கொழும்பு: சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வின்போது திணைக்கள அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 202 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலர்களுக்கு கணனிகள் உட்பட்ட பொருட்களும் கையளிக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதியன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா பொதுநிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.குறிப்பாக அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் செயற்பட்டது போல தந்தையின் அதிகாரங்களை கொண்டு தவறான வழியில் நடக்கின்றார் என்றும், மகிந்தவின் ஆட்சிக்கு நிகராக நடந்து கொள்கின்றார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் அந்த விமர்சனங்களுக்கு செவிபடுத்து அவர் தயக்கம் காட்டாமல் நிகழ்வில் கலந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment