கிறிஸ்ற்சேர்ச்: நியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த வகையில் இன்று (28) இடம்பெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. கிறிஸ்ற்சேர்ச்சில் இடம்பெற்ற இன்றைய போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து, 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களான 19 ஓட்டங்களை நுவன் குலசேகர பெற்றதோடு, அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் தலா 17 ஓட்டங்களை பெற்றனர். மேற் ஹென்றி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மிச்சல் மெக்லினகன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8.2 ஓவர்களில் எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காது, இலக்கை எட்டி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.நியூஸிலாந்து அணி சார்பில் மாட்டின் கப்ரில் எட்டு 06 ஓட்டங்கள், ஒன்பது 04 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து 40 பந்துகளில் 93 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். டொம் லதம் 17 ஓட்டங்கள்.
ஏற்கனவே நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற போட்டியிலும் இலங்கை அணி, இவ்வாறானதொரு மோசமான தோல்வியைச் சந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையில் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2 – 0 என நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.