கொழும்பு: சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இஸ்ரேலிய முன்னாள் ஜெனரல் ஒருவரின் மகனான பிரபல பேச்சாளர் மிகோ பெலட் சிறப்பு பேச்சாளராக பங்கேற்கவுள்ளார்.
இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் விஷேட உரையாற்றவுள்ள மிகோ பெலட்டின் பாட்டனார் இஸ்ரேலிய சுதந்திர பிரகடனத்தில் கையொப்பமிட்ட பிரபல யூத தலைவரான எவர்ஹாம் கட்னெல்சன் என்பவர் என்பதும் இவரது தந்தை, 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறு நாள் யுத்தத்தின் போது களத்தில் இருந்து போரிட்ட பிரபல இஸ்ரேலிய இராணுவ ஜெனரலான ‘ மெட்டி’ என அறியப்படும் ஜெனரல் மட்டியாஹூ பெலெட் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மிகோ பெலட், இந்த ஒருமைப்பாட்டு நிகழ்வில் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை மையப்படுத்தி உரையாற்றவுள்ளார். அதில் 1947 முதல் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினையில், தன்னால் கண்டறியப்பட்ட பல உண்மைகளையும் அவர் வெளிப்படுத்தவுள்ளார்.
மிகோ பெலட் தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று குரல் கொடுத்து வருவதுடன் இவ்விகாரம் தொடர்பில் பிரபலமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பொது மக்களும் கலந்துகொள்ள முடியுமான திறந்த நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் மறைந்த எழுத்தாளர் ஹமீட் அப்துல் கரீம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புக்கள் அடங்கிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஆர். ரஸ்மின்

Leave a comment