அல்குர்ஆன் மொழிபெயர்ப்பா? மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பா?

  • முஹம்மது நியாஸ்

quran11[1]இம்மாதம் கடந்த 8ம் திகதி அதாவது 08.11.2015 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் வைத்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் பலத்த எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அல் குர்ஆனுடைய சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதை நாம் எல்லோருமே நன்கறிவோம்.

குறித்த மொழிபெயர்ப்பை பொறுத்த வரைக்கும் அது அல் குர்ஆனுடைய சிங்கள மொழிபெயர்ப்பு என அடையாளப்படுத்தப்பட்டாலும் உண்மையில் அது அறபு மொழியை மூல மொழியாகக்கொண்ட அல் குர்ஆனின் நேரடியான சிங்கள மொழிபெயர்ப்பல்ல.

மாற்றமாக ஏற்கனவே அது சகோ. பீஜே அவர்களால் அறபு மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அந்த தமிழ் மொழிபெயர்ப்பைத்தான் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சிங்கள மொழிக்கு மீள்மொழிபெயர்ப்பு செய்தது.

அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள மொழியிலான அல் குர்ஆன் தர்ஜுமாதான் கடந்த 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சுகததாச உள்ளக அரங்கில் வைத்து கோலாகலமாக வெளியிடப்பட்டது.

pj

எனவே மேற்படி மொழிபெயர்ப்பானது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினால் நேரடியாக மொழி பெயர்க்கப்படவுமில்லை, அவ்வாறு மொழிபெயர்ப்பதற்கான சுயமான மொழியறிவையும் ஆற்றலையும் கொண்டவர்களாக அந்த ஜமாஅத்தின் உலமாக்கள் யாரும் இல்லையென்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

அத்தோடு குறித்த இம்மொழிபெயர்ப்பானது ஒரு விசேட அம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது உலகில் இதுவரை வெளியிடப்பட்ட அல் குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள் அனைத்துமே அது ஆங்கில மொழியாகட்டும் ஜேர்மன், ஹிந்தி, உருது இன்னும் எந்த மொழியாகட்டும். அந்தந்த மொழிகளில் சிறப்புத்தேர்ச்சியும் பாண்டித்தியமும் பெற்ற மொழி வல்லுனர்களால் அறபு மொழியிலிருந்து நேரடியாகவேதான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள இந்த மொழிபெயர்ப்பானது அவ்வாறான நடைமுறைக்கு ஆட்படாதவாறு ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட ஒரு மொழியிலிருந்து மற்றுமோர் மொழிக்கு மீளவும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

என்னுடைய அனுமானத்தின் படி உலகத்திலேயே மூல மொழியல்லாத பெயர்ப்பு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட முதலாவது தர்ஜுமதுல் குர்ஆன் இதுவாகத்தான் இருக்கவேண்டும். (அழ்ழாஹ் அறிந்தவன்)

பைபிளைப்போன்றதே இம்மொழி பெயர்ப்பு.
“””””””””””””””””””””””””””””””””””””””
கிறிஸ்தவ மக்களால் வேதநூலாக நம்பப்படுகின்ற பைபிளும் கூட இவ்வாறுதான் மொழிபெயர்க்கப்படுகிறது.

அதாவது, பைபிளுடைய மூலமொழிகள் ஹீப்ரு மற்றும் அரமாயிக் மொழி என கிறிஸ்த்தவ திருச்சபைகள் கூறிக்கொண்டாலும் அவ்விரு மொழிகளும் தற்போது உலகத்தில் எந்தவொரு மூலை முடுக்கிலும் உயிரோடு இல்லை.

மேலும் வத்திகான் தலைமை திருச்சபையில் கூட பைபிளின் மூல மொழிகளாகக் குறிப்பிடப்படுகின்ற இவ்விரண்டு மொழிகளையும் கற்றறிந்த மொழிவல்லுனர்கள் யாரும் கிடையாது.

