- இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாலிபிடிப்பதற்கென்றே அள்ளக்கை ஆதரவாளர்கள் பல பாகங்களிலும் இருந்து வருகின்றபோதிலும், காத்தான்குடியைப் பொருத்தமட்டில் அரசியல் அள்ளக்கைகள் தனிச் சிறப்பைப் பெறுகின்றனர்.
தேர்தல் நெருங்கிவரும்போது, மூடிய அறைக்குள் தனக்கு என்ன அமைச்சுப் பதவி என்பதை பேரினக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு, சமூகத்தை விற்றுப் பிழைக்கும் இந்த முஸ்லிம் அரசியல் கலாச்சாரம் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரபுடன் உதயமாகியது.
இதனைத் தொடர்ந்து குறிப்பாக 1994 தேர்தல்களிலிருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள் எவராக இருந்தாலும் இலங்கையின் இரு பெரும்பான்மைக் கட்சிகளுடன் மூடிய அறைக்குள் ஒப்பந்தம் செய்துவிட்டு, சமூகத்தை அடமானம் வைக்கும் பரிதாப நிலைக்கே இன்றைய அரசியல்வாதிகள் இலங்கை முஸ்லிம்களை காய்நகர்த்திச் செல்கின்றனர்.
“இஸ்லாமிய அரசியல்” என தனது அரசியல் கொள்கையை காத்தான்குடிக்கு அறிமுகப்படுத்தியிருந்த அப்துர் ரஹ்மான் தரப்பு, தனது சொந்த விடயத்தில் இஸ்லாத்தை மதிக்கிறார்களா என்ற கேள்வி காத்தான்குடி சமூகத்தில் இருந்து வந்தது.
ஆதாரமாகக் கிடைத்த சான்றுகளுடன், அப்துர் ரஹ்மான் தரப்பினர் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் செய்துகொண்ட தேர்தல் ஒப்பந்தம் மீறப்பட்டதால், மீராபாலிகா “இசை நடன” ‘கிளிப்’பில் மௌலவி சஹ்ரான் அப்துர் ரஹ்மானையும் விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனத்தின் பின்னர், அப்துர் ரஹ்மான் தரப்பு அள்ளக்கைகளுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதை நேரடியாகவே அறிய முடிகிறது.
குறிப்பாக ஹிஸ்புல்லாஹ்வின் அரசியலானாலும், அப்துர் ரஹ்மானின் அரசியலானாலும், ஹிஸ்புல்லாஹ், அப்துர் ரஹ்மான் தரப்பு உட்பட அதன் அள்ளக்கைகள் எதிர்பார்ப்பது கொள்கையில்லாத அரசியலே!
மைத்திரியைத் தூற்றிவிட்டு மைத்திரியுடன் கூட்டுச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ்வும், ரவூப் ஹகீமை தூற்றிவிட்டு ரவூப் ஹகீமுடன் கதிரைக்கு இறுதிவரை மண்டியிட்ட அப்துர் ரஹ்மானும் அவர்களது அள்ளக்கை ஆதரவாளர்களும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே தவிர வேறொன்றுமல்லர்.
இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு அளிக்கும் பலர், தான் வெளிநாடு செல்வதற்கு செலவான பணத்தை இன்னும் ஈடுசெய்ய முடியாத நிலையில் இருப்பதையும், தனது குடும்பத்தின் தேவையை நிறைவு செய்ய முடியாமல் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
பல்கலைக்கழக, கல்லூரி பட்டம் பெற்று, ஓர் வேலையொன்றைத் தேடிப் பெற்றுக்கொள்ள முடியாமல் முதிர்கண்ணிகளாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் எம் சகோதரிகளுக்கு வேலைவாய்ப்புப் பற்றி எந்த அரசியல்வாதி சிந்தித்தார்..?
தான் பெற்ற பட்டத்தை வைத்து 30 வயதிலும் தொழில் பெற முடியாமலும், திருமணம் செய்ய வசதியில்லாமலும், வேலைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எமது சகோதரர்களை எந்த அரசியல்வாதி நினைத்துப்பார்த்தார்..?
அண்மையில் கிழக்கின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் அவுஸ்திரேலியா பல்கலைகக்கழகத்தில் பட்டம் பெற்றதை பெருமையாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தார்.
“லைக்”குகள் குவிந்தன! “கொமண்”டுகள் வழிந்தன!! மாஷாஅல்லாஹ் ஓங்கின!!!
ஓர் அரசியல்வாதியின் வருமானத்தில் குடும்பம் நடாத்தவே போதாமலிருக்கும் இந்நிலையில், கொழும்பில் வீடு, பிரபலமான பிஸ்னஸ், மகனை அவுஸ்திரேலியாவில் படித்து பட்டம் பெற வைப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது..? என்பதை ஒவ்வொரு அள்ளக்கைகளும் சிந்திக்க வேண்டும்.
எனது தந்தையிடமும் பணமிருந்தால் நானும் லண்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா டிகிரியைப் பெற்று பெருமைப்பட்டிருபேனே என ஏங்கும் எத்தனையோ வறுமையான சகோதர, சகோதரிகள் வீட்டுக்குள் இலங்கைப் பட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு வாய்ச்சோற்றுக்காக முடிங்கிக்கிடக்கின்றனர்.
போகின்ற போக்கைப் பார்த்தால் இந்த அரசியல்வாதிகளின் நிலைமை ஷேஹூமார்களின் நிலைமைக்கு சென்றுவிட்டது.
தான் எடுப்பதுதான் சட்டம், அதனை யாரும் தடுக்க முடியாது. கேள்வி கேட்கக் கூடாது. விமர்சிக்கக் கூடாது என்றே இவ்விரு அரசியல்வாதிகளும், அவர்களது அள்ளக்கைகளும் நினைக்கின்றனர்.
மீரா பாலிகாவில் இடம்பெற்ற “கலாசார சீரழிவை”க் கண்டித்து காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை, ஹிஸ்புல்லாஹ்வின் அள்ளக்கை ஆதரவாளர்கள் எவரும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனைப் பகிர்ந்தால் எங்கள் “சேஹை” அவமதிப்பதாக அமையும் என்ற நிலையில் அவரது அள்ளக்கைகள் சங்கடப்பட்டனர்.
இங்கு மார்க்கம் முக்கியமல்ல. சேஹூதான் முக்கியம். சேஹூ எதைச் செய்தாலும் சரிதான். எவரும் விமர்சிக்ககக்கூடாது.
இவர்களின் இத்தகைய நிலையைத் தடுப்பதற்கு, கண்டிப்பதற்கு, விமர்சிப்பதற்கு எவரும் இருக்கக் கூடாது என்பதே இவர்களது எதிர்பார்ப்புகளாகும்.
காலம் பதில் தரும்!
- யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
Leave a comment