- முஹம்மது நியாஸ்
திருமணமான ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டு அக்குற்றமானது நிரூபிக்கப்பட்டால் அவ்விருவரையும் கல்லெறிந்து கொல்லும்படி இஸ்லாமிய குற்றவியல் சட்டமான ஷரீஆ கட்டளையிடுகிறது. ஆனாலும் சமகாலத்தில் இந்த விடயத்தை சரிவர புரிந்துகொள்ளாத சிலரும், புரிந்துகொண்டாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் சேறு பூசுவதற்காகவே காத்திருக்கின்ற சில போலி முற்போக்குவாதிகளும் முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் நன்னோக்கிலேயே இத்தொடர்கட்டுரை வரையப்படுகிறது.
ஆகவே குறித்த விவகாரம் தொடர்பிலான அறிவையும் தெளிவையும் ஆதரவு வைக்கின்ற சகலரும் இத்தொடர்கட்டுரையின் முதலாவது அத்தியாயம் தொடக்கம் இறுதி அத்தியாயம் வரைக்கும் முன்வைக்கப்படுகின்ற ஒட்டுமொத்த வாதங்கள், கருத்துக்கள் அனைத்தையும் கவனமாக உள்வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு ஆணும் பெண்ணும் விபச்சாரத்தின் பால் நெருங்காமல் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இயற்கையாகவே உடல்ரீதியான ஏற்படுகின்ற எதிர்ப்பாலினத்தேவைப்பாட்டினை முறையாக நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் இஸ்லாமிய மார்க்கம் மிகுந்த கரிசனையுடன் ஏற்படுத்தியுள்ள பயனுள்ள பல வழிகாட்டல்களை, சலுகைகளை இத்தொடர் கட்டுரையின் முதலாவது அத்தியாயத்தில் நாம் பார்வையிட்டோம்.
இப்போது திருமணம் முடித்த ஓர் ஆணும் பெண்ணும் தங்களுடைய ஆகுமாக்கப்பட்ட வாழ்க்கைத்துணையை விடுத்து அந்நிய நபர்களோடு முறைகேடான பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்வதால் குறித்த நபர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் மற்றும் அவர்கள் வசிக்கின்ற பிரதேசங்களுக்கும் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக ஆராய்வோம்.
பொதுவாகவே கணவன் மனைவிக்கிடையிலான உறவென்பது இன, மத, குல பேதங்கள் அனைத்தையும் தாண்டி ஒரு புனிதமான, கட்டுக்கோப்பான, ஒருவரில் ஒருவர் தங்கி வாழக்கூடிய, உடன்படிக்கைகள் பலவும் நிறைந்த இன்னும் பல உவமானங்களாலும் ஒப்பீடுகளாலும் வர்ணனை செய்யக்கூடிய அளவுக்கு ஒரு பின்னிப்பிணைந்த உன்னதமான உறவாகும்.
எந்தவொரு கணவனோ அல்லது மனைவியோ தனக்குச்சொந்தமான பணம் மற்றும் ஏனைய சொத்துக்களில் இருந்து ஏனையோருக்கு தர்மம் செய்வதையோ அல்லது ஏதேனும் உதவிகளை மேற்கொள்வதையோ யாரும் கூடாதென்று வாதிடுவதில்லை. ஒரு பெண் தன்னுடைய மரணம் வரைக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உள்ளத்தாலும், உணர்வுகளாலும் சபதமேற்று தன்னுடைய உடலையும், உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாக அர்ப்பணித்து காலம் முழுவதும் பணிவிடை செய்து வாழ்வதையே ஒரு பாக்கியமாக நினைப்பது தன்னை கரம்பிடித்த கணவனுக்கு மாத்திரமேயாகும்.
அப்பேர்ப்பட்ட தன்னுடைய கணவன், தனக்கு மாத்திரமே ஒதுக்கவேண்டிய பிரத்தியேக உரிமையினை ஒரு அந்நிய பெண்ணோடு பகிர்ந்துகொண்டால் அதை கற்பொழுக்கமுள்ள, மானமுள்ள, சுய சிந்தனையுள்ள எந்தவொரு மனைவியாலும் அனுமதிக்கவோ, ஜீரணிக்கவோ முடியாது.
