இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்

fishers boatகாரைநகர்: வடக்கு மாகாணம், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உட்புகுந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகொன்று அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைநகர் மீனவர் ஒருவரின் வலைகளை நாசப்படுத்தியதுடன், அந்த மீனவரையும் படகுடன் இழுத்துச் சென்று நீரில் மூழ்கடிக்க முயற்சித்ததாக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.காரைநகரைச் சேர்ந்த லோகநாதன் என்ற மீனவரே கடற்படை அதிகாரிகளிடமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடமும் இவ்வாறு முறையிட்டிருக்கின்றார்.

புதன்கிழமை இரவு பத்து மணியளவில் 25க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகளில் வந்த இந்திய மீனவர்களே இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான தனது 27 வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் வலைகளுடன் படகில் தன்னையும் இழுத்துச் சென்று மூழ்கடிக்க முயன்றதாக லோகநாதன் தெரிவித்துள்ளார்.

fishers boat

படகுடன் இழுத்துச் செல்லப்பட்டபோது, அவலக்குரல் எழுப்பிய போதிலும், இந்திய மீனவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும், அப்போது அதனைக் கண்ட கடற்படையினர் இந்திய மீனவர்களைத் துரத்தியதையடுத்து, தன்னுடைய வலைகளை அறுத்து விடுவித்துக் கொண்டு இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் ஓடிச் சென்றதாக லோகநாதன் கூறினார்.

இந்திய இழுவைப் படகுகளைத் துரத்திச் சென்ற கடற்டைபயினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Published by

Leave a comment