கொழும்பு: ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் பற்றிய விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் உரையாற்ற முயன்ற வேளையில், அங்கு ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. தாஜுதீனின் மரணம் தொடர்பில் தான் உரையாற்ற முற்பட்டபோது, அருகில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தன்னைத் தாக்க வந்ததாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகள் வழமைபோல சபாநாயகர் தலைமையில் இன்று காலை ஆரம்பமானதை அடுத்து வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றினார். இதையடுத்து, பேசத் துவங்கிய முஜிபூர் ரஹ்மான், ரக்பி வீரர் தாஜுதீனின் மர்மமான மரணம் தொடர்பில் உரையாற்றினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து, சபையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சபாநாயகரின் தலையீட்டை அடுத்து அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், தான் தாஜுதீனின் பெயரைக் கூறியவுடன் அருகிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தன்னை தாக்க வந்ததாக கூறினார்.
இதனிடையே நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சியினர் தாக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சபையில் கூறினார்.
![parliament[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/08/parliament1.jpg?w=780&h=521)
Leave a comment