லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர், சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றவர்.கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆமீர், ஆசிப், சல்மான் பட் ஆகியோருக்கு ஐந்தாண்டு போட்டித் தடையும், 6 முதல் 30 மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது ஆமீர் தடை முடிந்து முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 26 நபர் கொண்ட பாகிஸ்தான் அணியில் ஆமீரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதனால் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு தேசத்துரோகி எனக் கூறிய முகமது ஹபீஸ், அசார் அலி ஆகியோர் அவர் பயிற்சி முகாமில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆமீர் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆதரவு தெரிவித்திருந்த போதும், இரு முன்னணி வீரர்கள் இப்படி பயிற்சியிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலையிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சகாரியார் கான், இரு வீரர்களையும் சமாதானப்படுத்தினார். இதனால் அவர்கள் மீண்டும் பயிற்சியில் பங்கேற்க சம்மதித்தனர்.
இந்நிலையில் பயிற்சி முகாமில் சக வீரர்களிடம் முகமது ஆமீர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார். அவரை மற்ற வீரர்கள் கட்டித்தழுவி ஆறுதல் கூறி அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டனர்.