வெக்கங்கெட்ட வெளிநாடு..

  • மஸாகி

watalappanஅக்ரிமென்ட் போட்ட
அடிமைச் சங்கிலி – அதை நாம்
உடைத்தெறிவது எப்போது..?

படித்த படிப்புக்கு
வேலையுண்டு – ஆனால்
வேதனத்தை விட வேதனைகளே – இங்கு அதிகமடா..

மகளுக்கு வீடு
மகனுக்கு பாஸ்போர்ட் – என்ற
பெற்றோரின் – சொத்துப் பிரிப்பில் மாற்றம்வேண்டும்..

மகளுக்கு வீடுவேண்டாம்..
மகனுக்கு தொழில்கொடுங்கள்..
உங்கள் மருமகள் – மகளாய் வீடு வருவாள்..

ஏழைக் குமரின் – ஏக்கம் தீர்த்து
வாழ்க்கை கொடுக்க வேண்டிய இளைஞர்களோ – இங்கு
பெருமூச்சுகளுடன் ராத்தா, தங்கைக்காக….

உம்மா சமைத்த பிரியாணி
ராத்தா செய்த வட்டிலப்பம்
தங்கச்சி காய்ச்சிய – கோழிக் கஞ்சி
வட்ஸப்பில் வந்தால் – வாயூரும் – வயிறாருமா..?.

கடிதத்தில் – ஆரம்பித்த பலர்
ஸ்கைப், வைபர் என – தொழில்நுட்பத்தைதான்
மாற்றியிருக்கிறார்களே தவிர – இன்னமும்
கட்டாரு, சவுதி, டுபாய் என்று –
கல்ப் ஐ தான் – சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்..
வீட்டிலிருந்து வந்த – பக்கோடாவை கூட
உலககோப்பை கிடைத்ததுபோல் – காட்டி, காட்டி
வயித்துவலி வந்தாலும் பரவாயில்லையென
பேஷ்புக் யில் ஸ்டேட்டஸ் போடும் – நண்பர்களே..

watalappan

ஜப்பான்காரனும் – அமெரிக்கனும்
ஊரிலிருந்து விண்ணுக்கு ராக்கட் அனுப்ப வழிதேடும்போது,

இருபது முப்பது வருடமாய் – வெளியிலிருந்து
ஊருக்கு சாக்லட் அனுப்ப ஆள்தேடுவதுதான் நமது பிரச்சனை..

ஆயுதமெடுத்தவனுக்கும் – யுத்தநிறுத்தமுண்டு
பாஸ்போர்ட் எடுத்தவனின் – பிரச்சனைகள் முடிந்ததுண்டோ..?

அனுபவம் தேடி ஆளுமையுடன் செல்லுங்கள்..
ஆயுளை முடிக்க செல்லவேண்டாம்..
காசுழைக்கும் விருந்தாளியாய் செல்லுங்கள்..
கல்ப் தான் தலையெழுத்தென கிடக்கவேண்டாம்..

பேசுவதால் மட்டும் – மாற்றம் வராது
யோசியுங்கள் – முடிவெடுங்கள் – செயற்படுங்கள்..
வெட்கங்கெட்ட வெளிநாட்டில்
விடிந்தவர் வாழ்க்கைகளை விட – ஆயுள்
முடிந்தவர் வாழ்க்கைகளே – அதிகம்..

உன் – உழைப்பை வெளியில் கொட்டிவிட்டு
ஓய்வெடுக்க வீட்டம்மாவிடம் செல்பவனே..
எல்லாம் ஓய்ந்த பிறகு – நீ சேர்த்த
பணத்தை அனுபவிக்க டாக்டரம்மாவால் தான் முடியும்..

விரதமிருந்த வெளிநாடு
உன் மகளுக்கு – வாழ்க்கை கொடுக்கலாம்..
ஆனால் உன் மனைவிக்கு..?????

Published by

Leave a comment