வில்பத்து விவகாரம்; இனவாதிகளின் முகத்தில் “அறைந்த” ராஜித

  • ரஸீன் ரஸ்மின்

northகொழும்பு: வடக்கு முஸ்லிம்கள் காடு அழிப்பவர்கள், சட்டவிரோதமா சமூகத்தின் தவறான கண்ணோட்டத்திற்கும், அந்த மக்களின் பிரதிநிதியான ரிசாத் பதியுதீன் மீதான இனவாதப் பார்வைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கள் அமைந்துள்ளன. கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் ஒருவர் வில்பத்து வனப்பகுதியை அமைச்சர் ரிசாத் அழித்து வருகிறார்.

இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குறித்த அமைச்சரின் கருத்துக்கள் வடபகுதி முஸ்லிம் மக்களிடையே பெரும் நிம்தியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் முஸ்லிம்கள் காடழிப்புக்களை மேற்கொள்ளவில்லை. அத்துடன் மன்னார் வில்பத்தில் ஒரு அங்குலக் காணியையேனும் வளைத்துப் போடவோ இல்லை.

சூழல் அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் அவ்வாறு அத்துமீறல்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒரு முஸ்லிம் என்பதால்தான் இவ்வாறு பூதாகரமாக்கப்பார்க்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்த குறித்த கருத்து வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்தவர் என்பதையும் நாம் இங்கு நினைவு கூறவேணடியுள்ளர்.

அளுத்கம, பேருவளை ஆகிய சம்கவங்களின் போதும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும உள்ளிட்டோர் முஸ்லிம்களுக்காக வெளிப்படையாக குரல் கொடுத்திருந்தனர்.

வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தலைவிரித்தாடுகிறது. அது சிங்களம் மற்றும் தமிழ் வடிவத்திலும் உருவம் எடுத்துள்ளது.

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து பின் சமாதானத்தின் பின்னர் தமது சொந்த பூர்வீகங்களுக்கு திரும்பிச் சென்று தமது சொந்த காணிகளை துப்பரவு செய்யும் போது முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறுகிறார்கள், அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளிமாட்ட மற்றும் வெளிநாட்டு முஸ்லிம் குடும்பங்களை, வடக்கில் குடியேற்றி வருகிறார் என்றெல்லாம் இதுபோன்ற இனவாத, பிரதேசவாதக் கருத்துக்களைச் சொல்லி முஸ்லிம்கள் காடுகளை அழிப்பவர்கள், அத்துமீறி நிலங்களை அபகரிப்பவர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரப்பி வடக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்தும், நாட்டில் முஸ்லிம்களை பிழையாகக் காட்டும் செயற்பாடுகள் சமீப காலங்களில் அரங்கேரியிருந்தமை இங்கு மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

மன்னார் வில்பத்து வனப்பகுதியை முஸ்லிம்கள் பலவந்தமாகப்பிடித்து குடியேறி வருகிறார்கள் எனவும், முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம்கள் தமது சொந்த காணியை துப்பரவு செய்து குடியேறும் போது அங்கும் முஸ்லிம்கள் காட்டை அழித்து சட்டவிரோதமாகக் குடியேறி வருகிறார்கள் எனவும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது பல வனப்பகுதிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு அங்கு சிங்களக்குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வந்த போது வடக்கிலும் சரி வடகிழக்கிற்கு வெளியேயும் சரி அதற்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை.

அதுமாத்திரமின்றி, வடக்கிலும் யுத்த நிறுத்தத்திற்குப் பிறகு பல அரச காணிகள் துப்பரவு செய்யப்பட்டு அங்கு பல தமிழ்க் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு வடபகுதியைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் மக்களும் அல்லது முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அதரசியல்வாதிகளும் அதற்கு எதிராகச் செயற்பட்டது கிடையாது.

எமது மாகாணம் எமது மாவட்டம் என்ற ஒரே காரணத்தினால் திமிழர்களும் எமது சகோதரர்களே அவர்களுக்கும் காணி, வீடுகள் தேவையாக இருக்கிறது. எனவே அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ளட்டும் என்ற பெரும் மனதுடன்தான் அவ்வாறான குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு முஸ்லிம்கள் செயற்படவில்லை.

