- கரீம் ஏ.மிஸ்காத், எம்.அனஸ்-பொத்துவில்
அம்பாறை: பொத்துவில், ஹிஜ்ரா நகர் மக்கள், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலால் தினமும் தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை சாதகமாக்கி, பிழைப்பு நடாத்தஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பொத்துவில் பிரதேசத்திலுள்ள 27 கிராம சேவகர் பிரிவுகளில் 26ஆவது பிரிவான ஹிஜ்ரா நகர், பொத்துவிலிருந்து சுமார் 9கிலோமீற்றர் தொலைவில் வடமேற்காய் அமைந்துள்ளது.
சுமார் 65வருட வரலாற்றைக் கொண்ட அந்த குடியேற்றக் கிராமம், 1990இல் ஏற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2004ல் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 263 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.
ஆயினும் அவை, நகரில் சொந்த வீடு இல்லாத பாதிக்கப்பட்ட வறியமக்கள், நகரில் சொந்த வீடு உள்ள பாதிக்கப்படாத பணக்காரமக்கள், இது வரை காலமும் இங்கு கடமையாற்றிய கிராம சேவகர்கள், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள், இந்த நிர்மாணப் பணியோடு தொடர்பு பட்ட ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பல வகையினருக்கு பகிரப்பட்டுள்ளது அல்லது கைமாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகரில் வீடு வசதியில்லாத 104குடும்பங்கள் மாத்திரமே தற்போது இங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இந்த மக்களே தண்ணீருக்காய் தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு வதியாத ஏனைய 159வீட்டுச் சொந்தக்காரர்களில் ஒரு கூட்டமே அதனை சாதக மாக்கி பிழைப்பு நடாத்தத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
அதாவது, அந்த நிரந்தர வீடு நிர்மாணிப்பின் போது, வழங்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் நீர்விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கவென அமைக்கப்பட்ட குழுவின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட தடங்கலால், கடந்த மூன்று வருடங்களாக தண்ணீருக்காய் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த குடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வுகாணும் பொருட்டு, நீர்வழங்கல் அதிகாரசபை நிர்மாணிக்கத் திட்டமிட்ட நீர்த்தாங்கியின் நிர்மாணப்பணிகளும் கடந்த இருவருடகால இழுத்தடிப்புக்குப் பின் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த நீர்த்தாங்கி மூலமான நீர் விநியோகத்தையும் தம்மூடாகவே மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி வரும் தற்போது இங்கு நிரந்தரமாக வதியாத அந்தக் குழுவானது, அதற்கான முயற்சிகளை அதிகாரமட்டத்தில் மேற்கொண்டும் வருகின்றது.
அதற்கு பிரதேச செயலக அதிகாரமட்டமும் ஒத்துழைப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலைமையானது நீர்விநியோகம் மீண்டும் முன்னைய நிலைக்குச்சென்று, மீண்டும் தண்ணீருக்காய் அலையும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் அக்கிராமத்தில் தற்போது நிரந்தமாகவதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்விநியோகத்தில் முன்னைய பாதிப்பு மீண்டும் ஏற்படாதிருக்க, நாங்கள் தண்ணீருக்காய் மீண்டும் அலையாமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதே எமது வினயமான வேண்டுதலாகும்.