கொழும்பு: ஆளும் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இரண்டு அணிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் விருப்பத்தை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு அமைச்சர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவர் இதில் ஒரு பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி வருகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அதிருப்தியடைந்த நிலையில் இருக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த குறிப்பிடத்தக்களவு அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்று வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட தற்போதைய பிரதமரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் தரப்பு, இந்த ஆபத்தில் இருந்து தப்பித்து அரசாங்கத்தை தற்காத்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி எதிர்ப்பு அணியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேசப்படுகிறது.
இந்த இரண்டு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் இரகசியமான முறையில் கீழ் மட்டத்திலான சில சுற்று ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்கு அமைய இரண்டு தரப்புகளின் தலைவர்கள் விரைவில் ஒருவரை ஒருவர் சந்திக்க உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Leave a comment