- SHM
வாஷிங்டன்: 40 வருடங்களாக அமலில் இருந்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு பெருகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 40 வருடமாக நீடித்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை விலக்கிக்கொள்ளும் சட்டம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதிபர் ஒபாமா அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்பதால் விரைவில் தடை விலக்கல் அமலுக்கு வர உள்ளது.
‘தடையை விலக்கியது, வாடிக்கையாளர்கள், அமெரிக்க பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற பல விவகாரங்களுக்கு நன்மை தரக்கூடியது’ என்று செனட் உறுப்பினர் ஹெய்டி ஹெட்கம்ப் தெரிவிக்கிறார். ‘தடையை விலக்கியதால் கூட்டாளி நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்வதில் நிலவிய சிக்கல்கள் தீருவதோடு, ரஷ்யா, வெனிசுலா, மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகள், எண்ணெய் ஏற்றுமதியில் பலம் பெறுவதும் தடுக்கப்படும்’ என்கிறார் அவர்.
அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நிலவிய காலகட்டத்தில், இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நின்றது. இதனால் அமெரிக்காவுக்கு எண்ணெய் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அரபு நாடுகள் தடை விதித்தன. இதையடுத்து தற்சார்பை உறுதி செய்ய அமெரிக்கா தனது ஏற்றுமதிக்கு 1975ம் ஆண்டு தடை விதித்தது. கனடா போன்ற அண்டை நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே அமெரிக்கா எண்ணை வளத்தை ஏற்றுமதி செய்து வந்தது.
Leave a comment