றியாத்: சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டொலர்கள் – அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும்.
ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும்.
இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோலின் விலை 50 சதவீதம் வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருந்தபோதும் சர்வதேச விலைகளைவிட அது குறைவாகவே இருக்கும். டீசல், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றின் விலைகளும் உயரும். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பரல் பெட்ரோலியத்தின் விலை 125 டொலராக இருந்தது. இப்போது அது, 37.18 டொலராகக் குறைந்துள்ளது.

சவூதியின் வருவாயில் 77 சதவீதம் எண்ணெய் விற்பனையிலிருந்தே கிடைக்கிறது. இந்த வருவாயானது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்திருக்கிறது. ஒபெக் எனப்படும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி மிகப் பெரிய நாடாகும். விலைகளை அதிகரிக்கச் செய்வதற்காக பெட்ரோலிய உற்பத்தியைக் குறைக்க வேண்டுமென மற்ற உறுப்பினர்கள் கோரியபோதும் சவூதி அதனை மறுத்துவிட்டது. இப்படிக் குறைந்த விலையில் வைத்திருப்பதன் மூலமே மற்ற தயாரிப்பாளர்களை குறிப்பாக அமெரிக்க எண்ணை நிறுவனங்களை போட்டியிலிருந்து வெளியேற்ற முடியும் என சவூதி கருதுகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் பெரும் கடன் சுமையுள்ள, சிறிய நிறுவனங்கள் என்பதால், அந்த நிறுவனங்களைவிட தங்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என சவூதி நினைக்கிறது. 2015ஆம் ஆண்டில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சவூதி 20 பில்லியன் ரியால்களச் செலவழித்திருக்கிறது. யெமனில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தச் செலவு ஏற்பட்டிருப்பதாக சவூதி தெரிவித்திருக்கிறது.
Leave a comment