இன்னும் இஸ்ரேல் நாட்டில் ஹீப்ரு மொழி நடைமுறையிலுள்ளதாக வாதிட்டாலும் அது பைபிளிலுள்ள நான்கு சுவிஷேசங்களும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு எழுத்தாசிரியர்களால் முதன்முதலாக தொகுத்து எழுப்படும்போது அவர்களுடைய ஆயுட்காலங்களில் நடைமுறையில் இருந்த ஹீப்ரு மொழி கிடையாது.

மாறாக ஒரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் புதிதாக ஒரு மொழியை தோற்றுவித்து அதற்குத்தான் ஹீப்ரு அல்லது அரமாயிக் மொழி என பெயர் சூட்டியுள்ளார்கள்.

இவ்வாறு பைபிளுடைய மூலமொழி உலக மொழிப்பயன்பாட்டிலிருந்தும் வழக்கொழிந்து போய்விட்டதன் காரணமாக உலகப்பொது மொழியாகிய ஆங்கில மொழியிலிருந்தே பைபிள் ஏனைய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

பைபிளுடைய மூலமொழி வழக்கொழிந்து போய்விட்டதனால் அதனை இவ்வாறு பிறமொழியிலிருந்து வேறு மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வதில் ஒரு நியாயமுள்ளது.

ஆனால் அல் குர்ஆன் என்னும் இறைவேதம் அந்தளவுக்கு பரிதாகரமான நிலையை அடையவில்லை. மாறாக அது ஆயிரத்து ஐநூறு வருடங்களாக அதன் மூலமொழியான அறபு மொழியிலேயே கண்ணும்கருத்துமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் கலீபா உஸ்மான்(றழி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் அல் குர்ஆன் முதன்முதலாக நூலுருவாக தொகுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி கூட பலநூறு ஆண்டுகள் உருண்டோடியும் இன்றுவரை பாதுகாப்பாக இருந்து வருகிறது.

அப்பேர்ப்பட்ட மூலமொழிரீதியாக தன்னிகரற்ற சிறப்புக்கள், தனித்துவங்கள் பலவற்றையும் உள்ளடக்கிய அல் குர்ஆனை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அதன் மூல மொழியை தவிர்த்து பெயர்ப்பு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்து வெளியிட்டதில் மறைந்திருக்கின்ற நியாயம்தான் என்ன?

அத்தோடு அல் குர்ஆனுடைய மூல மொழியாகிய அறபுமொழி கூட பைபிளின் மூல மொழியைப்போன்று வழக்கொழிந்து போய்விட்ட ஒருமொழியல்ல.

மாற்றமாக அறபு மொழியானது இன்றைய உலகில் மிகக்கணிசமான மக்களால் உயிரூட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிற ஒரு மொழியாக இருந்து வருகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சர்வதேச மொழிகளில் அறபுமொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட அறிவியல் மொழியாகிய அறபுமொழி உலகில் மிகவும் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்கின்ற போதே அல் குர்ஆனை அந்த மூல மொழியிலிருந்து நேரடியாகவும் முறையாகவும் மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டு ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மொழியிலிருந்து பிறிதொரு மொழியான சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்த பெருமை(?)யும் புகழும்(?) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தையே சார்ந்து நிற்கிறது. (அல்ஹம்துலில்லாஹ்)

மாத்திரமன்றி சகோ. பீஜேயின் மார்க்கத்தீர்ப்புகளிலும் மார்க்கரீதியான நிலைப்பாடுகளிலிருந்தும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதன் உலமாக்கள் யாருமே கடுகின் முனையளவும் கூட கருத்து வேறுபாடு கொள்ளமாட்டார்கள் என்ற ஏனைய ஜமாஅத்துகளின் குற்றச்சாட்டினையும் இந்த சிங்கள மொழிபெயர்ப்பு இருவேறு கருத்துக்களுக்கு இடமின்றி நிரூபணம் செய்கிறது.

