மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்

  • ரஸீன் ரஸ்மின்

mannar (2)மன்னார்: தேர்தல்களை அவசரமாக நடத்துங்கள் என்று கோரிக்கை விடுக்கின்ற அரசியல் தலைமைகள் தேர்தலுக்கு அடிப்படையான வாக்குரிமை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்பது பெரும்பாலான மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினைகள் என்பன தொடர்பில் ஒக்டோபர் மாதத்தில் நினைவுகூர்ந்தது நீங்கள் அறிந்த விடயமே. எனினும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்திவு மாவட்ட முஸ்லிம் மக்கள் காணிப்பிரச்சினை மற்றும் வீட்டுப்பிரச்சினை என்பவற்றுக்கு அப்பால் வாக்குரிமையும் ஒரு பிரதானமான பிரச்சினையாகவே இருக்கிறது.

இந்தப்பிரச்சினைகள் தொடர்பில் இன்றுவரைக்கும் எதுவிதமான காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது அந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்ட முறைப்பாட்டையடுத்து முறைப்பாடு செய்தவர்களுக்கான விசாரணைக்காக நவம்பர் ஐந்தாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரின் ஒப்பத்துடன்; கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்கள் குறித்த தினத்தில் தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கேட்கப்பட்ட ஆவணங்களுடன் விசாரணைக்காக சென்ற போது அங்கு விசாரணைக்கு இருந்த அதிகாரிகளினால் தாம் பல அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தங்களது விசனத்தைத் தெரிவித்தனர்.

இந்த விசாரணைக்காக சென்றவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முஸ்லிம்களே மீண்டும் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கு நீங்கள் எங்கு இருக்கீர்களோ அந்த மாவட்டங்களிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான முல்லைத்தீவு முஸ்லிம்கள் பெரும் விரக்த்தியுடன் வாக்கு உரிமைக்கான போராட்டத்தில் தோற்றுப் போய்விட்டோம் என்ற உணர்வுடன் திரும்பிச் சென்றனர்.

வுhக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளில் கூட இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாகவும் விசாரணைகளுக்காக சென்ற முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வாக்கு உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டவர்கள் தமது இருப்பிடங்கள் உள்ளிட்ட நாம் குறிப்பிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியமையினாலேயே அவர்களை பதிவு செய்ய முடியாமல் போனதாகவும், அவர்கள் ஜூன் மாதம் வாக்காளர்களைப் பதிவு செய்யும் மாதத்தில் எந்த மாவட்டத்தில் இருக்கிறார்களோ அந்த மாவட்டத்திலேயே நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் இதுவே ஒரு வாக்காளரை பதிவு செய்துகொள்வதற்கான நடைமுறையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தவிர, சரியான முறையிலேயே விசாரணைகளை நடத்தியதாகவும் தேர்தல் செயலகம் பக்கச்சார்பாக நடந்துகொள்வதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் நாம் ஒரு தெளிவைப்புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் குறித்த விசாரணையின் போது விசாரணைக்காக வரும் போது அல்லது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான தகுதிகள் இருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியான முறையில் இந்தப்பிரச்சினையை அணுக முடியும்.

ஏனையவர்களின் விடயத்தில் அரசியல்வாதிகள், சமூக மடட் அமைப்புகள் மூலமே அணுக வேண்டியுள்ளது.

mannar (2)
முஸ்லிம் மக்கள் காணிப்பிரச்சினை மற்றும் வீட்டுப்பிரச்சினை என்பவற்றுக்கு அப்பால் வாக்குரிமையும் ஒரு பிரதானமான பிரச்சினையாகவே இருக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறாமையும் இந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதற்கும் ஒரு காரணமாகும்.

இதனால்தான் காணி, வீடுகள் இல்லாமல் புத்தளம் போன்ற மாவட்டங்களில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகிறது. 1990ஆம் ஆண்டு இந்த மாவட்ட முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது 1300 இற்கும் அதிகமான குடும்பங்கள் காணப்பட்டன. 3000 இற்கும் அதிகமான வாக்குகளும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

1990 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 25 வருட காலப்பகுதியில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மக்களின் தொகை இரு மடங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 2100 வாக்குகளே இருப்பதாகவும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் பாராளுமன்றத் தேர்தலில் 2100ஆக குறைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு முஸ்லிம்களின் வாக்குகள் திட்டமிட்டே குறைக்கப்பட்டுள்ளதாக பலராலும் குற்றம் சுமத்தப்பட்டாலும் சட்டப்படியே வாக்குகள் பதிவு செய்திருக்கிறோம் என அதிகாரிகள் கூறி நியாயப்படுத்துகிறார்கள். வாக்காளர் பதிவுக்கான சட்டத்தை பார்க்கும் போது அதிகாரிகளின் நியாயப்படுத்தலையும் மறுக்க முடியாததொன்றாகவே உள்ளது.

ஆக மொத்தத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி, வீடு மற்றும் வாக்குரிமைப்பிரச்சினை முடிவுறும் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இவ்வாறு தொடர்ச்சியான பிரச்சினைகளினால் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவில் இருப்பதற்கு காணியோ, வீடோ இல்லாத நிலையிலும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் தங்களை முல்லைத்தீவிலேயே நிரந்தரமாகப் வதிவாளர்களாக பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர அவர்கள் வாழும் மாவட்டங்களில்; அவர்கள் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளவில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

மீள்குடியேற்ற விடயத்தில் தாமதத்தை ஏற்படுத்தினாலும் வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே முல்லைத்தீவு முஸ்லிம்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை அந்த மாவட்ட முஸ்லிம்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும்.

இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்து துரிதமாகச் செயற்படவேண்டும் என்பதையே இந்த முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் நடக்கும் போது ஒன்றுகூடுகின்ற முஸ்லிம் எம்.பிக்கள் அந்த சம்பவம் நடந்து முடிந்ததும் அல்லது அதுபற்றி பேசி ஓய்ந்ததும் மீண்டும் பழைய நிலைமைக்கே ஒவ்வொருவரும் திரும்பி சென்று விடுகின்றனர்.

தேர்தல் காலங்களில் மட்டும் இந்த முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீது அதிக பாசம் கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏன் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்பதே இந்த முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிறது.

எனவே, முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வே வாக்குரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வடிவமாக உள்ளது என்பது உண்மையான விடயமாக இருக்கிறது.

இதற்கிடையில் முஸ்லிம்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யும் வரை விஷேட அமைச்சரவை அனுமதியுடன் அல்லது தேர்தல்கள் ஆணையாளருடன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்குரிமையைப் பெறுவதற்கு தகுதிபெற்ற அனைவரையும்; வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான ஒரு முயற்சியை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஆகியோருடன் முஸ்லிம் எம்.பிக்களும் முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் சகல விடயங்களிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ்த்தரப்பினர் ஒருசிலர் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் உதட்டளவில் மாத்திரம் தமிழ்-முஸ்லிம் உரவு பற்றி பேசுகிறார்களெ தவிர செயற்பாடுகளில் தெரிவதாகத் தெரியவில்லை.

இவ்வாறு பாதிகக்ப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Published by

Leave a comment