா என்றால் அது முடியாது. காரணம் அங்கே இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்ற, அழ்ழாஹ்வால் வரையறுக்கப்பட்ட சட்ட வரைபுகள் அமுலில் இருக்காது. அந்த வகையில் அவ்வாறான நாடுகளில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அந்த நாட்டு சட்டத்தை குறுக்கறுக்காத வகையிலும் அந்நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலுமே தங்களுடைய இஸ்லாமிய சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் ஒரு குற்றச்செயலை பொறுத்தவரைக்கும் அது நாட்டுக்கு நாடு வேறுபட்டுக்காணப்படுவதை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக நாம் ஒரு வியாபாரத்தை மேற்கொள்ளுகின்ற போது அவ்வியாபாரத்திற்கான உட்புறழ்வு வரியொன்றை நாம் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டும் என்பதை நமது நாட்டில் சட்டமாக வைத்திருக்கிறார்கள். BTT என்ற பெயர் கொண்டு அது அழைக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய ஆட்சி நடைபெறக்கூடிய ஒரு நாட்டில் இவ்வாறான வரிகளை நாம் காணமுடியாது. காரணம் இஸ்லாம் இதுபோன்ற வரிகளை மக்களுக்கு விதிக்கவில்லை. மாறாக ஏழை வரியான ஸகாத் வரியை மாத்திரமே இஸ்லாம் நாட்டுமக்களுக்கு விதித்துள்ளது.

அதுபோன்று வெளிநாட்டில் இருந்து நாம் நமது நாட்டிற்கு வருகின்றபோது அங்கே சில பொருட்களை வாங்கி வருகிறோம். அதற்கு நமது நாட்டில் வரிவிதிக்கப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால் அந்த வரியை நாம் செலுத்தவேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமக்கு இருக்கபோவதில்லை. ஆயினும் நமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும் நாம் வாழும் நாட்டின் சட்டங்களை மதிக்கவேண்டும் என்ற நன்னோக்கத்திற்காகவும் அந்த வரிகளை நாம் செலுத்துகிறோம்.

இவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்படாத எத்தனையோ விதிகளை மற்றும் சட்டங்களை மாற்றுசமய நாடுகளில் வாழ்கின்ற காரணத்தினால் நாம் ஒரு நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவற்றை மதித்து, கட்டுப்பட்டு வாழ்ந்துவருகிறோம்.

இப்போது கேள்வி என்னவென்றால் இவ்வாறான பிறசமய மக்களுடைய ஆட்சியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சில வேளைகளில் அந்த நாட்டு சட்ட விதிகளில் உள்ள கட்டுபாடுகளை மீறுவதால் அது இஸ்லாத்தில் குற்றமாக ஆகுமா என்பதே நம்முன்னால் தொக்கி நிற்கின்ற கேள்வியாகும்.

பொதுவாக இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரைக்கும் அழ்ழாஹ்வுடைய சட்டங்களை மீறாதவரைக்கும் ஒரு முஸ்லிம் குற்றவாளியாக கருதப்படமாட்டான் என்பதே அதன் நிலைப்பாடு. இஸ்லாத்தில் வரையறுக்கப்படாத அதேநேரம் ஒரு நாட்டில் அமுலில் இருக்கின்ற சட்டத்தை ஒரு முஸ்லிம் மீறுகின்றபோது அவன் இந்நாட்டில் வேண்டுமானால் குற்றவாளியாக கணிப்பிடப்படுவானே தவிர நாளை மறுமையில் அழ்ழாஹ்வின் சந்நிதானத்தில் குறித்த விவகாரத்தில் அவன் மீது எதுவித விசாரணைகளும் இடம்பெற மாட்டாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இதை பல உதாரணங்களின் மூலம் விளக்கலாம்.

வியாபாரப்புரழ்வு வரி என்பது நமது நாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் அமுலில் இருந்துவந்த ஒரு சட்டமுறைமையாகும். அவ்வரியை சரிவர செலுத்தாத எத்தனையோ வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றங்களில் வழக்குத்தொடரப்பட்ட வரலாறுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வர்த்தகர்கள் இந்நாட்டு சட்டத்தை அவமதித்தவர்கள் அல்லது சட்டத்தை மீறியவர்கள் என்று கூற முடியுமே தவிர அவ்வாறு மீறியதால் அவர்களுடைய வர்த்தகம் ஹராமானது என்று வாதிடுவதற்கு இஸ்லாமிய மார்க்க ரீதியாக எதுவித முகாந்திரங்களும் இல்லை.

இவ்வுலகில் வியாபார வரி கட்டாத விடயத்தில் நாளை மறுமையில் அழ்ழாஹ் அந்த வியாபாரியை குற்றம் பிடிக்கமாட்டான். காரணம் இஸ்லாமிய சட்டவாக்கத்தில் ஒரு வியாபாரி அரசாங்கத்திற்கு வியாபார வரி செலுத்தவேண்டும் என்னும் சட்டத்தை அழ்ழாஹ் விதிக்கவில்லை. ஆகவே அழ்ழாஹ் குற்றம் பிடிக்காத ஒரு முஸ்லிமை நாம் குற்றம் பிடிப்பது இஸ்லாத்திற்கு முரணானதாகும்..

அதேபோன்று ஒரு நாட்டில் இருந்து நமது நாட்டுக்குள் வியாபாரப்பொருள் ஒன்றை எடுத்துவருகின்றபோது அதற்கு நமது நாட்டு சுங்கத்திணைக்களத்தினால் வரியறவிடப்படுகிறது. அதை நாமும் நமது நாட்டின் சட்டத்தை மதிப்பதற்காகவும் அதை செலுத்தாமல் விடுகின்றபோது ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் அவ்வரியை செலுத்துகிறோம். ஆனால் நாம் வரி செலுத்தியதற்காக மறுமையில் அதற்கான கூலியை அழ்ழாஹ் தரவும் மாட்டான். வரி செலுத்தவில்லை என்பதற்காக அழ்ழாஹ் நம்மை குற்றம் பிடிக்கவும் மாட்டான். காரணம், அந்த வரியறவிடலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை. இஸ்லாமிய ஆட்சி நிலவுகின்ற ஒரு நாட்டில் இந்த வரி கிடையாது. அழ்ழாஹ் அதை விதியாக்கவுமில்லை.

எனவே இவ்வாறு நமது நாட்டின் சட்டவாக்கங்களில் இருக்கின்ற விதிகளை மீறுகின்ற நபர்களை இந்நாட்டு சட்ட மூலங்களும் நீதிமன்றங்களும் வேண்டுமானால் குற்றவாளியாக தீர்ப்பளிக்க முடியுமே தவிர அந்த நபர்களை முஸ்லிம்களாகிய நாங்கள் யாருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க முடியாது. அது கூடாது. அரசாங்கத்திற்கு வரி செலுத்தவில்லை என்பதற்காக ஒரு முஸ்லிம் வியாபாரியை நாம் திருடன் கூறுவதோ, கொள்ளைக்காரன் என்று அழைப்பதோ அல்லது அவருடைய வியாபாரத்தை ஹறாமான வியாபாரம் என்று மார்க்கத்தீர்ப்புக்கூறுவதோ இஸ்லாத்திற்கு முரண்பட்ட ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு வரி கட்டுவது மற்றும் நாட்டு சட்டத்தை மீறுவது இஸ்லாத்திற்கு விரோதமானது ஹறாமானது என்று வாதிட்டால் இலங்கை நாட்டுக்குடிமக்கள் ஆகிய நாம் எல்லோருமே ஏதோவொரு விதத்தில் அந்த ஹறாமான(?) செயற்பாட்டை செய்து கொண்டுதான் வாழ்கிறோம்.

மோட்டார் சைக்கிள் செலுத்துகின்றபோது கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவேண்டும் என்பதும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு தம்முடைய வாகனங்களை ஒப்படைக்கூடாது என்பது இந்நாட்டின் மோட்டார் போக்குவரத்து சட்டங்களில் ஒன்றாகும்.

