முஸ்லிம் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிறைந்தும், ​மத்தியும் – மாகாணமும் ஒத்துப்போவது எப்போது?

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]திருகோணமலை: கல்வி அமைச்சில் வெற்றிடமிருக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாகாண மற்றும் தேசியபாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு விடுவித்தும், நியமித்தும் வருகின்றது, மத்திய – நிரல் கல்வி அமைச்சு.

கல்வி வலயங்களில் வெற்றிடமிருக்கையில், இலங்கை கல்வி நிர்வாகசேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாகாணப் பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு அல்லது தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு நியமிக்கப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ கூடாதெனத் தெரிவித்துள்ளது கிழக்கு மாகாண கல்வி அமைச்சு.

கிழக்கு மாகாணக் கல்வி வலயங்களில் 150க்கும் அதிகமான இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு வெற்றிடமிருக்கின்றது. அதனால், இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த எந்த ஒரு உத்தியோகத்தரையும் பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு நியமிக்கவோ, விடுவிக்கவோ முடியாது.
அதன்படி, தற்போது மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் ஜனவரி முதல் கல்வி வலயப் பதவிகளுக்கு இடமாற்றம் செய்து, அவ்வெற்றிடங்களுக்கு இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாத்திரம் நியமிக்குமாறு ஆளுநர், கிழக்குமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரைப் பணித்துள்ளார்.

அவ்வாறே, தேசிய பாடசாலைகளில் கடமையாற்றவும் எவரையும் விடுவிக்க வேண்டாம் எனவும், அவ்வாறானவர்களை மீள அழைக்குமாறும், இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை மாத்திரமே நியமிக்கவும், விடுவிக்கவும், நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் கண்டிப்பான பணிப்புரை விடுத்துத்துள்ளார்.

ஆனால், மத்திய நிரல் கல்வி அமைச்சிலோ நிலைமை வேறு விதமாகவுள்ளது. அங்குள்ள பல்வேறு பிரிவுகளில் முஸ்லிம் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிறைந்து காணப்படுகின்றது. அமைச்சின் செயலாளரோ, அமைச்சில் இருக்கும் ஒரு சிலகல்வி நிர்வாகசேவை முஸ்லிம் அதிகாரிகளையும் தேசியபாடசாலை அதிபர் பதவிகளுக்கு விடுவித்தும், நியமித்தும் வருகின்றார்.

கடந்தவாரம் கூட, கம்பளை சாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவிக்கு, கல்வி அமைச்சின் தேசியபாடசாலைப் பிரிவின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தரை விடுவித்து, நியமித்துள்ளார். இவர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சிங்கள மொழியிலும் கடமையாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசிலும், கிழக்குமாகாண அரசிலும் எதிரும் புதிருமான கட்சிகளின் கூட்டாட்சி இன்று நிலவுகின்றது ஆனால் மத்திய, மாகாணக் கல்வி அமைச்சுக்களில் மாத்திரம் எதிரும் புதிருமான அதிகார ஆட்சி இன்றும் தொடர்கின்றது. அரசியலில் அதிகார ஆட்சியில் கூட்டாட்சி நிலவுவது போல், கல்வியில் நிர்வாக ஆட்சியில் கூட்டாட்சி நிலவுவது எப்போது என்பதே சங்கத்தின் கேள்வியாகும். அதிகாரிகள், அதிபர்கள் நியமனத்தில் மத்திய மாகாணக் கல்வி அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எது சரி என்பது இன்னும் ஒரு கேள்வி?

Published by

Leave a comment