நள்ளிரவில் மல்லியப்பு சந்திக்கு வந்து நாடகமாடியவர்கள் வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சியை கொச்சைப்படுத்துவதை கண்டிக்கிறேன்

  • அமைச்சர் பழனி திகாம்பரம்

palaniகொழும்பு: நாளாந்த சம்பளத்திற்காக சுமார் 8 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை வென்றெடுக்கவென தனது உயிரையே மாய்த்துக்கொள்ள துணிந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களின் சமூக உணர்வை பெரிதும் மதிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை அவருக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டும் அதேவேளை, சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கக் கூடாது என்பதனையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் ஒருசதம் கூட அதிகரிக்க முடியாது என கம்பனிகள் விடாபிடி நிலையில் உள்ளன. இந்த பின்னணியில் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்க மட்டத்திலும் தொழிற்சங்க மட்டத்திலும் தொடர்ச்சியான அழுத்தங்கள் அவசியமாக இருக்கிறது.

அந்த அவசியத்தை கருத்திற் கொண்டே ஆளும் கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் சபையில் தீக்குளிப்பேன் என அறிவித்து ஒட்டுமொத்த பாராளுமன்றத்தின் கவனத்தையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பக்கம் திருப்பினார். தனது தீக்குளிப்பு அறிவிப்பை சிலர் ஏலனம் செய்ததால் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு நாளன்று எரிபொருள் அடங்கிய கலனுடன் பாராளுமன்றுக்கு வந்து தீக்குளிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இந்த சம்பவத்தை கேள்விபட்ட நான் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அவர்களை சமாதானப்படுத்தி அவருக்கு ஆறுதல் கூறினேன்.

அதுமட்டுமல்லாது தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றதன் பயனாக தனியார் ஊழியர்களுக்கான 2500 ரூபா சம்பள உயர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உள்வாங்கப்பட்டனர். வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு அழுத்தத்திற்கு இது ஒரு வெற்றியாகும்.

மலையக மக்களின் உரிமை பிரச்சினைகளில் மௌனமாக இருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சியை கொச்சைப்படுத்தி ஏலனம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுத் தேர்தல் நெருங்கிய காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு பறிக்கும் நோக்கில் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்த இவர்கள் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ‘முழு பூசனிக்காவை சோற்றில் மறைத்து 1000 ரூபா கோரிக்கை குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் போல மௌனித்தனர். தமிழ் முற்போக்கு கூட்டணி சத்தியாக்கிரகம் நடத்தப் போகிறது என்று தெரிந்து நள்ளிரவில் மதுபோதையில் மல்லியப்பு சந்திக்கு வந்து நாடகமாடியவர்கள் இவர்கள்.

ஆனால் வடிவேல் சுரேஸ் அப்படி அல்ல. தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து துணிச்சலுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர். அவரது முடிவை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் பெருந்தோட்ட மக்கள் மீது அவர் வைத்துள்ள உணர்வை மதிக்கிறேன். மலையக மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்று துணிந்து நிற்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவாத்தையில் இம்முறை அரசாங்கம் தலையிட்டுள்ளமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முன்வைத்த அழுத்தமே காரணம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. கடந்த முறை கூட்டு ஒப்பந்தத்தை போன்று மூடு மந்திரமாக இம்முறை நடத்தி முடிக்க நாம் அனுமதிக்க மாட்டோம். பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன என்பதை தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்க தரப்பில் இருந்து நாம் எமது அழுத்தத்தை பிரயோகித்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோல் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தங்கள் தொழிற்சங்க பலம் மற்றும் பேரம் பேசும் சக்தியை வைத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

  • ஊடகப் பிரிவு

Published by

Leave a comment