ஓ.எல். மாணவர்களை “விலை” வைக்கும் ரியூட்ரிகளும் ஆசிரியர்களும்

kattankudy main roadகாத்தான்குடி: தற்பொழுது க.பொ.த. சா/த பரீட்சை இடம்பெற்று வருகின்றது. “11 வருடங்கள் கல்வி கற்றதன் பிரதிபலன் இந்தப் பரீட்சையின் முடிவில் தங்கி இருக்கின்றன” எனும் ஆசான்களின் கண்டிப்பிலும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பிலும் மாணவர்கள், கடந்த 11 வருடங்கள் கற்ற புத்தக சுமையை பரீட்சைத் தாள்களில் இறக்கிவைக்கின்றனர்.

இப் பரீட்சை முடிவதற்கிடையிலேயே, “ஏ.எல். வகுப்புக்கள் உடன் ஆரம்பம்” என இம்மாணவர்களைக் குறிவைத்து, வைத்த கண் வாங்காமல் காசு சம்பாதிக்க காத்திருக்கின்றன காத்தான்குடியின் ரியூட்டரிகளும் தனியார் வகுப்பு ஆசிரியர்களும்.

பொதுப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கட்டாய விடுமறை அவசியமான ஒன்றாகும். இதனையும் அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

மார்க்க விடயங்களில் ஈடுபடக்கூடிய மாணவர்கள், மார்க்க விடயத்தில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும், சுற்றுப் பயணங்கள், அல்லது நண்பர்களிடம் மற்றும் உறவினர்களிடம் சென்று வரக்கூடிய சந்தர்ப்பங்களும் இக்காலத்தில் அதிகமாக இம்மாணவர்களின் தேவையாக இருக்கின்றன.

வெளியூரில் கடை வைத்திருக்கும் தனது உறவினர்களிடம் சென்று, சிங்களத்தைப் படித்துக்கொள்வதற்கு, வியாபாரத்தைப் பழகிக்கொள்வதற்கு, வெளியூர் நண்பர்களையும், அங்குள்ள சூழல்களையும் அறிந்து கொள்வதற்கும் இம்மாணவர்களுக்கு பரீட்சை விடுமுறை கட்டாயமாகிறது.

ஏ.எல். படிப்பதற்கு பொருளாதாரத்தை எதிர்பார்த்து, பரீட்சை முடிவுகள் வருவதற்கிடையில் நாலுபணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகமான மாணவர்கள் எமது சமூகத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறான பல விடயங்களை மாணவர்கள் எதிர்நோக்க இருக்கும் இந்நிலையில், இப்போதே டியூட்டரிகளும், ஆசிரியர்களும் விளம்பரத்தை தொங்கவைத்துவிட்டனர்.

பரீட்சை முடிந்து மறுநாளே, வெளியூரில் இருக்கும் தனது தந்தைக்கும், வெளிநாட்டில் இருக்கும் தனது சகோதரனுக்கும், மாணவர்கள்…

“வாப்பா நான் என்ன பிரிவு ஏ.எல். இல் படிக்க..?”

“சயன்ஸ், மெத்ஸ் என்றா இப்பவே கிளாசுக்குப் போகனும்…. அதுக்கு காசும் வேணும்” என கேட்கும் மாணவர்களும்….

“….நானா நான் சயன்ஸ் படிக்கவா அல்லது கொமர்ஸ் படிக்கவா…” என வெளிநாட்டில் இருக்கும் நானாவுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுக்கும் மாணவ, மாணவிகளும் இந்த டியூட்டரிகளால் அழுத்தப்படுகின்றனர்.

ஏ.எல். பாடத்திட்டத்தை இரு வருடங்களுக்கு அரசாங்கம் தொகுத்து வழங்கி இருக்கிறது. இலங்கையில் இருக்கும் விடுமறைகளைத் தாண்டியும், ஒன்றரை வருடங்களுக்குள் மாணவர்களை உயர்தரப்பரீட்சைக்குத் தயாராக்கக்கூடிய அளவிலேதான் இலங்கை உயர்தரக் கல்வி பாடத்திட்டம் காணப்படுகிறது.

ஆனால், வெள்ளம் என்றாலும், மழையென்றாலும், புயல் என்றாலும், விடுமுறையென்றாலும், “மையத்து” என்றாலும் வருடம் 365 நாட்களும் மாணவர்களை ரியூசன் என “வதை”க்கும் இத்தகைய தனியார் வகுப்பு ஆசிரியர்களும், டியூட்டரிகளும் சாதாரணமாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சுமார் 3 வருடங்கள் வகுப்பு நடாத்துகின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே, டியூட்டரிகளும், தனியார் வகுப்பு ஆசிரியர்களும் குறிப்பாக தற்பொழுது ஓ.எல்.பரீட்சை எழுதும் மாணவர்கள் விடயத்திலும், எதிர்கால மாணவர்கள் விடயத்திலும் அக்கறையுடன் செயற்படுமாரும், மாணவர்களை “விலை” பேசாமல் அவர்களுக்கான விடுமுறைகள் முடிந்ததன் பிற்பாடு, பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் வகுப்புக்களை ஆரம்பிக்குமாரும் கேட்கப்படுகின்றனர்.

இவ்விடயத்தில் பெற்றோர்களும், பொது அமைப்புக்களும் அதிக கவனமெடுக்க வேண்டும் எனவும் கேட்கப்படுகின்றனர்.

காலை மற்றும் மாலை வகுப்புக்கள்:

மாணவிகளுக்கான வகுப்புக்கள் காலை 6 மணிக்கு சில தனியார் வகுப்பு ஆசிரியர்களும் டியூட்டரிகளும் நடாத்திவருவதை அறிய முடிகிறது. தற்பொழுது இருந்சூழ்ந்த மழை காலமென்பதால், மாணவிகளுக்கான வகுப்புக்களை பிற்படுத்தி ஆரம்பிக்குமாரும், பிந்திய மாலை நேர வகுப்புக்களை மாணவிகளுக்குத் தவிர்த்துக்கொள்ளுமாரும் குறித்த தரப்பினர் வேண்டப்படுகின்றனர்.

இருள்சூழ்ந்த நேர (காலை-மாலை) வகுப்புக்கள் பருவமடைந்த எமது பெண்பிள்ளைகளுக்கு அவசியமற்றது என்பதை அனுபவ ரீதியாக முன்வைக்கின்றோம்.

நன்றி

  • யுவர்காத்தான்குடி வாசகர் மற்றும் சமூக நலன் சார்ந்தோர்

Published by

Leave a comment