ராஜபக்‌ஷக்களை அரசியலிலிருந்து நீக்கமுடியாது

Basil[1]கொழும்பு: ஐ.தே.கவுக்கோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ராஜபக்‌ஷக்களை அரசியலிலிருந்து நீக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ராஜபக்‌ஷக்களை மக்களால் மாத்திரமே அரசியலிலிருந்து நீக்க முடியும். மஹிந்த ராஜபக்‌ஷ போராட்டத்தின் மூலம் முன்னுக்கு வந்தவர். அவர் சதிசெய்து முன்னுக்குவந்த ஒருவர் அல்ல என்றும் பசில் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகம் வீழ்த்தப்பட்ட பின்னர் நாடு எதிர்கொண்டிருக்கும் நிலைமை தொடர்பில் கவலை அடைவதாகக் குறிப்பிட்ட அவர், தமது நிர்வாக காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் தற்பொழுது முழுமையாக முடங்கிப்போயிருப்பதாகவும் கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகக் கொண்டுவந்த மக்கள் யோசித்துப்பார்த்தால் நாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது அவர்களுக்குப் புரியும்.

கடந்த அரசாங்கம் தோல்வியடைவதற்கு தான் பொறுப்பேற்கவேண்டும் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாடுகள் சிலவற்றின் அழுத்தம் காரணமாக அரசாங்கத்தின் குறைபாடுகள் பெரிதுபடுத்தப்பட்டமையே காரணம் என்றும் கூறியுள்ளார். உலக நாடுகள் பல எம்முடன் கோபம் கொண்டன. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என பல நாடுகள் எதிர்ப்புக்களை காண்பித்தன.

சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுத்தது மட்டுமன்றி, அவை தேசிய ரீதியிலும் அழுத்தம் கொடுத்தன. ராஜபக்‌ஷ நிர்வாகம் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறினார். நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி, உள்ளிட்ட சகல கட்சிகளும் மனஞ் சோர்வடைந்திருப்பதால், புதியதொரு அரசியல் பயணம் குறித்து பலர் யோசிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment