- AK-48
காத்தான்குடி: இன்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற இருக்கும் ஏ.ஜே. அப்துர் ரஊப் மௌலவி தரப்பினரின் மீலாத் விழாவுக்கு, இன்றைய ஜூம்ஆவின் பின்னர் அப்துர் ரஊப் மௌலவியை எதிர்க்கும் சிலர் இம்மீலாத் விழாவுக்கு காத்தான்குடி பிரதான வீதியில் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
1979 இல், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் சதுக்கத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவின் பின்னர், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவால் “முர்தத்” என மார்க்கத்தீர்ப்பு வழங்கப்பட்ட மௌலவி அப்துர் ரஊப், அதன் பின்னர் 1980களின் ஆரம்பத்தில் காத்தான்குடி மௌலானா கபுறடி திடலில் இவ்வாறான மீலாத் விழாக்களை நிகழ்த்தியிருந்த நிலையில், 1987 இல் ஹாஜா கந்தூரி முஸ்தீபுகளுக்குப் பின்னர் பிரமாண்டமான மீலாது விழாக்களை பதுரிய்யாவுக்கு வெளியில் நடாத்துவதைத் தவிர்த்து வந்தனர்.
சுமார் 30 வருடங்களின் பின்னர், மௌலவி அப்துர் ரஊப் அவரது “பாணி”யில் பிரமாண்டமான மீலாத் விழாவை இன்று காத்தான்குடியின் மத்தியில் பிரமாண்டமாக நடாத்துகிறார்.
மார்க்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காத்தான்குடியில் கடந்த 20 (1980-2000) வருடங்களாக ஒடுக்கப்பட்ட மௌலவி அப்துர் ரஊபின் கனவுகள் இன்று அதே காத்தான்குடியில் மிக விமர்சையாக அவரது வாழ்நாளிலேயே நடாத்தப்படுகின்றமை, மௌலவி அப்துர் ரஊபிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
தேர்தல் காலங்களிலும், மார்க்க வைபவங்கள் காலங்களிலும் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அப்துர் ரஊப் மௌலவி தரப்பால் மறைமுகமாக வெளியிடப்படும் அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் போன்று இன்றும் இம்மீலாத் விழாவுக்கு வரவேற்பளித்து, ஓர் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பிரசுரத்தில் இரு நபிமார்களின் பெயர்கள் உரிமை கோரப்பட்டிருக்கின்றது.
இம்மீலாத் விழாவை நிறுத்தக்கோரி, காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா, காத்தான்குடி நகரசபைக்கும், காத்தான்குடி சம்மேளனத்திற்கும், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கும் அவசரக் கடிதமொன்றை அனுப்பியிருந்தது. எனினும், அனுப்பப்பட்ட இக்கடிதத்திற்கு என்ன பதிலை குறித்த அமைப்புக்கள் வழங்கின என்பதை எங்களால் அறிய முடியவில்லை.

இம்மீலாத் விழாவுக்கு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அதிகபட்ச ஆதரவுகளும், அவரது அனுசரணையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் ஜம்மிய்யாவுக்குள்ளும், சம்மேளனத்திற்குள்ளும் இருக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினரதும் ஆசியுடனும் இம்மீலாத் விழா முன்னெடுக்கப்படுகிறது.
“இம்மீலாத் விழாவை எவராளும் தடுக்க முடியாது. தடுக்க முயற்சிப்பவர்கள் சட்டத்தின் முன்னிலையில் கைது செய்யப்படுவர். கலவரங்களை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும்” என்ற அளவுக்கு இம்மீலாத் விழாவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காத்தான்குடியில் அப்துர் ரஊப் மௌலவியின் மார்க்க விரோதக் கருத்துக்கள், காத்தான்குடி, தௌஹீத் அமைப்புக்களால் வெளிக்கொணரப்பட்டு, அவர் தூற்றப்படும் இந்நிலையில், தனிமனிதர் ஏ.ஜே. அப்துர் ரஊப் மௌலவியின் செல்வாக்கை இவ்வூரிலும், இலங்கையிலும் மீண்டும், மீண்டும் தன்னை உலமா என நிரூபித்துக்காட்ட, அப்துர் ரஊப் மௌலவிக்கு இன்றியமையாத் தேவையாக இக்காலகட்டத்தில் இருக்கின்றது.
என்ன விலை கொடுத்தாவது இம்மீலாத் விழாவை பதுரிய்யாவுக்கு வெளியில் நடாத்தும் அவரது முயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது.
இது நபி (ஸல்) அவர்களை புகழ் பாடும் மீலாத் அல்லாமல், அப்துர் ரஊப் மௌலவியின் செல்வாக்கையும், அவரது ஆளுமையையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் விழாவாகவே இம்மீலாத் விழா அமையப்போகிறது. AK48
Leave a comment