அதற்கிணங்க சகோ. பீஜே அல் குர்ஆனுடைய தமிழ் மொழிபெயர்ப்பை முதன்முதலாக வெளியிட்டது தொடக்கம் இன்று வரை அம்மொழிபெயர்ப்பில் வருடாவருடம் ஒவ்வொரு புதிய பதிப்புகளிலும் மேற்கொண்டு வருகின்ற “திருத்தவேலை”களை அடியொற்றியே தற்போது சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள மொழியாக்கத்திலும் வருடந்தோறும் திருத்தங்கள் இடம்பெறும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். (இன்ஷா அழ்ழாஹ்)

பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்கள் யாராக இருப்பினும் அவர்கள் அறபுமொழியறிவில் சாதாரண மக்களிடமிருந்து மொழியாற்றலால் வேறுபட்டிருப்பார்கள்.

அதிலும் சமகாலத்தில் ஏகத்துவக்கொள்கையை போதிக்கின்ற அல் குர்ஆன், ஸுன்னா வழிமுறைகளை பிரச்சாரம் செய்கின்ற அறிஞர்களில் மிகவும் கணிசமானவர்கள் அறபு மொழியறிவில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத்தான் காணப்படுகின்றார்கள்.

சாதாண மக்கள் அல் குர்ஆனுடைய மொழிபெயர்ப்பிலிருந்து சட்டங்களை, போதனைகளை எடுப்பது போன்று மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்கள் எடுப்பதில்லை. மாறாக அவர்கள் அல் குர்ஆனுடைய மூலமொழியாகிய அறபு மொழியிலிருந்துதான் அழ்ழாஹ்வுடைய எந்தவொரு ஏவல் விலக்கல்களையும் மேற்கோள்காட்டுவது வழமையாகும்.

ஆனாலும் தாங்கள் மார்க்கத்தை திறம்படக்கற்றறிந்தவர்கள், இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரங்களான அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் ஏனைய உலமாக்களை விடவும் திறம்படக்கற்றுத்தேர்ந்தவர்கள், பாண்டித்தியம் பெற்றவர்கள் என்னும் தொனியில் ஏனையோர்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கின்ற ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் உலமாக்கள், தங்களுடைய அறபு மொழியறிவிலும் அல் குர்ஆனை சுயமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலிலும் நம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக இருந்திருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தேனும் அல் குர்ஆனை அதன் மூல மொழியான அறபு மொழியிலிருந்து சுயாதீனமாகவும் நேரடியாகவும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்க வேண்டும்.

இதற்காக பன்னிரண்டு வருடங்கள் அல்ல இருபத்தியைந்து வருடங்களை அவகாசமாக எடுத்திருந்தால்கூட அது குற்றமில்லை.

ஆனால் அவ்வாறு செய்யாமல் மிகப்பெறுமதியான பன்னிரண்டு வருட காலத்தை செலவளித்தவர்கள் புனித அல் குர்ஆனை சகோ. பீஜேயின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சிங்கள மொழிக்கு மொழி மாற்றம் செய்ததில் இருந்தே தங்களிடம் அல் குர்ஆனை அறபு மொழியிலிருந்து நேரடியாக புரிந்து கொள்கின்ற அளவுக்கு அறிவும் புலமையும் ஆற்றலும் இல்லையென்பதையும் தாங்களும் சாதாரண மக்களைப்போன்றே அல் குர்ஆனுடைய தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்துத்தான் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினுடைய தாயிக்களை பொறுத்தமட்டில் தங்களுடைய வேத நூலாகக்கணிக்கப்படுவதும் மதிக்கப்படுவதும் சகோ. பீஜே மொழிபெயர்த்த அல் குர்ஆன் தர்ஜுமாவே தவிர அறபு மூல மொழியிலுள்ள அல் குர்ஆன் அல்ல என்பது இதிலிருந்தும் புலனாகிறது.