அதேபோன்று தான் தனக்கான உடல் மற்றும் உணர்வு ரீதியான அத்தனை தேவைப்பாடுகளுக்கும் எதிர்பார்த்து தேர்ந்தெடுத்ததோடு ஒரு ஆணுடைய வாழ்வாதாரத்தின் மிகமுக்கிய பாத்திரமான தன் மனைவி தனக்கு மாத்திரம் கொடுக்கவேண்டிய தன்னுடைய உரிமையை, சுகத்தை பிற ஆடவனோடு பகிர்ந்துகொண்டால் அதை மானமுள்ள எந்தவொரு கணவனும் கடுகின் முனையளவும் கூட ஏற்றுகொள்ளவே மாட்டான் என்பது மனிதகுலமே ஏற்று நடைமுறைப்படுத்துகின்ற உண்மையாகும்.
ஆனால் இன்று கணவன் உயிரோடும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றபோதே மனைவி பிறிதொரு அந்நிய ஆடவனோடு படுக்கையை பகிர்ந்துகொள்கின்ற படுகேவலமான கலாச்சாரத்தை நாம் காண்கிறோம். தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காக மாடாய் உழைக்கின்ற கணவன்மார்களை உதாசீனப்படுத்திவிட்டு அந்நிய ஆடவனோடு வாசற்படி தாண்டிச்செல்கின்ற மனைவிமார்களை நாம் காண்கிறோம்.
மேலும் தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்திற்காக மனைவி, குழந்தைகளின் நல்வாழ்வுக்காக கடல் கடந்துசென்று பாலைவன வெயிலிலும் தாங்கமுடியாத குளிரிலும் ஒரு கணவன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு கஷ்டப்படுகின்றபோது அவனுடைய வருமானத்தில் வாழ்க்கை நடாத்திவருகின்ற மனைவியானவள் அந்நிய ஆடவனோடு படுக்கையை பகிர்ந்துகொள்கின்ற கேவலமான நடைமுறையை நாளுக்கு நாள் நாம் கேள்விப்படுகிறோம்.
இவ்வாறு தன்னுடைய மனைவிக்காக, குடும்பத்திற்காக ஓடாகத்தேய்ந்து ஓர் கணவன் இரவுபகல் பாராது அல்லல் படுகின்றபோது அந்த மனைவியானவள் வெறும் ஓரிரு மணித்தியால உடல் சுகத்திற்காக தனது கணவனுக்கு மாத்திரம் உரித்தான தன்னுடைய உடலை ஒரு அந்நிய ஆடவனிடம் முறைகேடாக ஒப்படைகின்ற துரோகத்தனத்தை மனிதாபிமானமுள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளமுடியுமா?
மேலும் அந்த விவகாரம் குறித்த அந்த கணவனுக்கு தெரியவருகின்றபோது அவனுடைய உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆத்திரத்தை, வெறுப்புணர்வை, விரக்தியான மனோநிலையினை யாருக்கேனும் ஆறுதல் கூறி சமாதானப்படுத்த முடியுமா?
அதேபோன்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தனது கணவனுக்கு பணிவிடை செய்வதையே பாக்கியமாக எண்ணி வாழ்கின்ற ஒரு பத்தினிப் பெண்ணுக்கு அவளுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் முறைகேடான உறவில் ஈடுபவதை அறிந்தால் எந்தவொரு மானமுள்ள பெண்ணாலும் அதை தாங்கிக்கொள்ள முடியுமா?
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அவளுடைய கனவுகள் எல்லாம் கலைக்கப்பட்டு, தன்னுடைய கணவன் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் மரியாதைகளெல்லாம் நொடிப்பொழுதில் தகர்த்தெறியப்படுகின்ற போது அவளது உள்ளத்தில் ஏற்படுகின்ற கொந்தளிப்புக்களை யாராலும் பிழையென்று வாதிட முடியுமா?
