- AK-77
காத்தான்குடி: நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற அப்துர் ரஊப் மௌலவியின் ஆளுமையை நிரூபிக்கும் மீலாத் விழா நிகழ்வு விடயமாக ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மக்காவிலிருந்து ஒலிப்பதிவு மூலமான தனது மறுப்பறிக்கையை முகநூல் ஊடாக தெரிவித்திருந்தார்.
அவர் மக்காவில் இருப்பதோ மதினாவில் இருப்பதோ இங்கு விடயமல்ல. ஆனால் “அல்லாஹ் மீது ஆணையாக எனக்கும் இம்மீலாத் விழாவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை” எனவும் “எந்த உதவியும் அவர்கள் என்னிடம் கேட்கவுமில்லை” எனவும், “தான் செய்துகொடுக்கவுமில்லை” எனவும் சொல்லி இருந்தார்.
“அல்லாஹ் மீது ஆணையாக” என்று அவர் கூறும்போது முஸ்லிம்கள் எவரும், அவரது இக்கூற்றை மறுக்க முடியாது.
ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கூற்று இவ்வாறிருக்கையில்,
பதுரிய்யாவுக்குள் ஏதும் நிகழ்ச்சி இடம்பெறுவதானால்கூட பலத்த பாதுகாப்பை உறுதிசெய்துவிட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர், கடந்த வெள்ளிக்கிழமை மௌலவி அப்துர் ரஊபின் ஆளுமைமிக்க மீலாத் விழாவை விமர்சையாக நடாத்துவதற்கு உதவி ஒத்தாசை வழங்கியது யார் என்ற கேள்வி தற்பொழுது இங்கு எழுகிறது.
கடந்த 2004ம் ஆண்டிலிருந்து நகமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்திருந்து ஹிஸ்புல்லாஹ்-அப்துர் ரஊப் மௌலவி உறவு, இம்மீலாத் விழாவுக்கு மாத்திரம் விலகி இருந்தமைக்கான காரணங்கள் எவை என்பதையும் மக்கள் கேள்விகளாக சந்திக்குச் சந்தி விதைத்துவிருகின்றனர்.
ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இம்மீலாத் விழாவுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்றால், ஹிஸ்புல்லாவைவிட உயர்வான அந்தஸ்திலும், செல்வாக்கிலும் இம் மீலாத் விழாவுக்கு ஒத்தாசை வழங்கிய அந்த “மகான்” யார் என்ற அடுத்த கேள்வியும் தொடர்கிறது.
“ஹிஸ்புல்லாஹ்வைவிட இன்னுமொருவரா?” என்ற அடுக்கடுக்கான கேள்விகள் காத்த மண்ணில் சுரக்கும் இந்நேரத்தில், ராஜாங்க அமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ், தனக்கும் இம்மீலாத் விழாவுக்கும் சம்பந்தமில்லை என சுட்டிக்காட்டியது அப்துர் ரஊப் தரப்பினரை மனம் நோக வைத்திருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.
மௌலவி தரப்பின்படி, அகில இலங்கை போற்றுமளவுக்கு இவ்விழா சிறப்பாக இருந்த நிலையில், தனக்கும் இம்மீலாத் விழாவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனக் கூறியுள்ளது, ஹிஸ்புல்லாஹ், இம்மீலாத் விழாவைக் கண்டுகொள்ளமால் இருந்ததுபோல் கூறியுள்ள அவரது இக் கூற்று மௌலவி தரப்பை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த தேர்தல் காலங்களில் பலத்த விமர்சனங்களைச் சந்தித்தும், பொதுத் தேர்தலில் தோல்வியுமடைந்தபோதும் எவ்வித மறுப்புக்களையும், ஆவேசங்களையும் வெளிப்படுத்தாத தற்போதய ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இம்மீலாத் விழாவுக்கு தான் எவ்வித வகையிலும் பங்காளியல்ல என்பதை உடன் தெரிவித்தமை இம்மீலாத் விழாவின் “கிளைமக்ஸ்” ஆக இருக்கிறது.
Leave a reply to mohdfareed Cancel reply