ஆனால், இன்று மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒருசில அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவான அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது காழ்ப்புணர்வு கொண்டதன் காணரமாகவும், தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காகவும் ஒரு இனத்தின் மீது அல்லது ஒரு சமூகத்தின் மீது வேண்டுமென்றே பழிசுமத்துகிறார்கள்.

மன்னார் வில்பத்து காணிப்பிரச்சினையை பொதுபலசேனா அமைப்ப ஊதிப் பெரிதாக்கிய போது அதனது உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக தெற்கு ஊடகவியலாளர்கள் குழுவொன்றும் மன்னாருக்கு நேரில் விஜயம் செய்து அது தொடர்பிலான செயதிகளை வெளியிட்டிருந்தது.

1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக இந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேறி புத்தளம் போன்ற இடங்களில் வாழ்ந்துவந்த முசலி பிரதேச செயலகத்திற்குற்பட்ட மரிச்சிக்கட்டி , பாலக்குழி, கொண்டச்சி, கரடிக்குழி ஆகிய கிராம மக்கள் யுத்தத்திற்குப் பின்னராக காலப்பகுதியில் மீண்டும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் தமது பூர்வீகத்திற்கு வந்த போது அவர்களது சொந்த காணி பெருங் காடுகாளக காட்சியளித்தது.

அத்துடன், வில்பத்து சரணாலயத்தின் ஒருபகுதி முசலிப் பிரதேச கிராமங்களின் எல்லையாகும். எனவே, அந்தப்பகுதி காடுகளாக காட்சியளித்தபோது இரண்டு எல்லைகளின் முடிவும் தெளிவின்மையால் அந்தக்கிராம மக்கள் ஒருசில அடையாளங்கள் வைத்துக்கொண்டே தமது எல்லைகளை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, மன்னார் முசலிப்பிரதேச முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறந்து கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னரான புகைப்படங்களை வைத்துக்கொண்டு வில்பத்து வனப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் வரும் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகள் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கின்றவர்களின் செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களை மாத்திரமின்றி, முழு வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களையும் வெறுப்படையச் செய்தள்ளது.

90வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. கட்டடங்கள் இன்னமும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. அந்தக்கிராம மக்கள் தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களையும் வைத்திருக்கிறார்கள்.

இந்த விடயத்தில் சரி, பிழை திருத்தம் பார்ப்பதற்கு அரசு எத்தனை குழுக்களை அனுப்பி வைத்தாலும் அது ஒருபோதும் பிழையாக இருக்கப் போவதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கோஷம் போட்ட சேனாக்களை ராஜபக்ஷ அரசு பாலூட்டி வளர்த்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான புதிய அரசு அந்த சேனாக்களுக்கு வாய் திறக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்தது. எனவேதான் அவர்கள் இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்த விடயத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்கின்றனர்.

இதேவேளை, வில்பத்து வனப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதாக பொதுபலசேனா உள்ளிட்ட கடும்போக்குடைய அமைப்புக்கள் தொடர்ச்சியாக அமைச்சர் ரிசாத் பதியுதீனைக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் பற்றிய தப்பான எண்ணங்களை திணிப்பதுடன், நாட்டில் முக்கிய அமைச்சு மற்றும் அரசின் முக்கிய பங்காளியாக இருக்கும்; அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் சமூக வளைத்தங்கள் ஊடாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் கடும் தொனியில் உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.