இன்றைய நாட்களில் விபச்சாரத்தை நியாயப்படுத்தக்கூடிய, அதற்கான தண்டனையை அகற்றும்படி குரல் எழுப்புகின்ற மனிதநேய(?)வாதிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய நெஞ்சில் கைவைத்து பதில் கூறவேண்டும். விபச்சாரம் செய்தவர்களுக்கு மரண தண்டனையா என்று பத்தாம் பசலித்தனமாக கேள்வி எழுப்புபவர்கள் இதுபோன்றதொரு துரோகத்தனம் தம்முடைய வாழ்க்கையில் நடைபெற்றாலும் மனிதாபிமான எண்ணத்துடன் தம்முடைய வாழ்க்கைத்துணைகளுக்கும் மன்னிப்பளிப்பார்களா?
தங்களுக்கு துரோகமிழைத்துவிட்டு பிறிதொரு நபருடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட தங்களின் வாழ்க்கைத்துணையை எதுவித தண்டனைகளும் இல்லாமல் மீளவும் ஏற்று காலம் முழுவதும் சுமூகமாக வாழ்க்கை நடாத்துவார்களா?
அடுத்தவர்களுக்கு என்று வருகின்றபோது மனித நேயம் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் அதையே தங்களுடைய வாழ்க்கையிலும் செயற்படுத்திக்காட்டுவதற்கு ஏன் முன்வருவதில்லை?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் அனைவருமே ஊடகங்கள் வாயிலாக கேள்விப்பட ஒருசில சம்பவங்களை இங்கே ஞாபகமூட்டுகிறேன்.
நமது அண்டை நாடான இந்தியாவில் தான் காதலித்த தன்னுடைய காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் காதலியுடைய முகத்தில் அசிட் வீசிய கொடூரமான சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்களில் கொலை செய்யப்பட்ட பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.
மேலும் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் கூலிவேலை செய்யும் ஒரு தொழிலாளி தன்னுடைய மனைவி இன்னொரு ஆடவனுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதை கட்டிலில் வைத்தே கையும் மெய்யுமாக கண்டுபிடித்தபோது ஆத்திரத்தில் அவளுடைய தலையை தனியாக வெட்டியெடுத்து ஊர்முழுக்க காண்பித்துத்திரிந்த சம்பவத்தை வீடியோக்கள் வாயிலாக நாமெல்லோரும் பார்த்திருக்கிறோம்.
இது மாத்திரமன்றி தமிழ் நாட்டிலேயே அண்மையில் ஒரு பெண் சொப்ட்வெயார் எஞ்சினீயர் தன்னுடன் பணிபுரியும் ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த கணவன் அப்பெண்ணை தனது வாகனத்தால் மோதிக்கொலை செய்த சம்பவமும் நம்மில் அதிகமானோர் அறிந்த ஒன்றுதான்.
இந்த சம்பவங்களில் இருந்து நாம் பெறுகின்ற படிப்பினை என்ன? இவையனைத்தும் நமக்கு எதனை உணர்த்துகின்றன?
தனக்கு மாத்திரமே உரிமையான தன்னுடைய மனைவி இன்னொரு ஆடவனுக்கு தனது கற்பை பகிர்ந்தளிக்கின்றபோது அதை தாங்கமுடியாத கணவன்மார்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கின்ற முடிவுகள்தான் இவையனைத்துமே. காதலியால் ஏமாற்றப்பட்ட ஒருவனுக்கே அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் அசிட் வீசி அப்பெண்ணை படுகொலை செய்கின்றபோது உணவு, உடை, உறைவிடம் என்று அத்தனை சொத்து சுகங்களையும் கொடுத்து வாழ்வளித்த ஒரு கணவனுக்கு ஒருமனைவி துரோகமிழைப்பது சாதாரண விடயமா?
