காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச காணி எல்லை நிர்ணயம் தொடர்பில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதற்காக நாம் ஒன்றுபட்டு வட்டார எல்லைகள் அதிகரிக்க பாடுபட வேண்டும் இவ்வாறு நேற்று இடம்பெற்ற காணி எல்லை நிர்ணயம் தொடர்பாக காத்தான்குடியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1987.05.12 ம் மாத 483/18 இலக்க வர்த்தமானியில் காத்தான்குடி பிரதேச காணி மீள் எல்லை நிர்ணயம் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திற்கும் தற்போது 2015.08.15 வர்த்தமானி அறிவித்தலுக்கும் கூடுதலான வித்தியாசம் காணப்படுகின்றது. எமது நிலப்பரப்பு குறைந்தளவுடன் காணப்படுவதுடன் 18 கிராம சேவகர் பிரிவும் 10 வட்டாரங்களாக காட்டப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

காத்தான்குடி பிரதேசமானது சன அடர்த்திமிக்க குறுகிய நிலப்பிரதேசம் என்பதாலும் அதிகளவான சனத்தெகையினை கொண்ட பிரதேசம் என்பதாலும் 18 கிராம சேவகர் பிரிவு இருப்பதைப்போன்று 18 வட்டாரங்களாகவும் பிரிக்கப்படும்போது காத்தான்குடியில் அமையப்பெறவுள்ள மாநகர சபை 18 வட்டாரங்களைக்கொண்ட பகுதியாகவும், அமையவுள்ள புதிய காத்தான்குடி பிரதேச சபை 10 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டு நிருவாகம் சிறப்பாக இயங்க வழிவகுக்கும் எனக்கருதுகின்றேன்.
அத்துடன் இது தொடர்பில் புத்திஜீவிகள் சமூக அமைப்புக்கள் கல்விமான்கள் தங்கள் ஆலோசனைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க முடியும் எனவும் அதற்காக நவம்பர் 21 ம் திகதிக்குள் அறிவிக்குமாறு கூறப்பட்டபோதிலும் இத்திகதி நீடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மலர்ந்திருக்கின்ற நல்லாட்சியில் எல்லை நிர்ணயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படாமல் இது அமைக்கப்பட வேண்டும் எனவும் இதேபோல் கல்குடா, ஓட்டமாவடி, வாழைச் சேனை பிரதேசங்களும் வட்டாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்தார்.
MHM. அன்வர்
Leave a comment