வடக்கு முஸ்லிம்களை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்றாது போனால் தான் வகிக்கும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக செயற்படப் பேவதாக எச்சரித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்திய ஜனாதிபதி, முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தெடர்பாக முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைசச்ருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அன்றைய தினம் ஒரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்ததும் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் கூறியிருந்தார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் வடக்கு முஸ்லிம்களின் மிள்குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பில் அறிக்கைகள் கேட்கப்படுகினவே தவிர அதுதொடர்பிலான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை என்பததான் முஸ்லிம்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மன்னார் வில்பத்து பிரச்சினை தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்து முஸ்லிம்கள் மீதான களங்கத்தை ஓரளவுக்கு இல்லாமல் செய்திருக்கிறது. இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் உறுப்பினர் என்பதாலுமே இவ்வாறு திட்டமிட்டு இல்லாத பிரச்சினை இருப்பதாகப் பெருதாக்கி காண்பிக்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

north

இதேபோன்றுதான் முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளை துப்பரவு செய்து அங்கு குடியேறிவருகின்ற போது அம்மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் அதனை அரசியலாக்க முற்பட்டதன் வெளிபாடுதான் முறிப்பு காணி விவகாரமும் பூதாகரமானது.

இந்த விடயத்திற்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் கடுகளவேனும் சம்பந்தம் இல்லாத போதும் அங்கும் அமைச்சர் ரிசாத் திட்டமிட்ட குடியேற்றங்களைச் செய்து வருகிறார் என்று தங்களுக்கு விசுவாசமான ஊடகங்களில், இணையத்தளங்களில், சமூக வளைத்தளங்களில் அறிக்கைகளை அள்ளிவிட்டனர். எனினும் முறிப்பு காணியின் உண்மைத் தன்மையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, இந்த விடயத்தில் தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் மீள்குடியேற்றம், கரிப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அதிலும் அரசியலைச் செய்வதை விடுத்து ஒற்றுமைப்பட வேணடும்.

நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து எமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்து இந்த கருமத்தை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற சிவத்தொண்டர் மாநாடு மற்றும் ஆறுமுக நாவலரின் எழுச்சிக் கருத்தரங்கின் இறுதி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவ்ர மாத்திரமல்ல, தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிக்கைகளிலும், மேடைப் பேச்சுக்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும், எமது பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அது வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறதே தவிர, செயல்வடிவம் பெறவில்லை.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பில் Nசுவதற்கு வாருங்கள் என முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்கள் வாயிலாக அழைப்ப விடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் அவற்றுக்கு கூட்டமைப்பு எப்படி பதிலளிக்கப் போகிறது.

இந்த நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் வருவதை விட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணி பிரச்சினை என்பன தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்படி கையாளப் போகிறது அதற்கு உதவி செய்யப் போகிறது என்பதுதான் முஸ்லிம்களின் எதர்பார்ப்பாகும். காணாமல் போனவர்களை தேடித்திரியும் போதும், யுத்தத்தினால் இழந்தவர்களை நினைவு கூறும் போது அதனை ஏற்றுக்கொள்கின்ற மனோநிலை முஸ்லிம்களின் உள்ளத்திலும் ஏற்படுத்துகிறது. காரணம் ஒரே மாகாணம், ஒரே மாவட்டம் ஒரே பிரதேசம் என்பதாலாகும்.

விடுதலைப்புலிகளின் கட்டப்பாட்டுக்குள் முஸ்லிம்கள் வாழ்ந்த போது விடுதலைப்புலிகளுக்கு பணம், பொருள், உடல் ரீதியாகவும் முஸ்லிம்கள் உதவி செய்திருக்கிறார்கள்.

யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அரசு மீளவும் சொந்த மண்ணில் மீள்குடியேற்றிய போதும் பல முஸ்லிம் சகோதரர்களும், அமைச்சர் ரிசாத் பதியுதீனம் களத்தில் நின்று தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.

எனவே, முஸ்லிம்கள் தமது சமூகத்தின் பிரச்சினைகளை ஒருபறம் வைத்துவிட்டு மனிதநேயத்துடன் தமிழ் சகோதரர்களின் குடியேற்றங்களுக்காக செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்கள் விரும்புகின்ற போது அவர்களை குழப்பி விடுகின்ற மனித நேயமே இல்லாத பணியைச் செய்கின்ற ஒரு வேலையை கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் வெளிப்படையாகச் செய்து வருகிறார்கள்.

எனவே, உள்ளத்தில் மனிதாபிமானம், இரக்கப்பார்வையில்லாத இவர்கள் வெறும் வார்த்தைகளினால் மாத்திரம் நல்லுறவு பற்றி கதைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

Published by

Leave a comment