மேற்படி சம்பவங்களில் எல்லாம் பெண்கள்தான் பாதிக்கப்பட்டிருந்தாலும், கொலை செய்யப்பட்டிருந்தாலும் துரோகம் என்பது இருபாலருக்குமே பொதுவானதுதான். ஆண்கள் வன்முறையை கையிலெடுப்பது போன்று பெண்களால் அதிரடியாக செயற்பட முடிவதில்லை. அதனால்தான் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது விபச்சாரம் செய்கின்ற பெண்கள் மாத்திரம் வன்முறைகளுக்குட்படுத்தப்படுகிறார்கள், ஆண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் இருவருமே கொல்லப்படவேண்டியவர்கள்தான் என்பதை அதனால் பாதிக்கப்பட்ட நபர்களுடைய மனசாட்சி அவர்களுடைய எதிர் நடவடிக்கைகள் மூலம் சான்று பகர்கிறதல்லவா?
இன்று மனிதநேயம் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் கூட தங்களுடைய வாக்கைத்துணை இவ்வாறானதொரு துரோகத்தை தங்களுக்கு இழைத்துவிட்டால் அப்போதும் அதே மனிதநேயத்தை கடைப்பிடிப்பார்களா என்றால் கேள்விக்குறிதான். மான, ரோசமுள்ள யாரொரு ஆணாலும் பெண்ணாலும் அவ்வாறு கடைப்பிடிக்க முடியாது.
எனவேதான் இஸ்லாமிய மார்க்கமானது எந்தவொரு குற்றச்செயலையும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுடைய மனோநிலையை வைத்தே தண்டனைகளை அமுல்ப்படுத்துகிறது.
குப்பைத்தொட்டிக்குழந்தைகள்.
அத்தோடு இன்று நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற, சந்திக்கின்ற ஒன்று பரிதாபம்தான் குப்பைத்தொட்டிக்குழந்தைகள். இவை எங்கிருந்து வருகின்றன? குப்பைத்தொட்டிகள் குழந்தைகளை பிரசவிக்கின்றனவா? குழந்தைகள் ஏன் குப்பைத்தொட்டிகளில் வீசிஎறியப்படுகின்றன?
பிரசவித்து ஒரு நாள், இருநாட்கள் மாத்திரமேயான பச்சிளம் சிசுக்கள் இன்று குப்பைத்தொட்டிகள் தோறும் குவிந்து வருகிறதே இதற்கு யார் காரணம்?
கேவலம் ஆறறிவு படைத்த இரண்டுகால் மிருகங்கள் படுகேவலமாக இணைந்துகொண்டதற்காக குப்பைத்தொட்டியில் வீசி எறியப்பட்ட இந்த பச்சிளம் குழந்தை செய்த பாவம் என்ன?
அந்தக்கொடூரர்களின் காமப்பசிக்காக உலகத்தையே கண்திறந்து பார்த்திராத இந்த பிஞ்சு உயிர் பாவத்தையும் பழியையும் சுமப்பது நியாயமானதா?
இவ்வாறு மண்ணை தொடும் முன்னே மரணத்தை தழுவிகொண்ட பிஞ்சு உயிர்களின் விடயத்தில் இந்த மனிதநேய(?)வாதிகளுக்கு வராத கருணையும் மனித நேயமும் விபச்சாரம் என்னும் கேவலமான பாவத்தின் பயனாக சமூகத்தை சீரழிக்கின்ற காமுகர்களின் மரணத்தில் மாத்திரம் வந்து நிற்பதன் மாயம் என்ன?
விபச்சாரம் செய்தால் “கல்லால் எறிந்து கொல்வதா?” என்று காமக்கொடூரர்களை அடைகாப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு கேள்வி எழுப்புகின்ற மனிதநேய(?)வாதிகள் அந்த ஆறறிவு படைத்த மிருகங்களால் இவ்வாறு குப்பைத்தொட்டிகள் தோறும் வீசி எறியப்படுகின்ற பச்சிளம் பிஞ்சுகளிடத்திலும் சிறிதளவாவது தங்களது மனிதநேய(?)த்தை மனமுவந்து வழங்குவார்களா?
இருட்டறையாகும் குழந்தைகளின் எதிர்காலம்.
