‘மதீனாச்சாசனம்’ பல்லின சமூகத்துக்கான சமத்துவத்தை உணர்த்துகிறது

maithiriகொழும்பு: முஹம்மது நபியவர்களின் மதீனாச்சாசனம் பல்லின சமூகத்துக்கான சமத்துவ நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் வாழும் தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் பேருவகையுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நாள் ஒரு பெரும் சமய, கலாசார, நாகரிக பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு வழிவகுத்த, சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையில் அமைந்த பெருமானாரின் போதனைகளின்பால் முஸ்லிம்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

இன்றைய பூகோள உலகில், பன்மைத்துவ சமூகத்திற்காக நபியவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘மதீனா சாசனம்’ நவீன உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்தரும் ஒரு முக்கிய சாசனமாகவுள்ளது. கலாசார மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த குழுக்களுக்கிடையே முரண்பாடுகளைத் தவிர்த்து, தீர்வுகளை கண்டடைவதற்கான அணுகுமுறைகளை இச்சாசனம் முன்வைக்கிறது.

சமயத்தில் பலவந்தம் பிரயோகிக்கப்படுவதை இஸ்லாம் நிராகரிக்கின்றது என்பதையும் மனித இருப்பு நெடுகிலும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மிகவும் பயனுறுதிவாய்ந்த வழி மத்தியஸ்த்தமாகும் என்பதையும் இந்த மதீனா சாசனம் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது எல்லா சமூகங்களின் மத்தியிலும் பாதுகாப்பையும் நலனோம்புகையையும் உத்தரவாதப்படுத்துவதுடன், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.

இஸ்லாம் மனித இனத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடிப்படையிலான சரியான பாதையில் வழிகாட்ட விரும்புகிறது. இலங்கையில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தால் வளம்பெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என நான் நம்புகிறேன். இது நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளை பலப்படுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும்.

Published by

Leave a comment