யார் இவர்கள்..?

  • மஸாகி

isisஅப்பாவிகளா..?
அல்லது – அடப்பாவிகளா..?

ஐயோ ஐயோ – என்று
கதறக் கதற சுட்டுத் தள்ளும்
தீவிரவாதம் எப்படி – இஸ்லாமிய அரசாக முடியும்..?

வல்லரசுகள்
விதைப்பது அவர்களையாகட்டும் – ஆனால்,
அறுப்பது எங்களையல்லவா..?

இவர்கள் – ஆயுதம் தரித்து
அநீதிக்காக போராட வந்தவர்களா..?
அல்லது – அநீதியை நிலைநாட்ட வந்தவர்களா..?

இவர்கள் – கருப்புடையணிந்து
இருட்டினைப் போக்க வந்தவர்களா..?
அல்லது – கும்மிருட்டினை திணிக்க வந்தவர்களா..?

அவர்கள் – தகர்ப்பது
ஆலயங்களை அல்ல..
இஸ்லாமிய யுத்த தர்மங்களை..

அவர்கள் – கொல்வது
குழந்தைகளை அல்ல..
குர்ஆனின் ஜீவகாரூண்ய போதனைகளை..

தீவிரவாதம் ஒருபோதும் தீர்வாகாது..
சாந்திமார்க்கம் – இஸ்லாமும்
அதைப் போதிக்காது..

இஸலாம்
அடைக்கலமானவர்களுக்கு
அரண்கொடுக்க வாள் எடுத்ததே தவிர,
அதைப் – பரப்புவதற்காக அல்ல..

இஸ்லாமியர்
நெஞ்சு நிமிர்த்தி – அநீதிக்கெதிராய்,
போர் புரிந்தார்களே தவிர
போற வாரவனைக் கொன்றுவிட்டு,
பொறம்போக்காய் – செத்துமடியவில்லை..

அவர்கள்
சட்டலைட்டு வைத்து – சாகடித்தால்,
அதை தகர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி
வானிலேயே சமாதிகட்டு..

அவர்கள்
உற்பத்தி திறமையை
உள்ளங் கையில் வைத்திருந்தால்,
நீ விரலசைவில் – வியாபார சந்தையை வளைத்து,
வல்லரசுகளை திணறடி…

isis

உன் அழிவால் –
அழிவுகளையே வளர்க்க முடியும்..
ஆனால் – ஆக்கத்தால்,
அவர்களையே வாங்க முடியும்..

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திடம்
இல்லாதது எது..?
மத்திய கிழக்கு மண்ணில்,
கிடைக்காத பொக்கிஷம் எது..?

நாமெதற்கு அவர்களிடம்
உயிர்பிச்சை கேட்க வேண்டும்..?
அவர்கள்தான் – எம்மிடம்
மடிப்பிச்சை வாங்க வேண்டும்..

எமது
சோம்பேறித் தனத்தால்,
அவர்களை தோண்டவிட்டதால்தான்
எமது சாம்ராஜ்ஜியத்தின்
அடிக்கல்லை தோண்டி தோண்டி
அவர்களின் குடிசைகளுக்கு
அஸ்திவாரம் போடுகின்றார்கள்..

இஸ்லாத்திற்கும்
இந்த கயவர்களுக்கும்
இடையில் முளைத்த – இந்த
முடிச்சவிக்கிகள் யார்..?

இவர்கள் உண்மையானவர்களா..? அல்லது
இவர்களை ஊடகங்கள் பொய்ப்பிக்கின்றனவா..?
முடிச்சவிழும் – முகமூடியும் கிழியும் – ஒருநாள்..

Because,
அவர்கள்
ஏமாற்ற நினைப்பது எம்மையல்ல..
ஏந்திய கையில் – இரத்தம் சொட்டும் – அதிகபட்ச,
அநீதி இழைக்கப்பட்டவர்களின் – இறைவனை..

சூழ்ச்சியாளர்களின் – ஆட்சியாளன்
இந்தமாதிரி விளையாட்டை – எப்பொழுதும்,
வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை..

Published by

Leave a comment