இது மாத்திரமல்ல, ஒரு ஆணோ, பெண்ணோ விபச்சாரத்தின் பக்கம் சென்றுவிட்டால் அதன் மூலம் அக்குடும்பத்தில் ஏற்படுகின்ற பிளவுகள், குழந்தைகளுடைய எதிர்காலம் போன்றவைகள் கேள்விக்குறியாகிவிடுகின்றன. மேலும் விபச்சாரிகளால் வளர்த்தெடுக்கப்படுகின்ற குழந்தைகள் கூட எதிர்காலத்தில் தன்னுடைய தாய் தந்தையர்களுக்கு ஒப்பான ஒரு இழிந்த வாழ்க்கையே வாழமுற்படுவது சாதாரணமானது.
தகாத உறவுகள் மற்றும் விபச்சாரத்தின் மூலம் குடும்பங்களில் ஏற்படுகின்ற தகராறுகளால் குழந்தைகளின் எதிர்காலம், கல்வி நடவடிக்கைகள் மாத்திரமல்லாது அக்குழந்தைகளுக்கு சமூகத்தில் கிடைக்கவேண்டிய மரியாதை, கௌரவம் என்பவை கூட மறுக்கப்படுகின்றன.
மேலும் தாய் தந்தையர்களுக்கிடையில் ஏற்படுகின்ற இவ்வாறான விரிசல்களால் உளரீதியாக பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் காலப்போக்கில் வன்முறையாளர்களாக உருவாவது சமூகத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட உடல்ரீதியான முறைகேடான தேவைகளுக்காக மேற்கொண்ட விபச்சாரம் என்னும் கேவலத்தின் பயனை ஒரு பாவமுமறியாத அவர்களுடைய குழந்தைகளும் கூட தலைமேல் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கியமான அவல நிலை இந்த சமூகங்களில் ஏற்படுவதை யாரும் மறுக்கமுடியாது.
ஓரிரு காமக்கொடூரர்கள் ஒழித்துக்கட்டப்படுவதால்தான் எதிர்கால சந்ததியின் வளமான வாழ்க்கை பாதுகாக்கப்படுமென்றால் தன்னுடைய கேவலமான ஆசைகளுக்காக தமது சந்ததியின் எதிர்காலத்தையே நாசமாக்கி குட்டிச்சுவராக்குகின்ற காமுகர்களை கல்லெறிந்துகொல்வதில் இருக்கின்ற தவறுதான் என்ன?
பால்வினை நோய்கள்.
மேலும் இந்த விபச்சாரத்தின் மூலம் தற்காலத்தில் பலதரப்பட்ட சமூக நோய்கள் பரவிவருகின்றன. உதாரணமாக எயிட்ஸ் எனப்படும் உயிர்கொல்லி நோய். உலகிலேயே இதுகாலவரைக்கும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத ஒரு நோயாக இது காணப்படுகிறது. இந்த நோயானது தற்போது உலகாளவிய விகிதாசாரத்தில் ஒரு சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்று மலிந்துவிட்டது. காரணம் முறைகேடான பாலியல் தொடர்பாடல்கள்.
ஒரு விபச்சாரி தனக்கு எயிட்ஸ் நோய் இருப்பதை அறிந்தோ, அறியாமலோ பல பேருடன் சேர்கின்றபோது அந்த ஆள்கொல்லி நோயானது ஒட்டுமொத்த சமூகத்தை, சூழலையே அதள பாதாளத்திற்கு கொண்டு செல்கிறது.