ஆனால் நம்மில் எத்தனைபேர் இதனை கடைப்பிடிக்கிறோம்? அவசர தேவைக்காக சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கு நமது வாகனங்களை நாம் கொடுப்பதே இல்லையா?

உள்ளக வீதிகளில் அவசர தேவைகளுக்காக தலைக்கவசம் அணியாமல் நாம் சென்றதில்லையா?

பொலிஸ் உத்தியோகத்தர்களை காண்கின்றபோது எதிர் இருக்கின்ற வீதியால் விழுந்தடித்துக்கொண்டு ஒழித்து ஓடுபவர்கள் நாங்கள் இல்லையா?
அப்படியானால் இதற்கெல்லாம் அழ்ழாஹ்விடம் கேள்விகள் இருக்கின்றதா? ஆம் என்றால் எப்போது நாம் இதற்காக அழுது கண்ணீர் வடித்து பாவமன்னிப்புக் கோரியிருக்கிறோம்? ஒருபோதும் இல்லை. காரணம் நம்முடைய இவ்வாறான விடயங்கள் அனைத்தும் நமது நாட்டின் சட்டங்களை மதிப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் அன்றி அது நம்முடைய மறுமை வாழ்க்கையில் எதுவித மாற்றங்களையும் ஏற்படுத்திவிடாது என்று உள்ளங்களே நமக்கு சாட்சி சொல்கின்றன.

அதேபோன்று நமது சகோதரர்கள் எத்தனையோ பேர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகிறார்கள். உதாரணமாக குவைத்திலிருந்து இலங்கைக்கான பயணிகள் விமானத்தில் ஹேன் லக்கேஜ் எழு கிலோக்கள்தான் வரையறுக்கப்பட்டது. அதற்கு மேல் ஒரு கிலோ அதிகரித்தால் அதற்கு இலங்கை நாணயப்படி ஆயிரத்து இருநூறு ரூபாய் வரிசெலுத்தவேண்டும். ஆனால் இலங்கை வருகின்ற நமது சகோதர்கள் எல்லோருமே அந்த சட்டத்தை மதித்து ஏழு கிலோக்கள்தான் கொண்டுவருகிரார்களா? இல்லை, பன்னிரண்டு கிலோ எடையுள்ள ஹேன் லக்கேஜ்களைகூட கொண்டுவருபவர்கள் இருக்கவே செல்கிறார்கள்.

ஹேன் லக்கேஜுடைய ஏழு கிலோக்கு மேற்பட்ட கட்டாய வரிசெலுத்தவேண்டிய அதிகளவான நிறையை வெளிக்காட்டிக்கொள்ளாதவாறு அதனை ஏழு உட்பட்ட நிறையைப்போன்று அலேக்காக தூக்கிக்கொண்டு வருகின்ற எத்தனையோ நமது சகோதர்களை நாம் காண்கிறோம். இது அரசாங்கத்தை ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தெரியவில்லையா?

ஆனால் வரி செலுத்தாமல் பொருட்களை கொண்டு வருவது தேசவிரோதம் என்றும் ஹறாம் என்றும் விமர்சிக்கின்ற யாருமே அப்பொருட்களை விமான நிலைய வீதிகளில் வீசிஎறிந்துவிட்டு வீடு வருவதில்லை. ஆகவே இது நடைமுறைச்சாத்தியமற்றது என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம்.

அவ்வாறு நாம் வரி செலுத்தாவிட்டாலும் அது இந்த நாட்டின் சட்ட விதிகளின் படி குற்றமாக கருதப்படுமே தவிர நாளை மறுமையில் அழ்ழாஹ் அதுபற்றி நம்மிடம் விசாரிக்கமாட்டான் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

அழ்ழாஹ்வின் சட்டத்தை தவிரவுள்ள ஏனைய எந்தவொரு நாட்டிலுள்ள சட்ட வரைபுகளும் முக்காலமும் ஒரே சட்டமாக இருக்கமாட்டாது. அது அந்தந்த நாட்டினுடைய சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார காரணிகளால் அவ்வப்போது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும் என்பதை நாம் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.

