திருகோணமலையை கைப்பற்றுகிறதா அமெரிக்கா…?

trincoகொழும்பு: திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது.பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் சர்வதேச அரசியலில் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை திருகோணமலை துறைமுகம் யார் ஆதிக்கத்தில் இருக்கிறதோ, அவர்களே தென்னாசியாவை ஆட்டிப் படைத்து ஆள முடியும் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிற வரலாற்று உண்மை.

அந்த அளவுக்கு திருகோணமலை துறைமுகம் புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. அன்று சோழர்கள் காலத்திலும் இதுதான் நடந்தது.பின்னர் ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் காலத்திலும் திருகோணமலையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. கடைசியாக நடந்த 2-வது உலகப் போரில் இந்தியாவை ஆண்ட மவுன்பேட்டன் பிரபு இலங்கையில்தான் தளத்தை அமைத்திருந்தார்.

குறிப்பாக திருகோணமலை துறைமுகம் மிக முக்கிய பங்கு வகித்தது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் 1980களின் இறுதி வரை அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாடும் இலங்கையில் கால் வைப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சக்தி வாய்ந்ததாக இருந்தது. இலங்கையை அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.

1980களின் தொடக்கத்தில் “வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா” வானொலிக்கான கோபுரங்கள் அமைக்கப் போகிறோம் என கூறிக் கொண்டு அமெரிக்கா நுழைய முயற்சித்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடாளுமன்றத்திலேயே இலங்கைக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாடும் கால்பதிக்க இலங்கை இடம் கொடுக்கக் கூடாது என எச்சரித்தார்.

பின்னர் மகிந்த ராஜபக்சவை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கிப் போட்டது. இந்தியா, அமெரிக்கா சார்புள்ள ஜனாதிபதியாக சிறிசேனவும் பிரதமராக ரணிலும் பதவியில் அமர்ந்தனர்.ஆனால் தற்போது இந்தியாவை ஒதுக்கி புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அடிமை தேசமாக இலங்கையை உருவாக்குவதில் அமெரிக்கா அத்தனை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

சிறிசேன, ரணில் ஆட்சிக்கு வந்தது முதல் மாதந்தோறும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து ‘உத்தரவிட்டுச் செல்கின்றனர்’. இதற்கு பிரதிபலனாக சர்வதேச சமூகத்தில் இலங்கை மீதிருந்த கோபத்தை தணிக்கச் செய்யும் அத்தனை நடவடிக்கைகளையும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகிறது.

இதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து உலக நாடுகளை ஆதரிக்க செய்யவும் வைத்தது. அத்துடன் நிற்கவில்லை அமெரிக்கா.. இலங்கை கிழக்கின் திருகோணமலையில் எப்படியும் ஒரு நிரந்தர வலிமையான கடற்படை தளத்தை அமைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் பல்லாண்டுகால கனவுக்கு மரண அடி கொடுக்க தொடங்கிவிட்டது.

trinco

திருகோணமலையில் கடற்படை தளம் அமைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் ஒரு பேரிடியாக வடக்கே யாழ்ப்பாணத்தின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமான தளத்தையும் இப்போது அமெரிக்கா கைப்பற்றப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

அதாவது இனிமேல் இலங்கையில் இந்தியாவுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. தென்னிலங்கையில் சீனாவும் வடக்கு கிழக்கு பகுதியில் அமெரிக்காவும் இருக்கப் போகிறது. இலங்கையின் குடுமிப் பிடி இனி அமெரிக்காவிடமும் சீனாவிடமும்தான் இருக்கப் போகிறது. இந்தியாவின் தென்கோடியின் ஒட்டுமொத்த பாதுகாப்புமே இனி அமெரிக்காவை சார்ந்தே இருக்கப் போகிறது.

ராஜபக்சவை அகற்றிய மத்திய அரசால் சிறிசேனவையும் ரணிலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது.

இந்திய பெருங்கடல், தென்னாசியாவை இலக்கு வைத்து முன்னேறுவது அமெரிக்காவின் திட்டம். இப்போது இலங்கையில் விமானப் படை தளத்தையும் கடற்படை தளத்தையும் அமெரிக்கா அமைத்துவிட்டால் இந்தியப் பெருங்கடலிலும் தென்னாசிய நாடுகளிலும் நாட்டாமை வேலையை அமெரிக்கா காட்டும். அமெரிக்கா நிலைகொண்டால் அதன் கைப்பிள்ளை இஸ்ரேலும் இலங்கையில் நிலைகொள்வதைத் தவிர்க்க முடியாது!!

Published by

Leave a comment