ஒரு ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடுபடுகின்றபோது ஒருவருக்கு எயிட்ஸ் என்னும் இந்த வியாதி இருந்தாலே அது அடுத்தவருக்கும் உடனடியாகவே தொற்றிவிடுகிறது. அந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டு நோய் உறுதிப்படுத்தப்படுவதற்கு ஆறு மாதங்கள் தொடக்கம் சுமார் இரண்டு வருட காலம் தேவைப்படுகிறது. இதற்கிடையில் அந்த விபச்சாரத்தில் பிறக்கின்ற ஒரு பாவமும் அறியாத குழந்தையும் கூட எயிட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு நேரடியாகவே இலக்காகிறது. தன்னுடைய தாய்க்கு எயிட்ஸ் இருப்பது தெரியவரும் முன்னரே தாயும் தந்தையும் செய்த கேவலமான பாவத்திற்காக பிறந்து மூன்று மாதங்களில் அக்குழந்தை எய்ட்ஸ் நோயால் இறக்கின்றதென்றால் இந்த உலகத்தில் இதைவிடப்பெரிய கொடுமையும் கொடூரமும் வேறு என்னதான் இருக்கப்போகிறது?
இத்தனைக்கும் காரணம், வெறும் ஓரிரு மணிநேர உடல் தேவைக்காக ஒரு ஆணும் பெண்ணும் ஈடுபட்ட முறைகேடான பாலியல் உறவைத்தவிர வேறொன்றும் கிடையாது.
இவ்வாறு வளரும் மொட்டுக்களையே பால்வினை நோய்களால் முளையில் கிள்ளிக்கொலை செய்கின்ற அரக்கத்தனம் கொடுமையானதா?
அல்லது அந்த காமுகர்களுக்கு வழங்கப்படுகின்ற கல்லெறி தண்டனை கொடுமையானதா?
ஆக, இந்த விபச்சாரமானது வெறுமனே குடும்பங்களில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு கேவலமான செயலாக மாத்திரமன்றி அதன் மூலம் பல சமூக நோய்களையும் ஏற்படுத்தி பச்சிளம் குழந்தைகளையும் கூட பரிதாபகரமாக கொலை செய்யக்கூடிய ஒரு அரக்கத்தனமான பாவச்செயல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு குடும்பங்களை சீரழித்து, கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களே ஒருவரை ஒருவர் கொடூரமாக கொலை செய்துகொள்கின்ற அளவுக்கு குரோதங்களை ஏற்படுத்தி, பச்சிளம் சிசுக்களைகூட குப்பைத்தொட்டிகளில் வீசி அரக்கத்தனமாக கொலை செய்து, கல்வி கற்கின்ற சிறுவர்களை சமூகத்தில் சமுதாயக்குற்றவாளிகளாக மாற்றிவிடுகிறது.
மாத்திரமன்றி பால்வினை நோய்களால் பல உயிர்களையும் காவுகொள்ளக்கூடிய இந்த விபச்சாரம் என்னும் கொடிய வியாதியானது இன, மத, மொழி பேதமின்றி ஒட்டுமொத்த மனித சமுதாயத்திலிருந்தும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது என்றால் அது மிகையில்லை.
ஆனால் அந்த விபச்சாரம் என்னும் கொடிய நோயை இல்லாதொழிப்பதற்காக இஸ்லாமிய மார்க்கம் ஏற்படுத்திய பயனுள்ள வழிவகைகளை “கொடூரமானது” என்றும் “பிற்போக்கானது” என்றும் அங்கலாய்கின்ற லேபல் முற்போக்குவாதிகள் அதற்கு மாற்றீடாக விபச்சாரத்தை ஒழிப்பதற்கு முடியாவிட்டாலும் குறைப்பதற்கேனும் இதுகாலவரை முன்மொழிந்த ஏதேனும் பொறிமுறைகள் இருக்கின்றதா?
(தொடரும்….)
(இறைவன் நாடினால், விபச்சாரம், அதற்குண்டான இஸ்லாமிய ஷரீஆ தண்டனை முறை மற்றும் சவூதி அரேபிய சட்ட நடைமுறை பற்றிய சகலவிதமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் இத்தொடர்கட்டுரையில் ஆழமாக அலசி ஆராயப்பட்டு அவையனைத்திற்குமே முறையான, ஆணித்தரமான பதில்கள் வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள சகோதரர்கள் அனைவரும் இறுதிவரை இணைந்திருப்பதோடு மாற்றுக்கருத்தவர்களுக்கும் இக்கட்டுரையை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
Leave a comment