இதேபோன்றுதான் தங்க வியாபாரமும் இருந்துவருகிறது.
வெளிநாட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கத்தை எடுத்து வருகின்றபோது அதற்கு வரியறவிடப்படுவது நாமெல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்நாட்டின் சட்டத்தை நிலை நாட்டுவதற்காகவும், மீறுகின்றபோது சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற பயத்தினாலும் அவ்வாறு கொண்டு வருபவர்கள் வரி செலுத்துவதை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு வரி செலுத்துவதை வைத்து ஒருவருடைய இறையச்சத்தை நாம் தீர்மானிக்கமுடியாது. காரணம் அவர் இறைவன் மேலுள்ள அச்சத்தினால் அந்த வரியை செலுத்தவில்லை. காரணம் இறைவன் அவ்வாறு வரி செலுத்துகின்ற சட்டத்தை வரையறுக்கவுமில்லை. மாறாக அவர் அரசாங்கத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாகவே அந்த வரியை செலுத்துகிறார். அதற்காக அவரை நாம் ஈமான்தாரி என்று சொல்ல முடியாது.

அதேபோன்றுதான் அவர் வரி செலுத்தாமல் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வந்து அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டாலும் இந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் படிதான் அவர் குற்றவாளியே தவிர அழ்ழாஹ்வின் பார்வையில் அவர் குற்றவாளியாகமாட்டார். அவரை குற்றவாளி என்று அழைப்பதும் முஸ்லிம்களுக்கு ஏற்புடையதல்ல.

மேலும் உணவுக்காக மாடுகளை அறுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. அது இந்நாளில்தான் அறுக்கப்படவேண்டும், இந்நாட்களில் அறுப்பது கூடாது என்று இஸ்லாம் எதுவித கட்டுப்பாடுகளையும் நமக்கு விதிக்கவில்லை. ஆனால் நாம் வாழ்கின்ற நாட்டினுடைய சட்ட வரைபானது பூரணை நாட்களில் மாடுகளை அறுப்பது கூடாது என்று தடை செய்துள்ளது. பிறசமய மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அந்த சட்டத்தை மதிப்பதென்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது. ஆனால் அதற்காக பூரணை நாட்களில் அறுக்கப்பட மாடுகளை சாப்பிடுவது ஹறாம் என்றோ அவ்வாறு அறுத்தவர் ஹறாமாக பொருளீட்டுகிறார் என்று வாதிடுவது ஏற்புடையதல்ல. பூரணை நாட்களில் மாடுகளை அறுத்ததவர்களோ, அதனை விற்பனை செய்தவர்களோ, அந்த இறைச்சியை சாப்பிட்டவர்களோ அதற்காக நாளை மறுமையில் எதுவித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

அதேநேரம் இந்த வியாக்கியானங்களை காரணமாக வைத்து திருட்டுத்தனமாக மின்சாரம் உபயோகிப்பதையோ அரச பேரூந்துகளில், புகையிரதங்களில் டிக்கட் இல்லாமல் பயணிப்பதையோ நியாப்படுத்தமுடியாது. காரணம் மின்சாரம் என்னும் போது நாம் அரசாங்கத்திடமிருந்து மின்வலு என்னும் பொருளை ஒரு கூறுக்கு இவ்வளவு கட்டணம் என்று விலைபேசி கொள்வனவு செய்கிறோம். அவ்வாறு கொள்வனவு செய்த பொருளுக்கு விலை கொடுப்பது கடமையானது, கட்டாயமானது. எனவே திருட்டுத்தனமாக பெற்ற மின்சார இணைப்பிற்கு இந்த வியாக்கியானத்தை நியாயவாதமாக கற்பிக்க முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.

மேலும் ஒரு பிரயாணத்திற்கு இவளவு கட்டணம் என்று அந்தந்த திணைக்களங்களினால் அறிவிக்கப்பட்டு அதை நாம் ஏற்றுகொண்ட பிறகு அதற்கு மாறாக் அனடப்பது இஸ்லாத்தின் பார்வையில் மோசடியாகும். எனவே அரச, தனியார் வாகனங்களில் கட்டணம் இன்றிப்பயணிப்பதற்கு இந்த விளக்கவுரைகளை தவறாகப்பயன்படுத்தக்கூடாது.