இவ்வாறு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள இந்த சிங்கள மொழிபெயர்ப்பு தொடர்பிலான யதார்த்த நிலைகள் இவ்வாறிருந்தாலும்,

மேலும் சகோ. பீஜே மொழிபெயர்த்த அல் குர்ஆனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு பற்றி பீஜே அவர்களை கொள்கை ரீதியாக பிழை காணக்கூடிய உலமாக்கள் பலருடைய விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்துமே மலை போல் குவிந்தாலும்,

இன்று தமிழுலகில் பாவனையிலுள்ள அல் குர்ஆன் மொழிபெயர்ப்புகளின் வரிசையில் சகோ. பீஜே மொழிபெயர்த்த தமிழ் மொழிபெயர்ப்புதான் சிறப்பம்சங்களில் முன்னணியில் உள்ளதென்றால் அதில் மிகையேதுமில்லை.

அல் குர்ஆன் தொடர்பாக போதிய அறிவும் தெளிவும் இன்றி, தமிழ் பேசும் இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களிடமிருந்தே அந்நியப்பட்டு வெறும் சம்பிரதாய நூலாக மாத்திரமே கருதிவரப்பட்ட அவ்விறை வேதத்தை இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் அல் குர்ஆன் என்றால் என்ன, அதன் மகிமை, அதன் நோக்கம், தன்மை போன்றவைகளை பசுமரத்தாணியாக விதைத்த பெருமை சகோ. பீஜே அவர்களுடைய மொழிபெயர்ப்பையே இன்றளவும் சார்ந்து நிற்கிறது.

மாத்திரமன்றி இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழுலகில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களாக ஓங்கியொலித்த பல பாமரர்கள் தொடக்கம் மத குருமார்கள் வரையான சகல தரப்பினருக்கும் இஸ்லாமிய இறை வேதத்தில் பொதிந்துள்ள போதனைகள், வழிகாட்டல்கள், ஏவல், விலக்கல்களை தெளிவாக எடுத்துக்கூறிய வரலாற்று சிறப்புமிக்க மொழிபெயர்ப்பாகவும் சகோ. பீஜேயின் தமிழ் மொழிபெயர்ப்பே திகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கு சாட்சியாக தமிழகத்திலும் இலங்கையிலும் சகோ. பீஜேயின் அல் குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு மாற்றுமதத்தவர்கள் பலர் தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட வரலாறுகளையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

எனவே சகோ. பீஜேயின் அல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பானது அல் குர்ஆனைப்பற்றிய தவறான எண்ணமும் கருத்தும் கொண்டிருந்த முஸ்லிம், முஸ்லிம் அல்லாத தமிழ் பேசும் மக்களிடம் இன,மத பாகுபாடின்றி மிகவும் ஆழமாகச்சென்று செல்வாக்கு செலுத்தியன்பதில் சந்தேகமில்லை.

அதேபோன்று தற்போது இலங்கை நாட்டிலும் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பேரினவாத மதகுருமார்களாலும் இஸ்லாம் விரோத இயக்கங்களினாலும் இஸ்லாத்தை பற்றியும் அல் குர்ஆனுடைய போதனைகளை பற்றியும் தவறான கருத்துக்களும் முரண்பட்ட விளக்கங்களும் தொடர்ந்தேச்சையாக முன்வைக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம்.

அவ்வாறு அல் குர்ஆன் பற்றி பரப்பப்பட்டு வருகின்ற அவதூறுகள், குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்குமே தற்போது சகோ. பீஜேயின் தமிழ் மொழிபெயர்ப்பை அடியொற்றி . ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினால் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள இக்குர்ஆன் தர்ஜுமாவானது மிகவும் அறிவு பூர்வமான விளக்கங்களையும் தர்க்கரீதியான நியாயவாதங்களையும் வெளிப்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
(இன்ஷா அழ்ழாஹ்)

இது மனிதர்களுக்கு சத்தியத்தின் தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 03:138)

Published by

Leave a comment