பொத்துவில் ஆசிரியர்கள் எவரும் உள்ளீர்க்கப்படவில்லை: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கண்டனம்

  • கரீம் ஏ. மிஸ்காத்

POTTUVILபொத்துவில்: மீளமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைக்கு 2015.11.22 உடன் ஒருவருடமும் ஒரு மாதமும் பூர்த்தியாகின்றது. ஆனால் இதுவரைக்கும் பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் ஒருவருக்கும் உள்ளீர்ப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறவில்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

1994.10.06 முதல் செயற்படும் வண்ணம் தாபிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வந்து இலங்கை ஆசிரியர் சேவை, 2008.07.01முதல் செயற்படும் வண்ணம் மீளமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கான 1885/38ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2014.10.23இல் வெளியிடப்பட்டது. அதன்போது உள்ளீர்ப்பு, நியமனம் மற்றும் பதவி உயர்வு என அனைத்து நடவடிக்கைகளும் மத்திய நிரல் கல்வி அமைச்சே செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் குறித்த கடிதங்கள் கிடைக்கப்பெறாதுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு, முன்னரைப்போல், கல்வி வலயங்களுக்கு இப்பணிகள் பன்முகப்படுத்தப்படல் வேண்டும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக விடுத்துவந்த கோரிக்கையையடுத்து, 2015.04.10முதல் இப்பணிகள் கல்வி வலயங்களுக்கு கையளிக்கப்பட்டது.

அத்துடன், மத்திய நிரல் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன். கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் இப்பணிகளுடன் தொடர்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் முதல், முகாமை உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு 2014.12.22 மற்றும் 2015.07.24ஆம் திகதிகளில் இரு தடவைகளில் தெளிவூட்டல்களும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2015.06.08ஆம் திகதி அடங்கலாக அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலை ஆசிரியர்களுக்கான உள்ளீர்ப்புக்கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன்போது அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களில் முன்னைய இரு கோட்டப் பாடசாலைகளுக்குமே இதுவரை கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

பொத்துவில் பாடசாலை ஆசிரியர்கள் ஒருவருக்கேனும் இதுவரை இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால், இப்பாடசாலை ஆசிரியர் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். மிகுந்த மன உளச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகளிடமும், ஆசிரியர் தொழிற் சங்கத்திடம் முறையிட்டு வருகின்;றனர். கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கிழ் வரும் தாம் மட்டும் ஏன் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் எனவும் இந்த ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை, ஆசிரியர் சேவை உள்ளீர்ப்புக் கடிதங்களை வழங்கும் பணி கல்விக் கோட்ட ரீதியாகவும், பாடசாலை ரீதியாகவும் இடம்பெற்றுவருவதாகவும், அட்டாளைச்சேனை, அக்கரைப் பற்று கல்விக் கோட்டங்கள் மற்றும் பொத்துவில் உபவலயம் என்பவற்றிலுள்ள மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் சுமார் 1400 ஆசிரியர்களுக்கான கடிதங்களை அக்கரைப்பற்று கல்வி வலயம் வழங்கி வருவதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்த செய்தி ஒன்றும் 2015.08.26ஆம் திகதிய தேசிய நாளிதழ் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு கடிதத்தையேனும் இன்னும் கிடைக்கப்பெறாதுள்ள, பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை ஆசிரியர்களது விடயத்தில் இனியும் காலங் கடத்தாது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைவாகக் கடிதங்கள் கிடைப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளரும். மாகாணக் கல்விப் பணிப்பாளரும். கல்விச் செயலாளரும் ஆவன செய்யவேண்டும் என்பதே இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களினதும் வினயமான கோரிக்கையாகும்.

Published by

Leave a comment