மேலும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை கடத்துவதற்கும் இந்த நியாயவாதங்கள் எள்முனையளவும் பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். காரணம் போதைப்பொருட்கள் இந்த நாட்டின் அரச சட்டவாக்கங்களில் மாத்திரமின்றி இஸ்லாமிய ஷரீஆவிலும் மரணதண்டனை விதிக்கவல்லதொரு குற்றச்செயலாக கருதப்படுகிறது.

எனவே இறுதியாக,
இஸ்லாம் அல்லாத பிறசமயத்தவர்களுடைய சட்ட வரைபுகள் அமுலில் இருக்கின்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வது கட்டாயமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் எதேச்சையாகவோ அல்லது ஏதேனும் காரணங்களினாலோ அந்த சட்ட, நியதிகளை மீறவேண்டிய நிர்ப்பந்தம் ஒரு ஏற்படுகின்றபோது அது அந்த நாட்டினுடைய சட்ட வரைவின் நிரூபணத்தின் கீழேதான் குற்றமாக அமையுமே தவிர அவ்வாறு மீறுகின்ற நபரை இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒருபோதும் தகாத வார்த்தைகளால் பாவிகளாக, நரகவாதிகளாக வர்ணிப்பது கூடாது.

அத்தோடு கடந்த 16: 01: 2016 அன்று காத்தான்குடி குபா ஜும்மா பள்ளிவாயிலின் வெள்ளிமேடையில் வைத்து மௌலவி அஸ்பர் (பலாஹி) நிகழ்த்திய ஜும்மா உரையில் மேலுள்ள இந்த விடயத்தைத்தான் அவர் முன்வைக்க முனைந்துள்ளார் என்று அவர்மீதும் அவருடைய கருத்துக்கள் மீதும் நல்லெண்ணம் வைக்கிறேன். ஆயினும் அவர் முன்வைத்த முறையிலோ அல்லது அந்த முன்மொழிவை செவியேற்ற பொதுமக்களின் சிந்தனையிலோ ஏற்பட்ட கோளாறுதான் இவ்விவகாரம் இவ்வளவு தூரம் பெசுபொருளாக மாறியிருக்கிறது என்பதையும் என்னுடைய ஆய்வுக்குட்பட்ட ஒரு ஊகமாக கருதுகிறேன். (அழ்ழாஹ் மிகவும் அறிந்தவன்)

மேலும் குறித்த ஜும்மா பிரசங்கத்தை நேரில் இருந்து செவிமடுக்காமல் குறைந்த பட்சம் அன்றையதினம் நாட்டில் கூட இல்லாத பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்துகொண்டு வெறும் வாய்வழி வார்த்தைகளை மாத்திரம் செவிமடுத்து அவசியமற்ற கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிரங்கப்படுத்துகின்ற சகோதரர்கள் இவ்விவகாரம் தொடர்பாக குறித்த மார்க்க அறிஞரிடத்திலோ அல்லது அவர் சார்ந்த நிறுவனரீதியாகவோ ஒரு தன்னிலை விளக்கத்தை கோருமாறு ஆலோசனை வழங்குகிறேன்.

இக்கட்டுரையானது சமகால இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய-இஸ்லாம் அல்லாத சட்ட வரைபுகள் தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய சமூகத்தை மாத்திரம் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட ஒரு நன்முயற்சியே தவிர இலங்கை நாட்டுப்பிரஜையாக இருந்து இதன் மூலம் இலங்கை ஜனநாயக சோஷலிசக்குடியரசின் அரசியல் யாப்புக்கள் மற்றும் நீதி, நிருவாக கட்டமைப்புக்களை குறை கூறுவதோ அல்லது அதற்கு எதிரான சக்திகளை தோற்றுவித்து நாட்டில் கலகம் விளைவிப்பதோ அல்லவென்பதையும் இங்கே தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துகொள்கிறேன்.

Published by

Leave a comment