அம்பாறை: கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசியதாகவும், இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் இதன்பின்னர் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததுடன் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்விடயம் சம்பந்தமாக அதிக கவனம் செலுத்தி உரையாற்றினார்
உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) பங்குபற்றிய ‘ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO’ என்ற குறித்த நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.
இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.

இந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது இந்நிகழ்ச்சியை மையப்படுத்தியே ஆகும். “கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு கலைஞர் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50,000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, உள்ளே நுழைந்ததும் டிக்கெட்டின் விலைக்கமைய குடி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இதிலே அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் கலாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால் அது தொடர்பில் பேசவேண்டியுள்ளது.

ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்நிகழ்வில் நமது இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது. பெண்கள் தமது மார்புக் கச்சையை கழற்றி அப்பாடகருக்கு வழங்கினர். பின்னர் இளம் பெண்கள் மேடை மீது ஏறி பாடகரை கட்டியணைத்துகொண்டனர்.
பிரண்டி , விஸ்கியினால் ஏற்பட்ட வெறியே அது. அவர்களுக்கு நான் கூறவில்லை இதனை ஏற்பாடு செய்தோரைக் கூறுகின்றேன், அவர்களை திருக்கை வாலால் அடிக்கவேண்டும்” என்றார்.மேலும் இனிமேல் இவற்றுக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment